கோவையை அடுத்துள்ள அரசூர், மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இந்த கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 66 தொழிற்சாலைகள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட "பவுண்டரி கிளஸ்டர்' ஆகியவை அமைந்துள்ளன. மிகவும் வறட்சிக்குரிய இப்பகுதியில் நீர் ஆதாரம், மழைப்பொழிவு எல்லாமே குறைவு என்பதோடு, சரளை மண் நிறைந்த பகுதி என்பதால், மரங்களும், பசுமையும் மிகமிகக்குறைவு. இப்படிப்பட்ட கிராமத்தில், "உலக பசுமைப்புரட்சி' என்ற அமைப்பை துவக்கியுள்ள இந்த கிராமத்தின் இளைஞர்கள், ஊரையே பசுமையாக்கும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர்.இவ்வமைப்பின் தலைவராக ரமேஷ்குமார், செயலராக வைத்தீஸ்வரன், பொருளாளராக ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர், சுயதொழில் செய்வோர் என 14 வயதிலிருந்து 27 வயது வரையிலான இளைய தலைமுறையினர் 60 பேர், இதில் உறுப்பினர்களாகவுள்ளனர். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதையே தங்கள் அமைப்பின் தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டுள்ள இந்த இளைஞர்கள்,
"அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் ஒரே பொக்கிஷம் மரங்களே...நம் நினைவுகளைச் சொல்ல மரங்களை வளர்ப்போம்' என்ற வாசகங்களை முன்னிறுத்தி, பசுமைப் பணியாற்றி வருகின்றனர்.தங்களது கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் 400 மரக்கன்றுகளை நட்டு, அதைப் பராமரித்து, சிறப்பாக வளர்த்துள்ள இவர்கள், கிராம ஊராட்சி சார்பில் அரசூரில் 11 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலையை வளர்த்தெடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். நகரங்களில் மரம் வளர்க்க இடமில்லாததால், கிராமப்புறங்களில் காலியிடங்களைத் தேர்வு செய்து, அதில் பெருமளவில் மரங்களை வளர்த்து, சோலைகளை உருவாக்கும் "பசுமை பஞ்சாயத்து' திட்டத்தின் முதல் களமே, இந்த சோலையாகும்.
"சிறுதுளி' மற்றும் "ராக்' அமைப்புகள் மேற்கொண்டுள்ள இத்திட்டத்தை, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்துவதற்கு பொது சேவை மையம் உறுதுணையாக பணியாற்றி வருகிறது. முதற்கட்டமாக, அரசூரில் அமைக்கப்பட்டுள்ள சோலையில், இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடனும், கிராம ஊராட்சி நிர்வாகத்துடனும் இவ்வமைப்பின் இளைஞர்களும் இணைந்து, தண்ணீர் ஊற்றுவது, களை எடுப்பது, செடிகள் சாயாமல் பாதுகாக்க குச்சிகளை சேர்த்துக் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர்.இதே கிராம ஊராட்சியில், இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஏக்கர் இடம், பொட்டல் காடாக உள்ளது. அந்த இடத்தில் மரங்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை கிராம ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ் எடுத்து வருகிறார். அங்கும் இதே போன்ற பிரமாண்டமான சோலையை உருவாக்குவதற்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக இவ்வமைப்பின் இளைஞர்கள் உறுதி கூறுகின்றனர்.
துளிர் விடும் நம்பிக்கை:
"உலக பசுமைப்புரட்சி' அமைப்பைச் சேர்ந்த கோபால்சாமி கூறுகையில், ""எங்களது அமைப்பின் ஒரே நோக்கம், மரம் வளர்ப்பது மட்டுமே. எங்கள் கிராமத்தை மற்ற ஊர்களுக்கு முன் மாதிரியான பசுமை கிராமமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி பணியாற்றி வருகிறோம். அடுத்ததாக, 36 ஏக்கர் பரப்பில் சோலை உருவாக்கும் திட்டத்திலும் எங்களது முழுப்பங்களிப்பு இருக்கும்,'' என்றார்.
சினிமா, கிரிக்கெட், போதை உள்ளிட்ட பல்வேறு மாயைகளில் இளைஞர்கள் பலர், தங்களது நேரத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து வரும் நிலையில், "உலகளாவிய சிந்தனை, உள்ளூர் அளவிலான செயல்பாடு' என்ற நோக்கோடு பணியாற்றி வரும் இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது, எத்தனை இடையூறுகள் வந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி நம் தேசம் எழுந்து நிற்குமென்ற நம்பிக்கை, வலுப்பெறுகிறது.