0
ப்ளாஷ் ட்ரைவ்களைத் தயாரித்து வழங்குவதில் முன்னணியில் உள்ள SanDisk நிறுவனம், அண்மையில், முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் இயங்கும், வித்தியாசமான பயன்பாட்டினைத் தரும் ப்ளாஷ் ட்ரைவ் ஸ்டிக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் SanDisk Connect Wireless Stick. 

ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, ஒரு கம்ப்யூட்டரிலிருந்து பைல்களைக் காப்பி செய்து எடுத்துச் செல்லலாம். அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அதிலிருந்தும் பைல்களைக் காப்பி செய்து கொள்ளலாம். பைல்களை சேமித்து வைக்கும் சாதனமாகவும், எடுத்துச் செல்லப் பயன்படும் சாதனமாகவும் ப்ளாஷ் ட்ரைவ் பயன்படுகிறது. 

தற்போது அறிமுகமாகி உள்ள SanDisk Connect Wireless Stick ஒரு வை பி சர்வராகவும் செயல்படுகிறது. இதில் காப்பி செய்யப்பட்ட பைல்களை, இது தரும் வை பி இணைப்பு மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் பகிர்ந்து கொள்ளலாம். இதன் உள்ளிருக்கும் பேட்டரி, இதனை நான்கு மணி 30 நிமிட நேரம் செயல்பட வைக்கிறது. இதில் உள்ள அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட வை பி இணைப்பு இதில் தரப்படுகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்: 

 வயர் இணைப்பு இன்றி, வை பி இணைப்பு மூலம், நம் போட்டோ, விடியோ மற்றும் டாகுமெண்ட் பைல்களை சேவ் செய்து, தேவைப்படுகையில், அதே முறையில் அணுகிப் பெற்றுப் பயன்படுத்துதல்.ஒரே நேரத்தில், ஹை டெபனிஷன் விடியோ பைல்களை, மூன்று சாதனங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி. வயர் இணைப்பு இன்றிப் பயன்படுத்துவதுடன், யு.எஸ்.பி. போர்ட் ஒன்றில் இணைத்தும் வழக்கமாகப் பயன்படுத்துவதுபோலப் பயன்படுத்தலாம்.

16, 32, 64 மற்றும் 128 ஜி.பி. கொள்ளளவுகளில் இது கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2,790, ரூ. 3,790, ரூ. 5,490 மற்றும் ரூ. 9,490 ஆகும்.  இதனுள் லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதனை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். நம் வாழ்க்கை முறை மொபைல் சாதனப் பயன்பாட்டினைப் போல எப்போதும் நகர்ந்து கொண்டே ஓடிக் கொண்டே இருப்பதாக மாறிவிட்டது. அதற்கேற்ப இது போன்ற சாதனங்கள் நமக்குத் தேவையாய் உள்ளன. இது நிச்சயம் டிஜிட்டல் சந்தையில், நல்ல வரவேற்பினைப் பெறும்.

கருத்துரையிடுக Disqus

 
Top