0


‘பிள்ளைங்க பள்ளிக்கூடம் போற அளவுக்கு வளந்துட்டாங்க. வீட்டுல பெரிசா எந்த வேலையும் இல்லை. ஏதாவது செய்யலாமேன்னு தோணுச்சு. கூடுதலா 2 ஆயிரம் வருமானம் வந்தா அவருக்கு உதவியா இருக்கும். எங்காவது வேலை இருக்குமான்னு பத்திரிகைகள்ல ‘வேலைக்கு ஆள் தேவை’ விளம்பரங்களை பாத்துக்கிட்டு இருந்தப்போதான், மதுரை வேளாண் அறிவியல் மையம் தேனீ வளர்ப்பு பயிற்சி கொடுக்கிறதா செய்தி இருந்துச்சு. விளையாட்டா அந்த பயிற்சிக்குப் போனேன். தேனீக்கள் எனக்கு நிறைய பாடங்களை கத்துக் கொடுத்துச்சு. இன்னைக்கு தன்னிறைவா ஒரு வாழ்க்கை கிடைச்சதோட பல நூறு பெண்களுக்கு வழிகாட்டவும் வாய்ப்புக் கெடச்சிருக்கு...’’ - மேலே வந்து ஒட்டுகிற தேனீக்களை எடுத்து கீழே விட்டபடி மென்மையாகப் பேசுகிறார் ஜோஸ்லின்.

தேனீக்களை ‘அது’ என்று அஃறிணையில் அழைத்தால் முறைக்கிறார். கொஞ்சம் வேகமாக கையசைத்து விரட்டினால் பதறுகிறார். ‘‘தேனீக்கள் குழந்தைகளைப் போல... உங்களால் ஆபத்தில்லை என்று உணர்ந்தால் ஸ்நேகமாகி விடும்’’ என்று சிரிக்கும் ஜோஸ்லின் மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர். தேன் உற்பத்தி மற்றும் விற்பனையில் பல்வேறு புரட்சிகளை செய்தவர். 40 ஆயிரம் பேருக்கு தேனீ வளர்ப்பு பயிற்சியளித்திருக்கிறார். தேனீ வளர்ப்பின் மூலம் 300 பெண்களை தொழில்முனைவோராக்கி சுயசக்தியாக மாற்றியிருக்கிறார். வேம்புத்தேன், காப்பித்தேன், நாவல்தேன், முருங்கைத்தேன், லிஸ்ஸிதேன் என தனித்துவமான தேன் வகைகளை இயற்கையாக உற்பத்தி செய்கிறார். வேளாண் செம்மல், இயற்கை வேளாண் வித்தகி, விவசாய சாதனையாளர்... இப்படி வீடெங்கும் பட்டங்களும் பரிசுகளும் விருதுகளும் குவிந்து கிடக்கின்றன.

‘‘எங்க குடும்பம் பாரம்பரிய விவசாயக் குடும்பம். அப்பா தலைமையாசிரியரா இருந்தாலும் விவசாயத்துல தீவிர ஈடுபாடு உண்டு. புதுசு புதுசா நிறைய முயற்சிகள் செய்வார். பிளஸ்டூ படிக்கும்போதே எனக்கு திருமணம் ஆயிடுச்சு. கணவர் செல்வராஜ் வீடியோ கடை வச்சிருந்தார். ஒரு பையன், ஒரு பொண்ணு. சாப்பாட்டுக்கு சிரமமில்லைன்னாலும், பிள்ளைகளுக்குன்னு பெருசா எதுவும் சேமிக்க முடியலே. கொஞ்சம் நெருக்கடியான சூழ்நிலை... அப்போதான் தேனீ வளர்ப்பு பயிற்சிக்குப் போற வாய்ப்புக் கிடைச்சுச்சு. தேனீக்களோட வாழ்க்கை முறை, உழைப்பு எல்லாமே எனக்குள்ள இனம்புரியாத உத்வேகத்தை உருவாக்குச்சு.

தேனீ வளர்க்கணும்னா சின்னதா ஒரு தோட்டம் வேணும். எங்க வீட்டுல அதற்கான வாய்ப்பில்லை. என் தங்கை ராஜரீஹாவுக்கு பெரிய தோட்டம் இருந்துச்சு. அவகிட்ட பேசிட்டு 10 பெட்டிகளைக் கொண்டு போய் அந்தத் தோட்டத்துலயே வச்சேன்.. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகள்ல பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு தோட்டத்துக்குப் போய் பாப்பேன். 2 மாதம் கழிச்சு பெட்டியைப் பிரிச்சுப் பாத்தப்போ 8 கிலோ தேன் கிடைச்சுச்சு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. உறவுக்காரங்களுக்கு எல்லாம் கொடுத்தது போக 2 கிலோ தேனை விற்பனையும் செஞ்சேன். முதன்முதலா நான் சம்பாதிச்ச காசு.

தேனீக்களோட குணம், செயல்பாடுகளை ஓரளவுக்கு கணிச்சுட்டேன். ராணித்தேனீதான் கூட்டோட தலைவி. ராணித்தேனீ இல்லைன்னா வேலைக்காரத் தேனீக்கள் ஒண்ணு சேந்து உடனடியா ஒரு ராணித்தேனீயை உருவாக்கிடுவாங்க. ராணித்தேனீ வளர்ந்தபிறகுதான் கூட்டோட முழுமையான வேலைகள் தொடங்கும். என்னோட 10 பெட்டிகள்ல இருந்து வேலைக்காரத் தேனீகளை பிரிச்செடுத்து மேலும் 10 பெட்டிகள் உருவாக்குனேன். புதுசா பத்து ராணித்தேனீக்கள் உருவாச்சு.

நான் தேனீ வளர்க்கிறதைக் கேள்விப்பட்டு சிவகங்கை மாவட்டத் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், சில பெண்களுக்கு பயிற்சியளிக்கக் கூப்பிட்டாங்க. பயிற்சி பெற்ற பெண்கள் என்கிட்ட ‘பெட்டிகள் செஞ்சு தாங்க’ன்னு கேட்டாங்க. பெட்டிகளோட சேத்து ராணித்தேனீக்களையும் உருவாக்கி கொடுத்தேன். முதன்முறையா 62 பெட்டிகள் விற்பனை செஞ்சேன். தேனை விட பெட்டிகள் விற்பனையில லாபம் கூடுதலா கிடைச்சுச்சு. அதுக்குப் பிறகு நிறைய பேர் பயிற்சிக்கு வரத் தொடங்கினாங்க. நானும் பெட்டிகளை அதிகமாக்கி சில கடைகளுக்கு ரெகுலரா தேன் கொடுக்க ஆரம்பிச்சேன்.

ஒரு நல்ல தொடக்கம் அமையுற போது, வாழ்க்கையில சறுக்கல்களும் வரத்தானே செய்யும்? திடீர்னு என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. கேன்சர். வாழ்க்கையில பிடிப்பே இல்லாமப் போச்சு. அவளை மீட்க போராடினோம். அலோபதி, சித்தா, ஆயுர்வேதம்னு எல்லா முயற்சிகளும் செஞ்சு பாத்தோம். முடியலே... வந்த வேகத்தில எங்களை விட்டுப் போயிட்டா.. அந்த இழப்பு என்னை முடக்கிப் போட்டுடுச்சு.

2 மாதம் என் கணவரும் வேலைக்குப் போகலை. பொருளாதார நெருக்கடி. தேன் பெட்டியைப் போய் பார்த்தா எறும்புகள் ஊறிக்கிட்டு இருக்கு. ஒரு தேனீயும் இல்லை. எல்லாமே என்னை விட்டுப் போன மாதிரி இருந்துச்சு. இனிமே எதுக்காக கஷ்டப்படணும், எதுவுமே வேணாம்னு இருந்துட்டேன். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், உறவுக்காரங்க எல்லாரும் இந்த வேதனையில இருந்து மீளனும்னா திரும்பவும் நீ தேனீ வளர்ப்புல இறங்கு... அப்போதான் உன் கவனம் திசைமாறும் னு சொன்னாங்க. ஒரு கட்டத்துல நானும் அதை உணர்ந்தேன்.

அங்கே இங்கே கடனை வாங்கி 200 பெட்டிகள் போட்டேன். கண்ணும் கருத்துமா தேனீக்களைப் பாதுகாத்தேன். கிடைச்ச தேனை இயற்கை அங்காடிகளுக்கு அனுப்பினேன். பயிற்சியும் கொடுக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு மாதமும் 70 - 100 வரை வந்து பயிற்சி எடுத்துக்குவாங்க. எல்லாருக்கும் நானே தேன் பெட்டி செஞ்சு கொடுத்தேன். ஓரளவுக்கு அந்த வேதனையில இருந்து மீண்டேன்...’’ - குரல் கம்ம பேசுகிறார் ஜோஸ்லின்.

‘‘காதி துறையில ‘கேவிஐசி’ன்னு ஒரு பிரிவு இருக்கு. தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குற அமைப்பு. ‘35 சதவிகித மானியத்துல 25 லட்சம் ரூபா லோன் தர்றோம். தொழிலை பெரிசா செய்யிங்க’ன்னு சொன்னாங்க.

எனக்கு மலைப்பா இருந்துச்சு.. என்னை நம்பி 25 லட்சம் கடன் தர ஒரு நிறுவனம் தயாரா இருக்கு... அவ்வளவு பெரிய தொகையை வாங்கி என்ன செய்றதுன்னு தெரியலை. ‘10 லட்சம் மட்டும் கொடுங்க’ன்னு வாங்கினேன். அலங்காநல்லூர் பக்கத்துல கொண்டையாம்பாடியில கொஞ்சம் நிலம் வாங்கி 500 பெட்டிகள் போட்டேன். இரவு பகல் பாக்காம உழைச்சேன். மாதம் 500 கிலோ தேன் அறுவடை ஆச்சு. அடுத்த கட்டமா தேனை அப்படியே விக்கிறதை விட மதிப்பூட்டி வித்தா லாபம் கூடுதலா கிடைக்குமேன்னு தோணுச்சு.

தேன் ஒரு அப்பழுக்கில்லாத மருந்து. அதுல எந்தப் பொருளை கலந்தாலும் அதுக்கும் மருத்துவ சக்தி வந்துடும். இஞ்சி, துளசி, நெல்லிக்காய், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, ஆப்பிள், கேரட், மாம்பழம், பூண்டு, பேரிச்சை, அத்திப்பழம், ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ... இதைத் தனித் தனியா மிக்ஸ் பண்ணி, ஆப்பிள் தேன், இஞ்சித்தேன்னு விற்பனை செஞ்சேன். நல்ல வரவேற்பு. மேலும் மேலும் புதுசா எதையாவது செய்யணும்கிற வேட்கை அதிகமாகிட்டே இருந்துச்சு.

பொதுவா, ஒரிஜினல் தேன்ல 38 சதவிகிதம் குளுக்கோஸ் இருக்கு. அதனால குறிப்பிட்ட நாளுக்கு மேல தேன் உறைஞ்சு போகும். கலரும் மாறிடும். அசிடிக் ஆசிட் அல்லது சிட்ரிக் ஆசிட் கலந்தா கலர் மாறாது. பெரிய நிறுவனங்கள் இதைக் கலந்துதான் விக்கிறாங்க. ஆனா, நான் எதையும் கலக்காம எடுத்த தேனை அப்படியே மார்க்கெட்டுக்கு அனுப்புவேன். அதனால ஒவ்வொரு முறையும் தேன் ஒவ்வொரு கலர்ல இருக்கும். எந்த சீசன்ல எந்த பூ பூக்குதோ, அதுக்குத் தகுந்த மாதிரி கலர் இருக்கும்.

இதை கடைக்காரர்கள் குறையா சொல்லும்போதுதான் அந்த யோசனை வந்துச்சு. பல பூக்கள் தேனா இல்லாம, தனித்தனியா ஒவ்வொரு பூவுல இருந்தும் தேனை எடுத்தா என்ன? கேட்க நல்லாயிருந்தாலும் அது அவ்வளவு எளிமையான விஷயமில்லை. இதுவரை தமிழகத்துல யாரும் அந்த மாதிரி முயற்சியில இறங்கலே. தைரியமா நான் இறங்கினேன். முதல்ல தமிழகம் முழுக்க அலைஞ்சு திரிஞ்சு ஒரு ஆய்வு செஞ்சேன். தமிழகத்துல, எங்கெங்கே எந்தெந்த மரங்கள் இருக்கு, எந்தப்பூ எந்த மாதத்துல பூக்கும்னு ஒரு கணக்கெடுத்தேன்.

ஒரு தேனடை அல்லது தேன்பெட்டியைச் சுத்தி 2 கிலோமீட்டர் தொலைவுல, 60 சதவிகிதம் எந்தவகையான மரங்கள் இருக்கோ, அந்த தேன் அந்த மரத்தின் தன்மையை ஒத்திருக்கும். அதாவது 2 கி.மீ. தொலைவுல நிறைய நாவல் மரங்கள் இருந்தா அங்கே கிடைக்கிற தேன் நாவல்தேன். நாவல் பழம் மற்றும் பூவுல என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கோ அதெல்லாம் அந்த தேன்லயும் இருக்கும். இதேமாதிரி ஒவ்வொரு பூவுல இருந்து கிடைக்கிற தேனுக்கும் தன்மை, கலர், சுவை எல்லாமே மாறும்.

அதன்படி, இடங்களைத் தேடித்தேடி பெட்டிகளை வச்சேன். முருங்கைத்தேன், கூர்க்தேன், லிஸ்ஸி தேன், வேம்புத்தேன், குங்குமப்பூ தேன், நாவல் தேன், சூரியகாந்தி தேன்... இப்படி தனித்தன்மையா தேன் கிடைச்சுச்சு. ஒவ்வொண்ணும் தனித்தனி சுவை, மணம், குணத்தோட இருந்துச்சு. ஆட்களை வச்சு மலைத்தேனும் சேகரிச்சேன். எனக்குன்னு ஒரு பிராண்ட் ரெடி பண்ணி, அக்மார்க் வாங்கி, பெரிய அளவுல மார்க்கெட் செய்ய ஆரம்பிச்சேன். கணவரும் வேலையை விட்டுட்டு முழுமையா என்கூட தொழில்ல இறங்கிட்டார்...’’ - மலைக்க வைக்கிறார் ஜோஸ்லின்.

தேனீ வளர்ப்பு மூலம் வெறும் தேன் மட்டும் கிடைப்பதில்லை. விலை உயர்ந்த வேறு பல பொருட்களும் கிடைப்பதாகச் சொல்கிறார் ஜோஸ்லின். ஒவ்வொரு பெட்டியின் வாசலிலும் சிறிய கருவி ஒன்றை பொருத்தியிருக்கிறார். தேனீக்கள் பூக்களில் இருந்து சேகரித்து கால்களில் ஏந்திவரும் மகரந்தத்தை அந்தக் கருவி தனியாக பிரித்துவிடுகிறது. ஒரு கிலோ மகரந்தம் 3000 ரூபாய். அறுசுவையும் கொண்ட இந்த மகரந்தம், ‘ஆண்மைக்குறைவுக்கு அரு மருந்து. உடலுக்கு சக்தியூட்ட வல்லது. கிட்னி பழுதுக்கும் மருந்து’ என்கிறார் ஜோஸ்லின்.

ராணித் தேனீயின் உணவுக்காக வேலைக்காரத் தேனீக்கள் உற்பத்தி செய்யும் ராயல் ஜெல்* 1 கிலோ 1 லட்சம் ரூபாயாம். ஹைபுரோட்டீன் உணவு இது. இதைச் சாப்பிட்டுத்தான் தன் வாழ்நாள் முழுதும் ராணித்தேனீ முட்டைகளை இட்டுத் தள்ளுகிறது. இது மலட்டுத்தன்மையை நீக்கும் மருந்தாம். அடையில் கிடைக்கும் தேன்மெழுகானது பெயின்ட், வார்னிஷ், மெழுகுவர்த்தி என 250 வகை பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. கிலோ 250 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள ஆளாகப் பறக்கிறார்களாம்!

‘‘தேனீ வளர்ப்பை முறையா செஞ்சா அதுமாதிரி லாபம் தர்ற தொழில் வேறில்லை. காஷ்மீர்ல 1989ல 5 பெட்டிகளோட தொழிலை ஆரம்பிச்ச ஒருத்தர், இப்போ 50 ஆயிரம் பெட்டிகள் வச்சு தேனெடுக்கிறார். 48 நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்றார். லோடு ஏத்தி இறக்க மட்டும் 80 டிரக்ஸ் வச்சிருக்கார். மூட்டை தூக்கிக்கிட்டிருந்த ஒருத்தர் தேனீ வளர்ப்பு மூலம் இப்போ 5 கார்கள் வாங்கியிருக்கார். நான் 2 ஆயிரம் சம்பாதிச்சா போதும்னு நினைச்சேன். இப்போ ஓரளவுக்கு தன்னிறைவு அடைஞ்சுட்டேன். இன்னும் பெரிய அளவுல செய்யணும். நிறைய பெண்களுக்கு பயிற்சி கொடுத்து பொருளாதார சக்தியா அவங்களை மாத்தணும்... இன்னும் நிறைய கடமைகள் இருக்கு...’’ என்றபடி தேனீக்களோடு ஸ்னேகமாகிறார் ஜோஸ்லின். இந்த ராணித்தேனீயின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பிற தேனீக்கள் உற்சாகமாகப் பறக்கின்றன!

தேன் வாழ்க்கை
------------------------

தேனீக்களின் வாழ்க்கை மிகவும் கட்டுக்கோப்பானது. அது ஒரு பெண்ணாதிக்க உலகம். ராணித் தேனீ தான் கூட்டின் தலைவி. ராணியின் கீழ்படிந்து தம் காலம் முழுதும் சேவையாற்றுவதே வேலைக்காரத் தேனீக்களின் ஜென்ம பலன். ஆண்தேனீக்களும் ராணிக்கு அடிபணிந்துள்ள சேவகர்கள்தான். மற்ற தேனீக்களைவிட ராணித்தேனீ தேஜஸாக இருக்கும். வடிவமும் சற்று பெரிது. ராணியின் வேலை, கூட்டை கண்காணிப்பது, முட்டையிடுவது, நிர்வகிப்பது. மற்ற தேனீக்களின் ஆயுள்காலம் 2 மாதம். ராணித்தேனீயின் ஆயுள் காலமோ 3 ஆண்டுகள். காரணம், உணவு. மற்ற தேனீக்களைப் போல வெறும் மகரந்தங்களை சாப்பிடுவதில்லை. அதற்கென ஸ்பெஷல் உணவு உண்டு. பெயர் ராயல் ஜெல்லி. 7 முதல் 14 நாட்கள் வயதுடைய தேனீக்களின் உடலில் சுரக்கும் ஒருவித ஹைபுரோட்டீன் திரவம்தான் ராயல் ஜெல்லி. இதுதான் ராணித்தேனீயாரின் தேஜஸுக்கும் நீண்ட ஆயுளுக்கும் முட்டைகள் இட்டுத் தள்ளுவதற்கும் காரணம். ஒரு கூட்டில் 50 முதல் 100 ஆண் தேனீக்களும் பலநூறு வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும். ராணித்தேனீ வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஆணுடன் இணையும். ஆண்கள் மத்தியில் அந்தத் தகுதியைப் பெறுவதற்கு கடும் போட்டி இருக்கும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் ஆண் தேனீக்கு மிக உயர்ந்த பரிசும் கிடைக்கும். அது மரணம்!

ராணித்தேனீயார் பருவத்துக்கு வந்ததும், ராயல் ஜெல்* உபயத்தில் ஜில்லென்று சிறகு விரித்து வெகு உயரத்துக்கு பறக்கத் தொடங்கிவிடுவார். ராணியாரின் விருப்பமறிந்து ஆண் தேனீக்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த உயரத்துக்கு பறக்க முயற்சிப்பார்கள். சம உயரத்துக்கு பறந்துவரும் ஆண் தேனீயுடன் மட்டுமே ராணி இணைகூடும். கூடல் முடித்ததும் அந்த ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், அதற்குள்ளாக, பல லட்சம் தேனீக்களை உருவாக்கவல்ல சக்தியை ராணியாருக்குத் தந்துவிடும். அது முதல் 3 வருடங்களுக்கு தொடர்ந்து லட்சக்கணக்கில் முட்டையிட்டுக் கொண்டே இருக்கும் ராணித்தேனீ!

வேலைக்காரத் தேனீக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை ஒருநொடி ஓய்வில்லாமல் சேவையாற்றுகின்றன. வயது வாரியாக அவர்களுக்கு பணிகள் நிர்ணயம் செய்யப்படும்.

1 முதல் 3 நாள் வயதுள்ள தேனீக்கள் - கூட்டைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட கூ(வீ)ட்டு வேலைகள்.

3 முதல் 6 நாள் வயதுள்ள தேனீக்கள் - தேனீக்கள் வயிற்றில் சுமந்துவந்து கூட்டில் வைக்கும் இனிப்புத் துளிகளை தங்கள் சிறகால் விசிறி திக்காக்கி கூட்டில் ஸ்டோர் செய்யும் பணி.

7 முதல் 14 நாள் நாள் வயதுள்ள தேனீக்கள் - முட்டைகள் இட்டு சோர்வாகும் ராணித்தேனீயாருக்கு ராயல் ஜெல்லியை உருவாக்கி, ஊட்டும் வேலை.

14 முதல் 21 நாள் வயதுள்ள தேனீக்கள் - பொறியாளர்கள். உடலில் சுரக்கும் மெழுகைக் கொண்டு கூட்டைக் கட்டுவது இவர்களின் வேலை.

21 முதல் 23 நாள் வயதுள்ள தேனீக்கள் - இப்பருவத்தில் உள்ள தேனீக்கள் மூன்று குழுக்களாக பணிபுரிகின்றன. 1. மருத்துவ தேனீக்கள். பணிக்குச் சென்று திரும்பும்போது காலொடிந்த, சிறகொடிந்த தேனீக்களுக்கு சிகிச்சை அளிப்பது இவற்றின் பணி. 2. சிப்பாய் தேனீக்கள். அருகருகே இரண்டு தேனடைகள் இருந்தால் அவை, இந்தியாவும் பாகிஸ்தானும் போலத்தான். இங்குள்ள தேனீ அங்கு சென்றால் அவை விரட்டுவதும், அங்குள்ள தேனீ இங்கு வந்தால் இவர்கள் விரட்டியடிப்பதும் நடக்கும். மோதலும் உருவாகலாம். உயிரும் பறிபோகலாம். கூட்டைக் கலைப் பவர்களை விரட்டி விரட்டிக் கடிப்பது இவர்களே. 3. பிணம் தூக்கித் தேனீக்கள். அந்தப் போரில் உயிரிழக்கும் தேனீக்களை கூட்டில் இருந்து வெளியேற்றுவது இவர்களின் வேலை.

23 முதல் 25 நாள் வயதுள்ள தேனீக்கள் - இவர்களது பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒற்றர்கள். கூட்டில் இருந்து பூக்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை கண்டறிந்து வருவது இவர்களது வேலை. வயிற்றை ஆட்டியபடி வட்டம் போட்டு தூரத்தை உணர்த்துவார்கள்.

25 முதல் 60 நாள் வயதுள்ள தேனீக்கள் - ஒற்றர்கள் சொல்லும் திசையில் பறந்து சென்று கால்களில் மகரந்தத்தையும், வயிற்றில் மதுரத்தையும் சுமந்து வருவது இவர்களின் வேலை.
ஒரு தேனீ தன் வாழ்நாளில் 1 டீஸ்பூன் தேனை சேகரிக்கும். அதற்காக நாளொன்றுக்கு 50 ஆயிரம் மலர்களில் அமர்ந்து எழுந்துவரும். என்ன தலைசுற்றுகிறதா!

என்ன முதலீடு? எவ்வளவு லாபம்?
-------------------------------------------------

ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தேனீ வளர்ப்புத் தொழிலை தொடங்கலாம். 6 பெட்டிகள், தேன் பிரித்தெடுக்கும் மெஷின் எல்லாம் இதில் அடங்கும். தோட்டங்கள் அல்லது பசுமை அடர்ந்த பகுதிகளில் செய்யலாம். வாரம் ஒருநாள் ஒருமணி நேரம் மட்டும் செலவு செய்தால் போதும். ஒரு மாதத்துக்கு 8 முதல் 10 கிலோ தேன் கிடைக்கும். 1 கிலோ தேன் ரூ.200 - 300 வரை விற்பனையாகிறது. இதோடு அரை கிலோ மகரந்தமும் கிடைக்கும். இதை 1500 ரூபாய்க்கு விற்கலாம். வருடம் ஒருமுறை 2 கிலோ மெழுகு கிடைக்கும். 1 கிலோ 250 ரூபாய்க்கு விற்க முடியும்.
ஜோஸ்லினை தொடர்பு கொள்ள : 9865555047

கருத்துரையிடுக Disqus

 
Top