0
project_loon.jpg



அடுத்த 2016 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனத்தின், பலூன் வழி இணைய வசதி தரும், லூன் (Loon) திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படும். 2013 ஆம் ஆண்டே, இந்த அறிவிப்பினை, கூகுள் வெளியிட்டிருந்தது. ஆனால், அப்போது இந்திய அரசின் அனுமதியினைப் பெறுவது சற்று சிரமமானதாக, கூகுள் நிறுவனத்திற்கு இருந்தது. தற்போது, எந்த தடையும் இன்றி, லூன் திட்டத்தினை அமல்படுத்த அரசின் அனுமதியை, கூகுள் நிறுவனம் பெற்றுவிட்டது. “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2013ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோது, இந்திய மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வரும் சில மாதங்களில், இது செயல்படுத்தப்படுவதனைக் காண இருக்கிறார்கள்.


இந்திய அரசு, மத்திய அரசின் செயலாளர் ஒருவரின் தலைமையில், இந்த திட்டத்தினைக் கணகாணிக்க குழு ஒன்றை அமைக்கும். ஏற்கனவே, இந்த சேவை, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் சோதனை செய்யப்பட்டு, வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.  லூன் திட்டத்தில், பூமியிலிருந்து 20- கிலோ மீட்டர் உயரத்தில், பெரிய அளவிலான பலூன்கள் பறக்கவிடப்பட்டு, அதில் அமைக்கப்பட்டிருக்கும் இணைய சர்வர்கள் மூலமாக, பலூன்கள் பறக்கும் உயரத்திற்குக் கீழாக வசிக்கும் மக்களுக்கு, இணைய இணைப்பு வழங்கப்படும். இந்த பலூன் மற்றும் அதில் அமைக்கப்படும் டிஜிட்டல் சாதனங்களுக்குத் தேவையான மின்சக்தி, சோலார் பேனல் மற்றும் வேகமாக வீசும் காற்றிலிருந்து நாள் முழுவதும் பெறப்படும். இந்த சாதனங்கள், தரையில் உள்ள சாதனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, வலைப்பின்னல்களை உருவாக்கி, இணையம் பயன்படுத்தத் தேவையான டிஜிட்டல் அலைகளை பூமியில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பும். கூகுள் இணைய தளத்தில், http://www.google.co.in/loon/ என்ற முகவரியில் உள்ள பக்கத்தில் மேலும் இது குறித்து அறிந்து கொள்ளலாம்.


இந்தியாவில், இந்த திட்டத்தில், கூகுள் நிறுவனத்துடன், பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல். நிறுவனம் செயல்படலாம். இதற்கென, 2.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பயன்படுத்தப்படும். இதற்கு அரசும் ஒத்துக் கொண்டுள்ளது. கூகுள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் Google X Labs நிறுவனப் பிரிவு இதனை இயக்கும். இயற்கை மற்றும் காற்றூடாக இணைய இணைப்பு வழங்குவதென்பது என்பது, முற்றிலும் புதியதொரு திட்டமாகவே உள்ளது. பெரிய அளவில் சிந்தனையும், சாதனங்களும், இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.


ஒவ்வொரு பலூனும் 4 கி.மீ. விட்ட அளவிலான வட்ட பரப்பளவில், இணைய இணைப்பினை வழங்கும். எல்.டி.இ. என அழைக்கப்படும், 4ஜி தொழில் நுட்பத்திற்கு இணையானது இது. ஒவ்வொரு பலூனும், குறைந்தது ஆறு மாதம் விண் வெளியில் பறந்து செயல்படும் வகையில் அமைக்கப்படும். கூகுள், இந்த திட்டத்திற்கு உதவி செய்திடும் நிறுவனமாகவே இயங்கும். இணைய சேவை வழங்குவதை, இந்திய நிறுவனம் மட்டுமே எடுத்துச் செயல்படுத்த வேண்டும். பேஸ்புக் நிறுவனமும், இதே போன்று மனித உதவியின்றி, விண்ணில் பறக்கும் சாதனங்கள் மூலம், இணைய சேவை வழங்கும் திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. போகிற போக்கினைப் பார்த்தால், இனி மொபைல் மற்றும் இணைய சேவைக்கென, எந்த டவரும் தேவைப்படாது போல உள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top