கல்லூரியில் படிக்கும் போது, இவரது கவனம், புகைப்படக்கலையின் மீது திரும்ப, கோவையில் புகைப்பட பள்ளி நடத்திவரும் லோகநாதனிடம் அந்தக் கலையை கற்றார். புகைப்படக்கலையை அடிப்படையாகக் கொண்டு, ஏதாவது வித்தியாசமாக செய்யலாமே என, எண்ணியபோதுதான் லைட் பெயின்டிங் எனப்படும், ஒளி ஓவியம் வகையிலான புகைப்படம் எடுக்கலாம் என, முடிவெடுத்தார்.
ஆரம்பத்தில், இந்த ஒளி ஓவியத்தின் அடிப்படையில் படம் எடுக்கும் போது, நிறைய சறுக்கல்கள், தோல்விகள் இருந்தாலும், விடாமுயற்சி கொண்டு, தற்போது சாதித்துள்ளார். திறந்தவெளி இருட்டில், இவர் கற்பனை செய்து வைத்திருக்கும் விஷயத்தை, வித்தியாசமான மின் விளக்குகளை சுழல வைத்து, ஆடவைத்து, உருவங்களின் மீது ஓட வைத்து படம் எடுக்கிறார். ஒரு படம் எடுக்க, மூன்று மணி நேரமுமாகலாம், மூன்று நாட்களும் கூட ஆகலாம்.
உலகம் முழுவதிலும், இந்த ஒளி ஓவியத்தை மட்டுமே எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களில் சிறந்தவர்கள் என்று, 73 பேரை பட்டியலிட்டு, அவர்களது புகைப்படங்களை மும்பையில் கண்காட்சியாக வைத்திருந்தனர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற ஒரே இந்தியரின் படம், ஜெஸ்வினுடையது மட்டுமே.
இவரது புகைப்படங்களை பார்த்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், நேரில் வந்து, உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பார்வையாளர்களுக்கு, "டெமோ' கொடுக்கும்படி அழைத்தனர்.
இது பற்றி அவர் கூறுகிறார்: ஒளி ஓவியம் என்று சொல்லக்கூடிய புகைப்படங்களை பற்றி தற்செயலாக இணையதளத்தில் படித்ததும் பிடித்துப் போனது. இது போன்ற புகைப்படங்களை எடுப்பதில், மனம் சந்தோஷப்படுகிறது. யாராலும் செய்ய முடியாததை செய்கிறேன் எனும்போது, மனசு பெருமிதப் படுகிறது. இதை முழுக்க முழுக்க, என் மனத்திருப்திக்காக மட்டுமே எடுக்கிறேன்.
குடும்ப தொழிலுக்கு இடையூறு இல்லாமல், இதை என் சந்தோஷத்திற்காக மட்டுமே எடுத்து வருகிறேன். இதுவரை, 80 படங்களை எடுத்துள்ளேன். இது நூறு படமானதும், புகைப்பட கண்காட்சியாக வைக்கும் எண்ணம் உள்ளது. மேலும், இந்த கலையை மற்றவர்களுக்கு கற்றுத்தரும் எண்ணமும் உள்ளது என்று, கூறிமுடித்த ஜெஸ்வினுடன் பேசுவதற்கான தொடர்பு எண்: 99442 52470.