மீசையை, வீரத்தின் அடையாளமாக கூறுவது உண்டு. ஆனால், இந்தி சினிமாக்களில், தாடி, மீசை இல்லாத மொழு, மொழு முக ஹீரோக்கள் வந்தபின், மீசைக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டது. ஒரு சில போலீஸ்காரர்கள் தான் இப்போது, பெரிய அளவிலான மீசை வைத்திருக்கின்றனர். அதுவும், குற்றவாளிகளை பயமுறுத்துவதற்காக.
ஆனால், ராஜஸ்தானை சேர்ந்த, 47 வயதான ராம்சிங் என்பவர், மீசையை, தன் உயிரை விட மேலாக கருதி வளர்த்து வருகிறார். அவரது மீசையின் நீளம் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட 14 அடி.

1970ம் ஆண்டிலிருந்து, இந்த மீசையை, அவர் வளர்த்து வருகிறார். இந்த, 43 ஆண்டுகளில், மீசையை, இவர், "ஷேவ்' செய்ததும் இல்லை; "ட்ரிம்' செய்ததும் இல்லை.

இவரது மீசைக்கு, "உலகின் மிகப் பெரிய மீசை' என்ற, கின்னஸ் அங்கீகாரமும் சமீபத்தில் கிடைத்திருக்கிறது. ராம்சிங் கூறுகையில்,"துவக்கத்தில், மீசையை பார்த்து, என் மனைவி ஆத்திரம் அடைந்தாள். தினமும், வீட்டில் சண்டை நடக்கும். தற்போது, இந்த மீசை, உலக அளவில் பிரபலமாகி விட்டதால், இப்போதெல்லாம் என் மனைவிக்கு, என்னை விட என் மீசையைத் தான் ரொம்ப பிடிக்கிறது...' என்கிறார்.
 
Top