சைனஸ் என்பது நம் முகத்தில் மூக்கின் உட்புறத்தில் உள்ள காற்றறை ஆகும். நமது மூக்கிற்கு இரண்டு பக்கமும் ஒரு ஜோடி சைனஸ் அறைகளும், நடு நெற்றிக்கருகினில் ஒரு ஜோடி சைனஸ் காற்றறைகளும் இருக்கின்றன. நாசி துவாரத்தின் உள்ளே மேடு பள்ளங்களும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றினில் உள்ள கிருமிகளை இந்த பகுதியில் உள்ள செல்கள் தடுத்து விடுகிறது.
இதன் உட்பகுதியில் உள்ள காற்றிடமே சைனஸ். இதில் அலர்ஜி அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டு நீர் கோர்த்துக் கொள்வதால் சைனஸ் என்கின்ற காற்றறைகளில் பாதிப்பு வருகின்றது. இந்த பாதிப்பிற்கு த்தான் சைனஸைடிஸ் என்று பெயராகும்.
காரணங்கள்: நச்சு காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் அலர்ஜி ஏற்பட்டு இந்த சைன ஸைடிஸ் நோய் பாதிப்பு உண்டாகிறது. பாக்டீரியா போன்ற கிருமி தாக்குதலாலும் சைனஸைடிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சு தன்மையாலும் இது ஏற்படுகிறது.
அறிகுறிகள் : அளவுக்கதிகமான தொடர்ச்சியான தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கினில் அரிப்பு, நாசி துவாரங்கள் அடைத்து கொள்ளுதல் ஏற்படும். அடிக்கடி தலைவலி ஏற்படும். முக வீக்கம், கண்களை சுற்றி வலி, தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் சைனஸ் பாதிப்பினால் ஏற்படுவதை வைத்து எளிதில் இது சைனஸைடிஸ் பாதிப்பு என்று நாம் கண்டு பிடித்துவிடலாம்.
தவிர்க்க வேண்டியவை : குளிர்பானங்கள், மற்றும் குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஆறு, குளம், கடல் போன்ற வற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். தலைக்கு குளித்தவுடன் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமான வரை இவர்கள் குளிர்ந்த நீரை தவிர்த்து விட்டு வெந்நீர் குடித்து வரலாம்.
மேலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் எல்லாம் தொடர்ந்து பிராணாயாமம் என்கின்ற மூச்சு பயிற்சியும், மற்றும் சில தேவையான உடற்பயிற்சி களையும் மேற்கொள்ள வேண்டும்.
சைனஸ் பிரச்சினையை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென வந்து போகும், அதிக வலியை தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். முதல் வகையை நாசில்ஸ் ஸ்பிரே, நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் 2-வது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாது.
வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும். தற்போதைய நவீன சிகிச்சை முறையில் திசுக்களை நீக்க வேண்டியதில்லை. `என்டோஸ்கோப்பிக்’ சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடிகிறது.
குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை. மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படும் வகையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.