1. சட்டப்பூர்வ நிதி கட்டமைப்புக்குள் பணத்தைக் கொண்டு வருதல்
கருப்பு பணம் என்பது வங்கிகளில் இல்லாமல் ரொக்கமாக கைகளிலேயே இருக்கும். இந்தக் கருப்பு பணத்தை சட்டப்பூர்வ நிதி அமைப்புக்குள் கொண்டு வருவதே மோசடி செய்பவர்களின் முதல் படி. தெரிந்தோ தெரியாமலோ வங்கிகள் இதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. கோப்ரா போஸ்ட் வெளிப்படுத்தியதைப் போல வங்கிகளே இந்தக் கருப்பு பணத்தை எப்படி நிதி அமைப்புக்குள் கொண்டு வருவது என ஆலோசனை கூறுகின்றன.
மேலும், கருப்பு பணத்தை மொத்தமாக ஒரே வங்கிக் கணக்கில் போட்டால் பிரச்சனை வரும் என அறிந்து அவற்றைப் பிரித்து சிறு சிறு தொகையாக பல வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்து விடுவது. இப்படி செய்வதால் அது சிறு தொகைக்கான பணப் பரிவர்த்தனை என்பதனால், அரசின் கண்களுக்குப் புலப்படாமல், நம் நிதி அமைப்புக்குள் சட்டப் பூர்வமாக வந்துவிடுகிறது. இவ்வாறு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதை ப்ளேஸ்மென்ட் என்பர்.
2. கருப்புப் பணம் எப்படி வந்தது என்பதை மறைப்பது
கருப்பு பணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு பொய் சொல்வது என்பது கடினமான ஒன்று. ஆகையால், இதனை எப்படியாவது மறைக்க வேண்டும். பணத்தை கண்காணிக்க முடியாதவாறு அதை அங்கும் இங்குமாக இடம் மாற்றி குழப்புவது தான் மோசடி செய்பவர்களின் அடுத்த இலக்கு. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கணக்குகள் மூலம் நாணயத்தை மாற்றி பிறகு இன்சூரன்ஸ் அல்லது தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து, பணம் வந்த வழியினை குழப்புவது. பணம் வந்த வழியினை யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் மிகவும் சிக்கலாக செய்வது தான் இதன் முதன்மையான குறிக்கோள். இதனை அடுக்குதல் அல்லது லேயரிங்க் என்பர்.
3. மோசடி செய்த பணத்தை சட்டப்பூர்வமாக வெள்ளையாக்குவது
பணத்தை அங்கே போட்டு, இங்கே போட்டு தங்கம் வாங்கி, கரன்சி மாற்றி வந்த பணம் சட்டப்பூர்வமான நிதி அமைப்பிலிருந்து வெள்ளையாக கிடைக்க வேண்டும் என்பது தான் மோசடிக்காரர்களின் அடுத்த இலக்கு. இப்படி மோசடி செய்த பணத்தை நம் ஊர் நிறுவனங்களில் முதலீடு செய்வதாகச் சொல்லி உள்ளே நுழைவது தான் தந்திரத்தின் உச்சம். அப்படி முதலீடு செய்த நிறுவனம் பண மோசடி செய்பவரின் சொந்த நிறுவனமாகவோ அல்லது வேறு ஒருவரின் நிறுவனமாகவோ இருக்கலாம். இப்படி சுழற்றி அடிக்கப்பட்ட கருப்பு பணம் இப்போது சட்டப்பூர்வமான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்ட சுத்தமான வெள்ளைப் பணம். இனி எவ்வித பயமும் இன்றி அதை எடுத்து செலவு செய்யலாம்.
காசு இல்லாதவனுக்கு ஒரே கவலை....சம்பாதிக்கணும்...
காசு அதிகமா இருக்கவனுக்கு ஆயிரம் கவலை !
உலகம் எப்படியெல்லாம் இருக்கு பாருங்க...!