0
Embedded image permalink
தினமும் பள்ளிக்குக் கிளம்பும் எட்டு வயதுப் பெண்ணான, ‘துனியா’, 

விவசாயியானத் தன் தந்தையை, தினந்தோறும் அவரறியாமல் பின் தொடர்கிறார். தந்தை எந்தத் தவறான முடிவிற்கும் போகவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே மனநிம்மதியோடு, பள்ளிக்குச் செல்கிறார். 

இரவு தந்தையின் மேல் சாய்ந்தபடி, வானின் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் துனியா, தன் உறவினர்களில், தற்கொலை செய்து கொண்டு, மாய்ந்து போன விவசாயிகளை எந்தெந்த உடுக்கள் என்று வானில் அடையாளம் கண்டு கொள்ளும் காட்சி நெஞ்சை நெருடுகிறது.

 மறுநாள், தன் அப்பா வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்ற கயிற்றைக் கண்டு பயந்து, அதை ஒளித்து வைக்கிறாள் துனியா. 

ஞாயிறன்று, பள்ளி விடுமுறை என்பதால் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கும் துனியா, அப்பா கிளம்பிப் போன பின்பு, கயிறு, ஒளித்து வைத்த இடத்தில் இல்லாததைக் கண்டு பதறுகிறாள். அவரைத் தேடி வயலுக்கு விரைந்தோடுகிறாள். அங்கே அவரில்லையென்றதும் மேலும் பீதி அடைந்து, சுற்றும் முற்றும் தேடுகிறாள்.


தூரத்தில் ஒரு மரத்தில், அவர் கயிறு கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு, பின்னங்கால் பிடரியில் பட ஓடிப் போய் அவரைத் தழுவிக்கொண்டு, அழத் தொடங்குகிறாள். 

அவள் கண்ணைத் துடைத்துவிட்டுக், கயிற்றை இறுக்கக் கட்டி அவளுக்கு, ஓர் ஊஞ்சல் செய்து தருகிறார் அவள் தந்தை. துனியாவைப் போல் லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வானை நோக்கிக் காத்திருக்கின்றன. 

வானம் பொய்த்துப்போனதால், 1995ஆம் ஆண்டு முதல் மூன்று லட்சம் உழவர்களுக்கு மேல், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த முயற்சியை விரிவுபடுத்த உதவுங்கள் என்ற கோரிக்கையோடு நிறைவுறுகிறது இந்தக் காணொளி. துனியாவாகத் தோன்றும் அந்தச் சிறுமியின் முகமும், குரலும், பின்னணி இசையும் ஒரு நான்கு நிமிடத்துளிகள் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகின்றன. ஊடகத்தின் சக்தி ஆட்சியையே நிர்ணயிக்கும் நம் நாட்டில், அந்தச் சக்தியை இப்படிப்பட்ட இணைய யுக்தியாகவும் கையாள முடியுமென்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

கருத்துரையிடுக Disqus

 
Top