ஒருவர் தன்னுடைய 19 வயது மகளை என் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார் .என்னுடைய மகளின் முன் ஆறு பற்களை எடுத்து விட்டு இடைவெளி இல்லாமல் பல் கட்டிவிடுங்கள் என்றார்.
நான் அவர் மகளை பரிசோதித்து பார்த்தேன் எல்லா பற்களும் நன்றாக வலுவாக இருந்தது,எல்லா பற்களுக்கும் இடையில் இடைவெளி இருந்தது அது ஒன்று தான் குறை.ஏன் சார் பல்லு நல்லா தானே இருக்கு எதுக்கு பிடுங்க சொல்றீங்கன்னு கேட்டேன்.
இல்லை சார் ஏற்கனவே 5 பேர் என் பெண்ணை பென் பார்க்க வந்தாங்க பார்த்துட்டு போன எல்லாருமே பொண்ணுக்கு சந்து பல்லா இருக்கு,’சந்து பல்லு இருந்தா உறவுல விரிசல் விழும்’ அதுனால உங்க பொண்ணு வேணாம்னு சொல்றாங்க சார் அதனால தான் பல்லை பிடுங்கிட்டு சந்து இல்லாம் பல் கட்டு விடுங்க அப்படின்னார்.
நல்ல பல்லை எல்லாம் பிடுங்க கூடாது ,இதை பிடுங்காமலே கிளிப் போட்டு நான் சரி செய்து குடுக்கிறேன் ஆனா ஒரு வருடம் ஆகும் பரவாயில்லையா என்றேன்.பரவாயில்லை சார் என் பொண்ணு பல்லு சரி ஆகி மாப்பிள்ளை கிடைச்சா முதல் பத்திரிக்கை உங்களுக்கு தான் வைப்பேன் என்றார்.
பிறகு அந்து பெண்ணுக்கு கிளிப் பொருத்தி சிகிச்சை ஆரம்பித்தோம்.ஒரு வருடம் முடிவில் அந்த பெண்ணின் பற்கள் நெருங்கி இடைவெளி இல்லாமல் அழகாக மாற்றி காட்டினோம்.
அந்த பெண்ணின் அப்பா அடுத்த மாதமே வந்தார்.சார் என் பெண்ணுக்கு மாப்பிள்ளை முடிவாகி விட்டது சார்.ஏற்கனவே பார்த்த இடம் தான் ஆனால் முன்னர் 5 பவுன் அதிகமாக கேட்டனர் இப்போது என் பொண்ணு அழகா இருக்கிறதை பார்த்துட்டு 5 பவுன் அவங்களாகவே குறைச்சுகிட்டாங்க என்றார்.
அவர் சொன்ன மாதிரியே பையில் இருந்து தாம்புலத்தட்டில் பூ பழம் எல்லாம் வைத்து முதல் பத்திரிக்கையை எனக்கு வைத்தார்.என் தொழில் மேல் எனக்கும் கொஞ்சம் பெருமையாக தான் இருந்தது.
நீங்கள் மருத்துவரிடம் செல்லும் போது நோய்க்கான சிகிச்சையை நீங்களாகவே முடிவு செய்து கொண்டு போகாதீர்கள்.உங்கள் பிரச்சனையை மட்டும் சொல்லுங்கள் ,அதற்கு என்ன தீர்வு என்பதை மருத்துவர் சொல்லுவார்.