இதற்கு நேர்மாறாக தமிழகத்தில் கட்டுமானத்துறையின் வேகம் உள்ளது. ஆண்டுக்காண்டு கட்டிடங்களின் எண்ணிக்கையும், தேவையும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால் மணல் பற்றாக்குறை அதிகரிக்கும் அளவிற்கு நேர் எதிராக மணல் தேவையும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வு மாற்று மணல்தான். மாற்று மணலை பெற பல வாய்ப்புகள் உள்ளன. செயற்கை மணல்: கருங்கற்களை உடைத்து இயந்திரங்கள் மூலம் செயற்கை மணல் உருவாக்கப்படுகிறது. தகுந்த அளவுகளில் தரமாக தயாரிக்கப்படுவதால், கலவை மற்றும் கான்கிரீட்டின் வலிமையும் தரமும் கூடுகிறது. பூச்சு வேலையை தவிர மற்ற கட்டுமான பணிகளுக்கு இந்த மணலை பயன்படுத்த முடியும். திருவனந்தபுரம், தமிழகத்தில் கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செயற்கை மணல் வெளிச்சந்தையில் கிடைக்கிறது. செயற் கை மணல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொழில் மான்யம், கடன் வசதி உண்டு. கிரஷர் தூசு: ஜல்லி தயாரிக்கும் கிரஷர் உரிமையாளர் கூறுகையில், ‘ஒரு டன் ஜல்லி தயாரிக்கும்போது 10 சதவீதம் தூசு கிடைக்கும். பல்வேறு விதமாக 10 டன் ஜல்லி தயாரிக்கும்போது, ஒரு லாரியில் நிரப்பும் அளவிற்கு 3 யூனிட் கிரஷர் தூசு கிடைக்கிறது. ஒரு யூனிட் தற்போது ரூபாய் ஆயிரத்திலிருந்து ஆயிரத்து 500வரை கொண்டு செல்லப்படும் தூரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது.
தற்போது கிரஷர் தூசியின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை, பூச்சுக்கும் நன்றாக இருப்பதாக கட்டுமான தொழிலாளர்களே தெரிவிக்கின்றனர்‘ என்றார். 3 யூனிட் மணல் விலை ஒரு மாதத்திற்கு முன்புவரை ரூ.12 ஆயிரம்வரை விற்கப்பட்டது. காவிரியில் வெள்ளப்பெருக்கால் மணல் அள்ளுவது தடைபட்டுள்ளதால் மணல் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. ஒரு யூனிட் ரூ.624க்கு விற்க வேண்டும் என்பதே அரசு உத்தரவு. தற்போது 3 யூனிட் மணல் ரூ.18 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. கிரஷர் தூசு விலையுடன் ஒரு லோடுக்கு 3 மடங்கு அதிகம். எம் சாண்ட் என அழைக்கப்படும் இந்த தூசு உலகம் முழுவதிலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் 40 ஆண்டுகளாகவும், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் இந்த ஜல்லி மணல் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம், களியல் பகுதியில் எம் சேன்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.
மணல் மாவு: மலைகள், இதையொட்டியுள்ள கல் குவியல்களை மணலாக்கலாம். இந்த மணல் மாவு கட்டுமான பணிகளுக்கு சிறந்தது என்று கட்டுமான வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். மணலை காட்டிலும் இது வலுவாக இருக்கும். கல்லுடைக்கும் தொழிற்சாலைகளில் இத்தூள் பெருமளவில் கிடைக்கிறது. மேலும் ஆற்று மணலின் பாதி விலை தான் என்பதால் கட்டுமான செலவும் குறைவு. இதன் பயன்பாடு தற்போதுதான் மெல்ல அதிகரித்து வருவதாக பொறியாளர் முத்துகிருஷ்ணன் கூறுகிறார்.அணைகளில் 21 கோடி யூனிட் மணல்: தமிழகத்தில் மேட்டூர், கல்லணை, பவானிசாகர் உள்பட 60க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகளில் ஆற்று நீரில் அடித்து வரப்படும் மணல் அங்கு தேங்கி மணல் படுகையாக உருவாகிறது. பல அணைகளில் தண்ணீரை விட கூடுதலாக மணல் உள்ளது. 21 கோடி யூனிட் மணல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை அள்ள நடவடிக்கை எடுத்தால் மணல் தேவை பூர்த்தியாவதுடன், ஆற்றின் நீர் தேக்க அளவும் அதிகரிக்கும். தமிழகத்தில் சுமார் 30ஆயிரம் ஏரிகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 15 கோடி யூனிட் மண் உள்ளது. இதை கட்டுமானத்திற்கான அடிதளம் போன்றவற்றில் பயன்படுத்தலாம். இதன் மூலம் 10% மணல் தேவையை குறைக்கலாம். இப்படி பல வழிகளில் கிடைக்கும் மாற்று மணலை பயன்படுத்த கட்டுமானத்துறையினர் முன் வந்தால் மணல் தேவையை இயற்கையை அழிக்காமலேயே நிறைவேற்றிக்கொள்ள முடியும். இது சாத்தியமா என்பது கட்டுமானத்துறையினர் கையில்தான் உள்ளது.
குடிநீர் ஆதாரம் கடும் பாதிப்பு
ஆற்றிலிருந்து நேரடியாகவும், அணை, தடுப்பணை, கண்மாய்கள், ஏரிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு குடிநீரை கொண்டு வந்து தேக்கியும், ஆற்றுப்படுகைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைத்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி சுமார் 30 அடிவரை இயந்திரங்கள் உதவியோடு மணல் அள்ளப்படுகிறது. இதனால் நீரூற்று முழுமையாக அழிந்துவிட்டது. ஆற்றின் அகலம் 3ல் ஒரு பங்கு சுருங்கிவிட்டதால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளம் நோக்கி சென்றுவிட்டது. பல ஆறுகளை நம்பி போடப்பட்ட குடிநீர் திட்டங்கள் செயலற்ற நிலையில் உள்ளன. விவசாயத்திற்கு மட்டுமின்றி காவிரி ஆற்றை நம்பியே 20 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் உள்ளது.