mAH குறியீடு எண்:
ஸ்மார்ட் போனில் நிச்சயமாய், இறுதியாகக் காணப்படும் குறிப்பு, அதில் உள்ள பேட்டரியின் திறன் குறித்ததாக இருக்கும். பேட்டரியின் திறனை mAH எனக் குறிக்கின்றனர். இது A milliampere hour (mAh) எனப்படும். (Milliamp Hours.) ஓர் ஆம்பியர் ஹவர் (Ah) என்பதில் 1000ல் ஒரு பங்கு. பேட்டரி ஒன்று, தான் கொள்ளும் சக்தியின் நிலையை இது குறிக்கிறது. அந்த பேட்டரி, மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படும் முன், எவ்வளவு மணி நேரம் சக்தியினைக் கொண்டிருக்கும் என்பதனை இது குறிக்கிறது. இந்த எண் உயர்ந்த எண்ணாக இருந்தால், அந்த பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். இது தவறு. இதனை வேறு ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.
1000 கிலோ எடையும், 100 bhp திறன் கொண்ட கார் ஒன்று, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ. தூரம் செல்வதாக வைத்துக் கொள்வோம். காரின் எடையில், மேலும் 500 கிலோ அதிகப்படுத்தினால், கார் கொடுக்கும் மைலேஜ் நிச்சயம் குறையும். அதே போல, சீட்களை எல்லாம் எடுத்துவிட்டால், நிச்சயம் எடை குறைவாக இருப்பதனால், அதிக மைலேஜ் கொடுக்கும். அதே போல, ஒருவர் காரை எப்படி இயக்குகிறார் என்பதைப் பொறுத்தும் மைலேஜ் வேறுபடும். இதே நிலை தான் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் திறனிலும் ஏற்படுகிறது. வெறும் அழைப்புகளுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்துவோரின் பேட்டரி அதிக திறனைத் தரும். பல்வேறு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் ஒருவரின் ஸ்மார்ட் போன் பேட்டரியின் திறன் நிச்சயம் குறையும்.
இரு போன்களில், 3000 mAH பேட்டரிகளை வைத்து இயக்கினாலும், ஒரு போனில் திரை சற்றுப் பெரியதாக இருந்தால், அதன் பேட்டரி திறன் குறைவாகவே இருக்கும். எனவே, பேட்டரியின் ஹார்ட் வேர் குறித்த தகவல்களைக் காட்டிலும், அந்த போனில் இயங்கும் சாப்ட்வேர் செயலிகளை எப்படி இயக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அந்த பேட்டரியின் திறன் அமையும். எனவே, அதிக mAH என்பது சில பேட்டரிகளைப் பொறுத்தவரை நீண்ட நாள் உழைக்கும் என்பதைக் குறித்தாலும், எப்போதும் அது பேட்டரியின் நீண்ட நாளுக்கு உத்தரவாதம் தரும் என்று சொல்ல முடியாது.
அதிக பிக்ஸெல் கொண்ட திரை:
இந்த தகவலும், ஏறத்தாழ மேலே சொல்லப்பட்ட பேட்டரியின் வாழ்நாள் போன்ற பிரச்னையைக் கொண்டுள்ளது. அதிக பிக்ஸெல்கள் கொண்ட திரை எனில், கூடுதல் சிறப்பான காட்சியைத் தரும் என்பது, எப்போதும் உண்மையாக இருக்காது. அதிக பிக்ஸெல்களால் நமக்குக் கிடைப்பது, திரைக் காட்சி குறித்த அதிக தகவல்கள் தாம். அதிக தகவல்களை சென்சார்களால் உணர முடியும். இதனால், படக் காட்சி குறித்து அதிக தகவல்கள் கிடைக்கின்றன. படத்தின் தன்மைப் பண்பு சிறப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.
இந்த மெகா பிக்ஸெல் குறித்த விளம்பர விளையாட்டு, டிஜிட்டல் சாதன உற்பத்தியாளர்களால், டிஜிட்டல் கேமராக்கள் தயாரிக்கத் தொடங்கிய போது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அப்போது, கேமராக்களில் ரெசல்யூசன் மிகவும் குறைவாக இருந்தது. அதனால், ரெசல்யூசன் அதிகப்படுத்தப்படுகையில், படத்தின் தெளிவு கூடுதலாக அமைந்தது. ஆனால், இப்போதோ, மெகா பிக்ஸெல்கள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டால் படத்தின் தெளிவு கூடுதலாக இருக்கும் என்ற நிலைக்கு அப்பால் நம் தொழில் நுட்பம் சென்றுவிட்டது. சில மெகா பிக்ஸெல்களை அதிகமாக அமைப்பதாலேயே, படத்தின் தெளிவு அதிகமாகும் என்பது மாயையாக மாறிவிட்டது. ஒரு பெரிய அளவில் இந்த படத்தினை அச்செடுத்தால் தான், இதன் தன்மை புரியும்.
ஒரு படத்தின் தெளிவுப் பண்பினை வேறு சில அம்சங்களும் முடிவு செய்கின்றன. அதனால் தான், நைகான் டி4எஸ் கேமராவில் (விலை 7,000 டாலர்) சென்சார் 16 மெகா பிக்ஸெல் மட்டுமே. இந்த ரெசல்யூசனை, உங்கள் ஸ்மார்ட் போன் எளிதில் மடக்கிவிடுமே. சென்சாரின் அளவு, லென்ஸின் தன்மை திறன், ISO திறன் ஆகியவை தான் படம் ஒன்றின் பண்புத் தன்மையை முடிவு செய்கின்றன. மெகா பிக்ஸெல் மட்டுமல்ல. சொல்லப்போனால், பல ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்கள், பார்த்து படம் எடுக்கும் (Point and shoot) கேமராக்களில் உள்ள சென்சார்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.
ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும்:
இந்தக் கூற்றில் ஒரு பக்கம் உண்மை உள்ளது என்றே கூற வேண்டும். ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும் தான்; எப்போது? நீங்களாக அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திடும்போதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே, மால்வேர்களை வரவழைக்கும் பிழையான வழிகள் உள்ளன என்பது தவறு. எந்த போன் சார்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இதற்கான பிழை குறியீடுகள் இருக்கலாம். அதனால் தான், ஆண்ட்ராய்ட் போன்கள், தர்ட் பார்ட்டிகள் தரும் APK பைல்கள் கொண்ட அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திட அனுமதிப்பதில்லை. நம்பிக்கையான நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே நாம் இன்ஸ்டால் செய்தால், எந்த போனிலும் மால்வேர் வரும் சாத்தியங்கள் ஏற்படாது. மேலும், தொடக்கத்தில் இந்த அப்ளிகேஷன்களில் மால்வேர்கள் இருப்பது எந்த வகையிலும் வெளியே தெரியாது. போகப்போகத்தான் இவற்றின் செயல்பாடுகளை நாம் அறிவோம்.
மிக அதிகமாக இணைய டேட்டா பயன்பாடு, அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் போன்றவை ஏற்படுகையில் தான், மால்வேர் குறித்து நாம் சந்தேகப்படுவோம். எனவே, நம்பக் கூடாத அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே, ஆண்ட்ராய்ட் போன்களில் மால்வேர்கள் வரலாம். அது ஆண்ட்ராய்ட் என்பதால் மட்டுமே வராது. தற்போது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். கொண்ட போன்களில் மால்வேர்கள் வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனில் மட்டுமே மால்வேர் வரும் வாய்ப்புகள் உள்ளன என்பது தவறான கருத்தாகும்.
அதிக 'கோர்' எனில் கூடுதல் திறன் ப்ராசசர்:
சில ஆண்டுகளாகவே, மொபைல் போன் ப்ராசசர் குறித்து தகவல் தருகையில், டூயல் கோர், குவாட் கோர், ஆக்டா கோர் என விளம்பரப்படுத்துகின்றனர். இது ஏற்கனவே, கேமரா மற்றும் பேட்டரியின் பயன் நாள் குறித்த தகவலைப் போன்றதுதான். ஒரு ப்ராசசரில் அதிக 'கோர்' இருப்பதனாலேயே, குறைவான 'கோர்' இருக்கும் ப்ராசசரைக் காட்டிலும், வேகமாக இயங்கும் என்பது தவறு. ப்ராசசர் ஒன்றின் செயல் திறனை பல அம்சங்கள் முடிவு செய்கின்றன. கோர் மட்டுமல்ல. முதலில் 'கோர்' என்னவென்பதைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட multi core processor என்பது, ஒரே ஒரு கம்ப்யூட்டிங் சிப் ஆகும்.இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில், ப்ராசசிங் அலகுகள் இருக்கும். இந்த அலகுகளைத் தான் 'கோர்' (Core) என்கின்றனர்.
ஒவ்வொரு ப்ராசசிங் அலகும் தனித்தனியே தகவல்களைச் செயல்படுத்தி முடிவுகளை அனுப்பும். ஆனால், அவையே ஒரு ப்ராசசரின் தனித் திறனை தீர்மானிக்கும் என முடிவு செய்திடக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஆப்பிள் போன்களையும் சாம்சங் போன்களையும் ஒப்பிடலாம். ஆப்பிள் ஐபோன் 6 எஸ் அல்லது 6 எஸ் ப்ளஸ் ஆகியவற்றையும் சாம்சங் காலக்ஸி எஸ்6 எட்ஜ் அல்லது நோட்5 ஐயும் ஒப்பிடலாம். இரண்டு ஆப்பிள் போன்களிலும், ஆப்பிள் ஏ9 சிப்செட்கள் உள்ளன. இவை இரண்டு கோர்களை உடையவை. சாம்சங் நிறுவன சாதனங்களில், ஆக்டா கோர் எக்ஸைனோஸ் சிப்செட்கள் பொருத்தப்பட்டு இயங்குகின்றன. சாம்சங் சாதனங்களில் உள்ள எக்ஸைனோஸ் ப்ராசசரை டூயல் கோர் என்று அழைப்பது பொருந்தும். இவற்றில் இரண்டு செட் குவாட் கோர் ப்ராசசர்கள் உள்ளன. ஆனால், ஒரு நேரத்தில், போன் ஆற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, ஒரு செட் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சாதனத்தில் உள்ளதைப் போல நான்கு மடங்கு அளவில் சாம்சங் போனில் உள்ள ப்ராசசர்களில் கோர் செட் இருந்த போதிலும், ஆப்பிள் 6 எஸ் ப்ளஸ் போனின் செயல்திறன், சாம்சங் போனில் உள்ள ப்ராசசரின் செயல் திறனுக்கு இணையாகத்தான் உள்ளது. இதிலிருந்து, ஸ்மார்ட் போன் ஒன்றின் செயல்திறன், அதன் ப்ராசசரில் உள்ள கோர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் அல்ல என்பது உறுதியாகிறது.
போனுடன் வரும் சார்ஜர்:
மொபைல் போனுடன் இணைத்து தரப்படும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. போன் தயாரித்த நிறுவனம், போனுக்கேற்ற வகையில் தயாரித்து தந்துள்ள சார்ஜர் மற்றும் கேபிளைப் பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால், அதே திறன் குறிப்புகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வழங்கப்படும், பிற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். தர்ட் பார்ட்டி தயாரித்து வழங்கும் சார்ஜரும், மொபைல் போன் தயாரித்த நிறுவனம் வழங்கிய சார்ஜரின் பவர் ரேட்டிங் கொண்டிருந்தால், அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. போனுடன் வந்த சார்ஜரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பவர் ரேட்டிங் வித்தியாசமாக உள்ள சார்ஜரைப் பயன்படுத்தினால் என்னவாகும்? என்ற வினா எழலாம். உங்களுடைய ஸ்மார்ட் போன் 1.5A சார்ஜருடன் தரப்பட்டதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வேறு நிறுவனம் தயாரித்து வழங்கிய 1.2A சார்ஜரைப் பயன்படுத்தி, போனை சார்ஜ் செய்திடலாம். இதில் வேறுபாடு என்னவென்றால், உங்கள் போன் அதன் நிறுவன சார்ஜர் மூலம் சார்ஜ் செய்திட எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டிலும், சற்று கூடுதலான நேரத்தை சார்ஜ் செய்திட எடுத்துக் கொள்ளும். மற்றபடி வேறு எந்த ஊறு விளைவிக்கும் விளைவுகள் எதுவும் ஏற்படாது.
ஆனால், அதற்கு 2A சார்ஜர் பயன்படுத்தினால், தொடர்ந்து பயன்படுத்துகையில், ஸ்மார்ட்போன் மற்றும் பேட்டரிகளில் பிரச்னை ஏற்படலாம். ஏனென்றால், அவை 1.5A சார்ஜருடன் சார்ஜ் செய்திடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருப்பதால், நிச்சயம் அவற்றின் செயல் திறன், நீண்ட காலத்திற்குப் பின் முடக்கப்படலாம். எனவே, திறன் கூடிய சார்ஜரை, அவசரத்திற்கு, வேறு சார்ஜர் இல்லாத நிலையில் ஓரிரு முறை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துவது தவறு.
கருத்துரையிடுக Facebook Disqus