சோலே பாலக் மசாலா என்னும் கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா, பஞ்சாபில் மிகவும் பிரபலமானது. மேலும் இது மிகவும் சுவையானது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ரெசிபிக்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த மசாலாவானது மிகவும் காரமாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும்.

குறிப்பாக இந்த மசாலா சாதம் மற்றும் சப்பாத்திக்கு சரியானதாக இருக்கும். இப்போது அந்த கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.






தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 250 கிராம்
பசலைக் கீரை - 1 கட்டு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பட்டை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொண்டைக்கடலையை நீரில் 5 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு கீரை சுத்தம் செய்து, தனியாக நீரில் அலசி வைக்க வேண்டும்.

பின் மிக்ஸியில் கீரை மற்றும் பச்சை மிளகாய் போட்டு, அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைக்க வேண்டும்.

பின் அரைத்த பசலைக் கீரையை சேர்த்த, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையில் உள்ள நீரை வடித்துவிட்டு, இத்துடன் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, ஏலக்காய் பொடியைத் தூவி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா ரெடி!!!
 
Top