0

 
திருப்பூர் சரவண பவன்ல ஒருநாள் காலை பத்து மணி இருக்கும்.. நான் ஒரு ரோஸ்ட் ஆர்டர் செஞ்சேன்..

சர்வர் ரோஸ்ட்டை எனக்கு போட்டு சாம்பார் மட்டும் ஊத்தினார். சட்னி தீந்து விட்டது , லேட்டா வந்தா இப்படித்தான் என்று என் முகம்பாக்காமலே சொல்லிட்டு அவர்பாட்டுக்கு போயிட்டார்.

நான் சத்தமில்லாம சாப்பிட்டுட்டு பில்லை கொடுக்கும் டேபிளில் சென்று 40 ரூபாய்க்கு 30 ரூபா மட்டும் கொடுத்தேன்..

அவர் இன்னும் பத்து எங்க என்றார்.. நான் ரோஸ்ட்டுக்கு சட்னி உங்க ஆள் இல்லைன்னு சொல்லிட்டார் அதனாலதான் சட்னிக்காசு தரவில்லைன்னு சத்தமா அங்க சாப்பிட்டுட்டு இருக்கவங்க எல்லாருக்கும் கேக்குறமாதிரி சொல்லிட்டு நாம்பாட்டுக்கு கிளம்பிட்டேன்..

நான் சரவணபவன் போன்ற பெரும் கார்ப்பரேட் உணவகங்களுக்கு அதிகம் போவதில்லை.. 
 
எங்கள் சர்வீஸ் சென்ட்டர்க்கு பக்கத்தில் இருக்கும் ஆத்தா கடையில்தான் இட்லி சாப்பிடுவது வழக்கம். அந்த ஆத்தா கடையில் லேட்டா போனா சட்னி இல்லச்சாமி.. சாம்பார்தான் இருக்குதுன்னு ரொம்ப வருத்தத்தோடு சொல்லும். 
 
நான் பரவால்ல ஆத்தா 4 இட்லி போதும்னு சொல்லி சாப்பிட்டு எழும்போது இந்த 4 இட்லி வவுத்துக்கு பத்துமா.. உன்ன ரெண்டுபோட்டுக்க கண்ணுன்னு சொல்லி பக்கத்தில் நின்னு இட்லிய போட்டுட்டு தோள் தட்டி நம் தலை கோதும் பாருங்க.. யப்பப்பா..

சட்னி என்ன.. சாம்பார் கூட இல்லாமல் 10 இட்லி சாப்பிடலாம்...




அதுபோக ஆத்தா என்னைக்குமே இலையில் வைக்கும் இட்லிகளை கணக்கு வைக்காது.. சாப்பிட்டு விட்டு நாம் சொல்வதே கணக்கு....




ஆத்தா எங்களை விட்டு போயே விட்டது....
ஆம்
 
சில நாட்களாக ஆத்தாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் கடை திறக்க வில்லை.. சில நாள்கள் கழித்து மீண்டும் கடை திறந்த ஆத்தாவிடம் ஏன் என்னாச்சு ஆத்தான்னு கேட்டேன்... செரியான காச்சல்டா.. எதுக்க நிக்கும் ஆளே தெரீல .. போய்ச்சேந்துருந்தா அஞ்சாறு நாள் ஆயிருக்கும்டா என்றது சிரித்துக்கொண்டே.. இறப்பைக்கூட சிரிப்பாய்ச்சொல்லும் உனக்கு சாவே வராதாத்தா என்று ஆத்தாவின் கண்ணத்தைக் கிள்ளிவிட்டு வந்தேன்..
 
ஆனால் இன்று அன்னமிட்ட எங்கள் ஆத்தா கூடு துறந்து சென்றே விட்டது..

ஆத்தாவைப் பற்றி நான் போட்ட இந்த பதிவு என் முகநூல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல்...

(சுமார் 1200 பேர் சேர் செய்த பதிவு)

ஆத்தாவின் ஆன்மாவுக்காக மீண்டும் இந்தப் பதிவு...


கருத்துரையிடுக Disqus

 
Top