குண்டு வெடிப்பு:
மணிப்பூரைச் சேர்ந்தவர், கொன்தொஜம் மைக்கேல், 24. இம்பால் கலைக் கல்லூரியில், நுண்கலையில் பட்டம் பெற்ற இவர், தன் முழு கவனத்தையும் ஓவியத்தில் செலுத்தினார். 2007ம் ஆண்டு, உலக அமைதியை மையப்படுத்தி, நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்கேற்று வீடு திரும்பிய மைக்கேல், பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில், தன் இரு கால்களையும் இழந்தார். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்ததால், சுய நினைவை இழந்து, "கோமா' நிலையில் இருந்த மைக்கேல், பல நாள் சிகிச்சைக்குப் பின், வீடு திரும்பினார். அதன் பின், தன்னம்பிக்கையை மட்டுமே துணையாக கொண்டு, சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் பங்கேற்று, தங்கப் பதக்கங்களை வென்று வருகிறார். கால்களை இழந்த பின், 2009ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச ஓவியப் போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றார்.
சர்வதேச விருது:
மாநில அரசு, 2011-2012ம் ஆண்டின் சிறந்த கலைஞருக்கான விருதை, மைக்கேலுக்கு வழங்கியது. 17க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருகளை பெற்ற மைக்கேல், சாதிக்கத் துடிக்கும், இன்றைய இளைஞர்களுக்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார். எனினும், இவரது திறமையை பாராட்டி, மத்திய அரசோ, மாநில அரசோ எவ்வித உதவித் தொகையும் இதுவரை வழங்கவில்லை. அவருக்கு அரசு வேலையும் வழங்க முன்வரவில்லை. ""இதுகுறித்து நான் வருந்தவில்லை; என்னை கவனித்துக் கொள்ள, என் திறமையே போதும்,'' என்கிறார், மைக்கேல்.