0
வீட்டில் அச்சத்துடன் பெரும் தொல்லையைக் கொடுக்கக்கூடியது தான் பல்லி. இத்தகைய பல்லி வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து மாரடைப்பு தரும் வகையில் அச்சத்தைக் கொடுக்கும். இத்தகைய பூச்சியை வீட்டில் இருந்து வெளியேற்ற எவ்வளவு தான் ஜீன்னல்களை மூடி வைத்தாலும், எப்படியாவது அது வீட்டினுள் வந்துவிடும். சொல்லப்போனால், இது அழையா விருந்தாளியாக வீட்டிலேயே தங்கி, அவ்வப்போது பயமுறுத்தும்.

இப்படி வீட்டின் சுவர்களில் இருந்து அச்சமூட்டும் பல்லியை விரட்டுவதற்கு பல கெமிக்கல் கலந்த பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அதனைப் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அபாயத்தை விளைவித்துவிடும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்கள் சிறந்தது என்பதைப் புரிந்து, அந்த வழியிலேயே பல்லியை விரட்ட வேண்டும். மேலும் பல்லியை விரட்ட பல அருமையான பொருட்கள் வீட்டிலேயே உள்ளன. அத்தகைய பொருட்களைக் கொண்டு விரட்டினால், நிச்சயம் பல்லியை விரட்டிவிடலாம். இப்போது அத்தகைய பல்லியை விரட்டுவதற்கு பயன்படும் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

காபித் தூளை புகையிலை பொடியுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறு உருண்டைகளாக்கி, அதனை பல்லி அதிகம் வரும் இடத்தில் வைத்தால், அதனை பல்லி சாப்பிட்டால், பல்லி இறந்துவிடும்.

பாச்சா உருண்டை பூச்சிகள் வருவதைத் தடுக்கும் ஒரு சிறப்பான பொருள். இந்த பொருளை உடை அலமாரி, தண்ணீர் தொட்டி அல்லது அடுப்பிற்கு அடியில் வைத்தால், அது பல்லியை விரட்டிவிடும்.

பல்லிகளுக்கு மயில் இறகு என்றால் பயம். எனவே மயில் இறகை சுவற்றில் ஒட்டினால், அது பல்லி வருவதைத் தடுத்துவிடும்.

பெப்பரை நீரில் கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பல்லி வரும் இடங்களில் தெளித்தால், பல்லி அந்த மிளகுவினால் ஏற்படும் எரிச்சலுடன், அதிலிருந்து வெளிவரும் வாசனையால் வராமல் இருக்கும்.

நல்ல குளிர்ச்சியான தண்ணீரை பல்லியின் மீது தெளித்தால், அது பல்லியின் உடல் வெப்பநிலையை குறைத்து, அது நகர முடியாமல் தத்தளிக்கும். அப்போது அதனை வெளியே தூக்கி போட்டுவிடலாம்.

வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதனை பல்லி பதுங்கியிருக்கும் இடங்களில் போட்டால், வெங்காயத்தில் உள்ள சல்பர், துர்நாற்றத்தை உண்டாக்கி, பல்லியை வெளியேற்றி வராமல் செய்துவிடும்.

முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால், அதிலிருந்து வெளிவரும் வாசனையால், பல்லி வராமல் இருக்கும். குறிப்பாக முட்டை ஓட்டை 3-4 வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெங்காயச் சாறு மற்றும் சிறிது தண்ணீரை ஊற்றி கலந்து, அதில் சிறிது பூண்டு சாற்றினை ஊற்றி, நன்கு குலுக்கி, பின் அதனை பல்லி வரும் இடங்களில் தெளித்தால், வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனைக்கு பல்லி ஓடிவிடும். வேண்டுமெனில், சில பூண்டுகளை உரித்து அதனை மூலைகளில் வைத்தாலும் பல்லி போய்விடும்.

மேற்கூறியவற்றை செய்வதற்கு முன்பு, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் உள்ள அசுத்தத்தினாலேயே பூச்சிகள் பல வரும். ஆகவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டாலே, பல்லியின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top