0
p30a.jpg
டெபிட், கிரெடிட் கார்டுகளை மிரட்டும் ‘ஈஸி டிராக்கர் சிப்’

‘ஈஸியாக ஷாப்பிங் செய்யலாம்... கார்டை ஸ்வைப் பண்ணலாம்’ என நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை ஓர் எச்சரிக்கை. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டதால் மோசடிகளும் புது ரூபங்களில் வர ஆரம்பித்துவிட்டன.

 வங்கியில் உங்கள் அக்கவுன்டில் இருக்கும் பணம் உங்களுக்கே தெரியாமல் சுருட்டப்படுகிறது. கார்டுகள் மூலம் மோசடி செய்ய தனி நெட்வொர்க் ஒன்று செயல்படுகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் உள்ள தகவல்கள் நமக்குத் தெரியாமல் எப்படி களவாடப்படுகிறது என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்.

ஏ.டி.எம். இயந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை ரகசியமாகப் பொருத்தி அதன்மூலம் விவரங்களைச் சேகரித்து மோசடி நடந்து வருகிறது. ஸ்கிம்மர் கருவி, மிகச்சிறிய அளவிலானது. ஒரு சில நிமிடங்களில் ஏ.டி.எம்-மில் பொருத்திவிடலாம். அந்த ஏ.டி.எம். மெஷினில் நமது கார்டை பயன்படுத்தும்போது, நமது கார்டின் தகவல்கள் பதிவாகிவிடும். அதை வைத்துத்தான் மோசடி செய்கிறார்கள்.

 ‘ஒரு ஏ.டி.எம். கார்டில் இருந்து 5 முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதலாக 20 ரூபாய் பிடிக்கப்படும்’ என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதில் சில வங்கிகளுக்கு விதிவிலக்கு. அதனால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வது, பெட்ரோல் போடுவது அதிகரித்திருக்கிறது. இது மோசடி கில்லாடிகளுக்கு வசதி ஆகிவிட்டது.

‘ஈஸி டிராக்கர் சிப்’ என்றழைக்கப்படும் நவீன ஸ்கிம்மர் கருவியை மோசடி பேர்வழிகள் தங்களுடைய வங்கி டெபிட் கார்டில் ரகசியமாகப் பொருத்திவிடுகின்றனர். அதிக வாடிக்கையாளர்கள் வரும் கடைகளுக்குச் சென்று அந்த கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்கின்றனர். இந்த கார்டை பயன்படுத்தி உடனே ஸ்வைப் செய்ய முடியாது. இரண்டு, மூன்று முறை ஸ்வைப் செய்த பிறகுதான் பொருட்களை வாங்க முடியும். காரணம், அந்த கார்டில் இருக்கும் ஈஸி டிராக்கர் சிப். இது கடையில் இருப்பவர்களுக்குத் தெரியாது. இப்படி அடுத்தடுத்து ஸ்வைப் செய்யும்போது அதில் இருக்கும் ஈஸி டிராக்கர் சிப், ஸ்வைப் மிஷினில் போய் ரகசியமாக உட்கார்ந்துவிடும். அடுத்ததாக அந்த மிஷினில் தேய்க்கப்படும் கார்டுகளின் அனைத்துத் தகவல்களும் ‘ஈஸி டிராக்கர் சிப்’பில் பதிவாகிவிடும். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே கடைக்குச் சென்று அந்த மோசடி நபர் ஷாப்பிங் செய்வான். தன்னுடைய கார்டை ஸ்வைப் செய்தால் அந்த மிஷினில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட ஈஸி டிராக்கர் சிப் மீண்டும் அந்த நபரின் கார்டில் ஒட்டிக்கொள்ளும். இடைப்பட்ட இரண்டு நாட்களில் இந்த மிஷினில் தேய்க்கப்பட்ட கார்டுகளில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் மோசடி நபரின் கார்டுக்கு வந்துவிடும். இப்படித்தான் கார்டுகளின் விவரங்களைத் திருடி மோசடியை அரங்கேற்றுகிறார்கள். டூப்ளிகேட்டாக கார்டுகளைத் தயாரித்து மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

அக்கவுன்டிலிருந்து பணம் எடுக்கப்பட்ட விவரம் நமக்குத் தெரியவந்தாலும், அந்த மோசடி எப்படி நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஈஸி டிராக்கர் சிப்பைப் பயன்படுத்தும் மோசடி பேர்வழிகளின் முகவரிகள் எல்லாம் பொய்யானவை. அதனால் அவர்களைக் கண்டுபிடிப்பதும் சிக்கல்தான். தென்கொரியாவைச் சேர்ந்த சில மாணவர்கள்தான் இந்த மோசடியில் கில்லியாக இருக்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்த சிலரும் இந்த மோசடியில் ஈடுபட்டு சிக்கியிருக்கிறார்கள்.

p30.jpg
அடுத்து வைஃபை மோசடி. லேப்டாப், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் வசதிக்காக இலவச வைஃபை வசதி மக்கள் கூடும் இடங்களில் அளிக்கப்படுகிறது. ‘வைஃபை பைன்ஆப்பிள்’ என்ற சீன நாட்டுக் கருவி மூலம் இலவச வைஃபை வசதியை வழங்குகிறார்கள் மோசடி பேர்வழிகள். ‘வைஃபை பைன்ஆப்பிள்’ பொருத்தப்பட்ட இடங்களில் வைஃபையை பயன்படுத்துகிறவர்கள் தாங்கள் அக்கவுன்ட் வைத்திருக்கும் வங்கியின் நெட்பேங்க்குக்குச் சென்று பரிமாற்றங்கள் செய்யும்போது பாஸ்வேர்டு, யூஸர் ஐ.டி. மற்றும் கார்டுகளின் விவரம் முதலியவை இந்த வைஃபை கருவி மூலம் திருடப்படுகின்றன.

மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “ஸ்கிம்மர் கருவி, டூப்ளிகேட் கார்டு, ஆன்லைன் மோசடி உள்ளிட்ட ஐந்து வகையான இணைய மோசடிகள் நடக்கின்றன. இதைத் தடுக்க ஏ.டி.எம். பயன்பாட்டில்  பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தலாம். அனைத்து வங்கிகளும் கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர்களின் முகவரிகளைச் சரிபார்க்க வேண்டும். பணப் பரிவர்த்தனையின்போது அதை வங்கிகள் உறுதிப்படுத்த எஸ்.எம்.எஸ். முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.


‘‘நான் 420 பேசுறேன்...’’
ராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்த டீச்சர் ஒருவருக்கு போன். ‘‘வங்கியிலிருந்து பேசுறேன். உங்க ஏ.டி.எம். காலாவதியாகி விட்டது. புதுப்பிக்க சில விவரங்கள் வேண்டும்’’ எனச் சொன்னதும் உஷாரான டீச்சர் இணைப்பைத் துண்டித்துவிட்டார். சில நிமிடங்களில் சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து வருவதைப்போல எஸ்.எம்.எஸ். டீச்சரின் செல்போனுக்கு வந்திருக்கிறது. அதன்பிறகு, மீண்டும் அந்த நபர் போனில் டீச்சருடன் பேசி இருக்கிறார். வங்கியிலிருந்து எஸ்.எம்.எஸ். வந்ததால் அதை நம்பி அந்த டீச்சர், ஏ.டி.எம். நம்பர், சி.வி.வி. எண் என அனைத்தையும் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு அக்கவுன்டில் இருந்து 70 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டுவிட்டது. பணத்தைப் பரிமாற்றம் செய்யும்போது ஓ.டி.பி. எண் கேட்டதால் அதையும் போன் செய்து டீச்சரிடம் வாங்கியிருக்கிறான் மோசடி பேர்வழி. பணத்தைப் பறிகொடுத்த டீச்சர் வங்கியிலும் போலீஸிலும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. போனில் பேசியவர் செல்போன் நம்பரை ட்ரூகாலர் மூலம் தேடியபோது பெயருக்குப் பதில் 420 என்றும், உத்தரப்பிரதேசம் என்றும் காட்டுகிறது.

உஷார் டிப்ஸ்!
dot1.jpg கிரெடிட், டெபிட் கார்டுகளில் சிப் வசதி உண்டு. காணாமல்போகும் கார்டுகளில் இருந்து சிப்பை எடுத்து, புதிதாக ஒரு சிப்பை உருவாக்கிவிடுகிறது மோசடிக் கும்பல். அதன்மூலம் பணத்தைச் சுருட்டிவிடுகின்றனர். கார்டு தொலைந்தால் பின் நம்பர் வேண்டுமே என அஜாக்கிரதையாக இருந்துவிட முடியாது.

dot1.jpg கால் டாக்ஸி நிறுவனம் ஒன்றின் ஆப்ஸை அதிகம் பேர் டவுண்லோடு செய்தார்கள். அப்படிச் செய்தவர்களின் விவரங்களையும் சைபர் கிரிமினல்கள் ஹாக் செய்துவிட்டார்களாம். அதனால் ஆப்ஸ் டவுண்லோடிலும் கவனம் தேவை.

dot1.jpg ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன் படுத்துபவர்கள், புதிய நபர்கள் அனுப்பும் மெயில்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சைபர் கிரிமினல்கள், மெயில்கள் மூலம் ஸ்மார்ட் போன்களில் வைரஸை பரப்புகின்றனர். அதன் மூலம் மோசடியை நிகழ்த்துகிறார்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top