மாக்கு என்றொரு நாட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது, சீன எல்லையை ஒட்டி இருக்கும் சிறிய நாடு. இங்கு சீனர்களின் கலாசாரமும், மொழி பாதிப்பும், அதிகம். உண்மையில், இது மிக நீண்ட காலம் போர்த்துக்கீசிய பிடியில் இருந்த நாடு. அதன் காரணமாக, ஐரோப்பிய - சீன மக்களின் கலாசாரமும் இங்குள்ளது.

இந்த குட்டி நாட்டிற்கு, 1700 ஆண்டு கால வரலாறு உண்டு. அதில், முக்கிய இடம் பிடிப்பது அடகுகடை. இங்கு மக்கள், பெரும்பாலும் வட்டிக்கடைகள் மூலம் கொடுக்கல், வாங்குதல் பரிவர்த்தனைகளையே செய்து கொண்டிருந்தனர். 1900களில், இந்த தனியார் வட்டிக்கடைகளின், வட்டி வசூலிப்பு அதிகமானபோது, அரசே வட்டிக் கடையை துவக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர்.

விளைவு, 1917ல் அன்றைய அரசு, டேக் செங் ஆன் என்ற பெயரில் வட்டிக்கடையை துவக்கியது. குறைந்த வட்டியால், மக்களின் அமோக ஆதரவையும் பெற்றது. மக்களின் பணம், நகைகள், அடகு பொருட்கள் களவு போகாமல் இருக்க, பிற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்க, மிக கனமான சுவர்களால் கட்டப்பட்டது, இந்த அடகு கடை கட்டடங்கள்.
இருந்தாலும், நூற்றாண்டுகளின் இறுதி காலகட்டத்தில், இங்கு ஏராளமான சூதாட்ட கிளப்புகள் வர ஆரம்பித்தன. கூடவே, வங்கிகளும் வரத் துவங்கின. இதனால், தனியார் வட்டிக்கடைகளும், அரசு வட்டிக்கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில், தாக்கு பிடிக்க முடியாமல் அரசு வட்டிக் கடைகளும் மூடப்பட்டன.

ஆனால், 2003ல்; மாக்கு நாட்டிற்கும், அடகு கடைகளுக்கும் உள்ள பந்தத்தை வெளியுலகம் தெரிந்து கொள்ள ஏதுவாய், அரசு வட்டிக் கடை, அருங்காட்சியகமாக திறக்கப்பட்டது.

இதனுள், பத்து நிமிடம் சுற்றி வந்தால், மாக்கு அடகு கடைகளின் சரித்திரத்தையே முழுமையாக புரிந்து கொண்டு விடலாம். மேலும், மாக்கு மக்களின் கலாசாரம் மற்றும் பண்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளவும், இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
Top