இவர்கள் பல நூற்றாண்டுக்கு முன்னர் சாலிகுளத்தில் குடியேறினர். இவர்களில் பால்ராஜா மகன் பொம்மு அழகிய வீரபாண்டியபுரத்தை ஆண்ட ஜகவீர பாண்டியனின் தளபதி ஆனார். ஜகவீரபாண்டியனின் மறைவுக்கு பின் ஆட்சிக்கட்டிலில் அமரும் வாய்ப்பு வந்தது. அவரை மக்கள் ‘கெட்டி பொம்மு‘ என அழைத்தனர். தனது உறவினர்களை இவர் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து அரசோச்சும் வகையில் சிற்றரசராக்கினார். அவர்களில் ஒருவர் தான் எட்டயபுரம் பாளையக்காரரும்.
கெட்டிபொம்முவின் மரபில் 7வது மன்னனே வீரபாண்டிய கட்டபொம்மன். 1760ல் ஜெகவீர கட்டபொம்மனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் பிறந்தவர். கோர்வையாக பேச முடியாத குமாரசாமியும் துரைசிங்கமும் அவரது தம்பிமார். பாளையத்து எல்லையை நிர்ணயித்த ஆங்கிலேயர்கள் அருங்குளம், சுப்பலாபுரத்தை எட்டயபுரத்துக்கு வழங்கியதாலும், ஆற்காடு நவாப்பிடம் ஒப்பந்தம் செய்து பாஞ்சாலங்குறிச்சியில் ஆதிக்கம் செலுத்தியதாலும் கட்டப்பொம்மன் ஆத்திரம் அடைந்தார். கம்பளத்தவர், மறவர், கவுண்டர், தாழ்த்தப்பட்டோர்
பதினாயிரம் பேர் வேல், வாள், ஈட்டி, கம்பு, கவண், நாட்டு வெடிகுண்டுகளுடன் போர்க்கோலம் பூண்டனர். கட்டப்பொம்மன் 9 ஆண்டு, 8 மாதம் 14 நாட்கள் ஆட்சி புரிந்தார்.
4.9.1799ல் ஊமைத்துரை பாதிப்படையுடன் திருச்செந்தூர் போனபோது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. இப்போரில் லெப்டினன்ட் காலினை ஈட்டியால் கூறுபோட்டு வெள்ளையத்தேவன் வீரத்தை நிலைநாட்டினான். ஆனால், அவனது மாமன், கலெக்டர் லூஷிங்டன் கொடுத்த ரூ.5,000க்கு ஆசைப்பட்டு காட்டிக்கொடுத்தார்.
ஆற்றூரில் தானாபதி பிள்ளை குடும்பத்தை சிறை பிடித்து சென்னைக்கு கொண்டு சென்றனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பீரங்கிகளால் சேதப்படுத்தப்பட கட்டப்பொம்மன் தப்பி ஓடினார். தனது தளபதி முத்துவைர அம்பலக்காரன் மூலம் அவரை விருந்துக்கு அழைத்து ஆங்கிலேயரிடம் பிடித்துக் கொடுத்தார் புதுக்கோட்டை தொண்டைமான். கட்டப்பொம்மனோடு ஊமைத்துரை, குமாரசாமி முத்தையா, வீரண்ண மணியக்காரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். கட்டப்பொம்மன் 16.10.1799ல் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
இதன் பின்பு தென்தமிழகத்தில் 42 கோட்டைகளை ஆங்கிலேயர் தூள்தூளாக்கினர். பாளையங்கோட்டையில் சிறைவைக்கப்பட்ட ஊமைத்துரை 1801ல் மீட்கப்பட்டார். கண்டிக்கு போவதாக கடிதம் மூலம் ஆங்கிலேயரை குழப்பிவிட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தார். அங்கு தொழிலாளிகளோடு தொழிலாளியாக நின்று 6 நாட்களில் கோட்டையை சீரமைத்தார். மீண்டும் 2000 பேருடன் போரில் ஆங்கிலேயரை எதிர்கொண்டார். எனினும் மருது சகோதரர்களுடன் கைது செய்யப்பட்டு 1801 ஜூன் 10ல் பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சியை வரைபடத்திலிருந்தே ஆங்கிலேயர்கள் நீக்கிவிட்டனர். ஆனால், தமிழர்கள் நெஞ்சில் அந்த இடம் அஸ்திவாரமிட்டு அழுத்தமாக பதிந்துவிட்டது. ‘அமர் பொருந்திய வீரபாண்டிய கட்டபொம்மனென்னும் மாவீரன் பண்புடன் அமர்ந்து ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் உள்ளது‘ என தனது ஊரை வஉசி அடையாளம் காட்டுகிறார்.
கரும்பு சக்கை, களிமண், சுண்ணாம்பு போன்றவற்றை பதநீருடன் குழைத்து கட்டப்பட்டது கட்டப்பொம்மன் கோட்டை. தற்போது 6 ஏக்கர் பரப்பில் புதிய கோட்டை கட்டப்பட்டுள்ளது. பழைய கோட்டை 30 ஏக்கரில் இருந்ததாக கூறுகின்றனர். கோட்டை முற்றுகையின்போது பீரங்கிப்படையுடன் வந்த ஆங்கிலேய ராணுவ அதிகாரி அக்னியூ ‘இந்த கோட்டையை தகர்க்கவா பீரங்கிப்படை?‘ என்று ஏளனம் செய்தார். ஊமைத்துரையுடன் போரிட்ட ‘பேக்கார்ட்‘ என்ற அதிகாரி போர் கைதியாக மாட்டிக்கொண்டார். அவர் மனைவி உயிர்பிச்சை கேட்க அவரை ஊமைத்துரை விடுவித்தார்.
அதே போல் ஜேம்ஸ் வெல்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி எழுதிய ‘போர் நினைவுகள்‘ என்ற நூலில் அனுதாபத்துக்குரிய தகவல் ஒன்று உள்ளது. முருக பக்தர்கள் வேடமிட்டு ஊமைத்துரையும் செவத்தையாவும் மீட்கப்பட்டபோது சுமார் 1 மைல் தூரத்தில் தான் நிராயுதபாணியாக ஆங்கிலேய அதிகாரிகள் மதுவிருந்தில் களித்திருந்தனர். ஊமைத்துரையும் உடன்வந்த 200க்கு மேற்பட்ட வீரர்களும் அதை கவனித்திருந்தால் இன்று வரலாறே மாறியிருக்கும்‘ என்று அதிர்ச்சியுடன் அவர் குறிப்பிடுகிறார். என்ன செய்வது, வெற்றி ஆரவாரத்தால் கவனம் கலைந்த தருணத்தில் ஒரு பொன்னான வாய்ப்பை பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பயன்படுத்த முடியாமல் போனதுதான் வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகிப்போனது.
விடுதலை போராட்ட வரலாற்றில் முத்திரை பதித்த வீரசங்கம்
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக வடக்கே சமஸ்தானங்கள் போர்க்கோலம் பூணும் முன்பே தமிழ் மண்ணில் ஒரு வீரியமான மக்கள் விடுதலை இயக்கம் நடைபெற்றது.
மருது சகோதரர்களால் வடிவமைக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினர் தங்களை வீர சங்கத்தினர் என அழைத்துக் கொண்டனர். 1772ல் சிவகங்கை ராஜா முத்துவடுகநாதர் கொல்லப்பட்டதற்கு பிறகு ஊராளிகள் (ஊர் தலைவர்கள்) மூலம் சங்கத்துக்கு ஆள் சேர்த்தனர். சங்கத்தை ஒருங்கிணைக்க திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை பெரிய மருது பயணம் மேற்கொண்டார்.
கேரளாவில் உள்ள மடப்புரிக்கு சென்ற மருது, அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு நூற்றுக்கணக்கான மலபார் வீரர்களுடன் எழுச்சிமிக்க நடைபயணம் மேற்கொண்டார். தோளுயர்த்தி, நெஞ்சை நிமிர்த்திவந்த அந்த படைக்கு உணவு வழங்குவதை தடுக்க ஆங்கிலேயர் சாலைகளை மூடினர். ஆனால், கடல் வழியாக தொண்டி துறைமுகத்துக்கு உணவு வரவழைக்கப்பட்டது. சங்கத்தின் ஆயுத தேவைக்காக மேலூரிலும் தாரமங்கலத்திலும் இரு துப்பாக்கி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு தீவிரமாகவும் ரகசியமாகவும் வீரசங்கம் செயல்பட்டது.
திப்பு மீது போர் தொடுக்க 5.3.1799ல் ஆங்கிலேய படைகள் மைசூருக்கு சென்ற நிலையில் தமிழக ராணுவ கிடங்குகளில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து, உணவுப்பொருட்களை வீர சங்கத்தினர் கைப்பற்றினர். முத்துக்கருப்பன், சிங்கம் செட்டி போன்றோர் அபிராமம், கமுதி, முதுகுளத்தூர், கொக்குளம், சிக்கல் ராணுவ கிடங்குகளை தாக்கினர். மேஜர் பானர்மேன் தலைமையிலான படை பாலமநேரியில் சிங்கம்செட்டியை பிடித்து தூக்கிலிட்டது. அவரது தலையை ஈட்டியில் குத்தி முச்சந்தியில் நட்டனர்.
நெல்லை வீர சங்கத்துக்கு தலைமை வகித்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் 1799 ஜூனில் சாப்டூர், ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் பகுதி தலைவர்களை சங்கத்தில் சேர வேண்டுகோள் விடுத்தார். செவத்தையா, வீரபாண்டிய நாயக்கர், வீரபத்திரபிள்ளையை இளவரசநல்லூருக்கு அனுப்பி அங்குள்ள கள்ளர்கள் ஆதரவை பெற்றார். 1.6.1799ல் பாலமநேரியில் நடந்த சண்டையில் மருது சகோதரர்களுடன் வீர சங்கத்தினரும் சமராடினர்.
இதற்கிடையே புரட்சிப்படையை சேர்ந்த 42 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 8 பேர் தாராபுரத்திலும், 7 பேர் சதியமங்கலத்திலும், 6 பேர் கோயமுத்தூரிலும் மக்கள் நடுவே தூக்கில் இடப்பட்டனர். 16.10.1799ல் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட பின் சின்ன மருது நெல்லை பகுதி வீரசங்கத்துக்கு தலைமை பொறுப்பேற்றார். கட்டப்பொம்மன் தம்பி குமாரசாமி செவத்தையா உட்பட 17 வீரசங்கத்தினர் நெல்லையில் சிறைப்படுத்தப்பட்ட போது 200 வீரர்கள் முருக பக்தர் வேடம் புனைந்தும், வாழை இலை, விறகு விற்பவர்போல் நடித்தும் அவர்களை சிறைமீட்டனர்.
சின்ன மருது 1801ல் தூக்கிலிடப்பட்ட பின்னரும் வீர சங்கத்தின் தொண்டு தொடர்ந்தது. ஊர்தோறும் கத்தி சண்டை, கம்பு சண்டை, மல் யுத்தம் என பயிற்சிகள் ‘களம்‘ கட்டின. மதுரை, திண்டுக்கல், குமரி பகுதிகளை விட நெல்லை பகுதியில் ஏராளமானோர் சங்கத்தில் இணைந்தனர். குறிப்பாக நாங்குநேரி மறுகால் குறிச்சியில் ஊரே ஒட்டுமொத்தமாக சங்கத்தில் இணைந்தது. எங்கும் எழுச்சியும் கிளர்ச்சியும் நிகழ்ந்தவண்ணமிருந்தன.
இதையடுத்து அப்போதைய கவர்னர் எட்வர்ட் கிளைவ் ‘மல் யுத்தம், கொரில்லா பயிற்சிகளை நடத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும்‘ என அரசாணை கொண்டுவந்தார். கிழக்கிந்தி கம்பெனி படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர். பலரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனாலும் விடுதலை உணர்வு அடங்கவில்லை.
இறுதியாக வீர சங்கத்தின் உறுப்பினர்கள், குடும்பத்தினர் 74 பேருக்கு தீவாந்தர தண்டனை விதித்தனர். இவர்களில் பெரிய மருதுவின் மகனான 15 வயது துரைச்சாமியும் அடக்கம். தென் தமிழகத்தில் வீறு கொண்டெழுந்த வீரசங்கம், இந்த தீவாந்தர தண்டனைக்கு பின்பு கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து இறுதியில் வீழ்ந்தது.