தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.

முதல் மாதம்

கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.

இரண்டாம் மாதம் 

 
அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.

மூன்றாம் மாதம் 

 
தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.

நான்காம் மாதம் 

 
நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.

5ம் மாதம் 

 
ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.

6ம் மாதம்

வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.

7ம் மாதம்

ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.

8ம் மாதம்

பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.

9ம் மாதம்

ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.

10ம் மாதம்

அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.

12ம் மாதம்

ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.

15வது மாதம் 


தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.

இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.
 
Top