0
 
சென்னை நகரில் மன நிலை பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பலர் திரிகின்றனர். அவர்களை பெரும்பாலோர் வேடிக்கை பார்ப்பர்; சிலர் பரிதாபப்படுவர்; சிலர் மட்டுமே உணவு வாங்கி தந்து செல்வர்.ஆனால், அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால், இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் ஆஜராகி அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மீட்டு ஆதரவற்றோர் முகாமில் சேர்ப்பதை கடமையாக கொண்டுள்ளார் சமூக சேவகர் வெங்கடேஷ், 48.

திருவான்மியூரை சேர்ந்த இவர், பணிநேரம் தவிர மற்ற நேரத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

கடந்த, 1995ம் ஆண்டு, நான் கூரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். வேலை தொடர்பாக பழைய மகாபலிபுரம், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் நிர்வாண நிலையில் சாலையில் சுற்றி கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கானோர் பார்த்தபடி சென்றனர். அந்த பெண்ணின் நிலைமை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது.

உடனடியாக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று பழைய புடவை ஒன்று வாங்கி, அந்த பெண்மணிக்கு போர்த்திவிட்டு, அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆதரவற்றோர் இல்லத்தை தேடி ஒப்படைத்தேன்.அன்று எனக்கு ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த செயல் எனக்கு மிகவும் பிடித்து போனது. அன்று முதல் அதை ஒரு கடமையாக செய்து வருகிறேன்.

இந்த பணியில் ஒத்துழைப்பு இருக்கிறதா? நேரம் காலம் பார்ப்பீர்களா?

தற்போது, சென்னையில் ஆதவற்றோரை பார்த்தால் உடனடியாக எனக்கு தொடர்பு கொண்டுவிடுகின்றனர். போலீசாரும் அழைத்து தகவல் கொடுக்கின்றனர்.கடந்த 2007ம் ஆண்டு, அரசு பணி கிடைத்த பின்னும், இந்த கடமையை விட்டு விடவில்லை. பணிநேரம் தவிர மாலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை இந்த கடமையை செய்து வருகிறேன்.

இதற்கு மன அளவில் எப்படி தயாரானீர்கள்?

பல இடங்களில் பாதிக்கப்பட்டோர், பார்க்கவே அருவருப்பாக, நெருங்கவே முடியாத நிலையில் இருப்பர். அவர்களிடம் இருந்து கடும் துர்நாற்றம் வீசும்.துவக்கத்தில் சங்கடமாக தான் இருந்தது. பிறகு அதுவே பழகி விட்டது. அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று, நம்மை போல மனிதர்களாக உருமாறியதை பார்க்கும் போது மிகவும் பெருமைப்பட்டு கொள்வேன்.அவ்வாறு மாறிய ஒவ்வொருவரையும் என் கடமைக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.

மிக சிரமமான இந்த பணியில், பொருளாதார ரீதியில் எப்படி சமாளிக்கிறீர்கள்?

நான் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியவன். ஆனால், எனக்கு உதவி செய்வதற்காக சென்னை நகரின் பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், 20க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளனர்.சில தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போன் செய்தால் உடனடியாக வந்து விடுவர்.

பலர் பணம் வாங்கமாட்டார்கள். ஒரு சிலர் கொடுப்பதை வாங்கி கொள்வர். இந்த பணிக்கு என் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பல நேரங்களில் என் மகள், என்னுடன் வந்து பாதிக்கப்பட்டோரை மீட்டுள்ளார். இதில், என் அடுத்த வாரிசாக அவர் உருவாவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் தான்.

கருத்துரையிடுக Disqus

 
Top