0
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஏற்றமோ அல்லது இறக்கமோ அவை தொடர்ந்து நீடிப்பதற்கோ அல்லது சரி செய்வதற்கோ, உரிய முடிவு எடுப்பதற்கு அல்லது தகுந்த ஆலோசனை வழங்குவதற்கு இவ்வுலகில் சிறந்த உறவாக வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கிடைக்கக்கூடியது உறவு ஒன்றே ஒன்றுதான்! ஆம்!...அவர்கள் நம் நண்பர்களே!

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, "பன்னாட்டு நட்பு தினமாக" கொண்டாடப்படுகிறது. அதாவது வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இவ்வாண்டின் நட்பு தினக் கொண்டாட்டங்கள் களை கட்டப்போகிறது.

நண்பர்கள் வட்டாரம் என்பது எல்லோருக்கும் உண்டு என்றாலும், சிறந்த நண்பர்களாக அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இருக்க முடியும். பெரும்பாலும் அவர்கள் நம்முடன் இணைவது நமது பால்ய வயதில்தான். பிற்கால வாழ்க்கைப்போராட்டத்தில் அவர்களை நாம் தொலைத்திருக்கலாம். நீண்ட காலமாக அவர்களின் தொடர்பு முகவரி மற்றும் எண்கள் கிடைக்காமல் வருத்தப்படுவோர் நம்மில் பெரும்பாலானோர் உண்டு.

தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி பலவற்றை சாத்தியப்படுத்தி வரும் நிலையில், உங்கள் நண்பர்களின் தற்போதைய நிலையை அறிய உதவும் இணையதளங்களை பற்றி இப்போது காணலாம்.

1. Alumni.net
உலகம் முழுவதும் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இதில் உறுப்பினர் குழுக்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்த இணையதளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுவதால், அதிகபட்ச தகவல்களை கொண்டுள்ளது. உங்கள் நண்பர்களை தேட வேண்டுமென்றால் முதலில் தளத்தில் நுழைந்தவுடன் உங்களுக்கென கணக்கொன்றை இலவசமாக உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்பு உலகம்-ஆசியா-இந்தியா-தமிழ்நாடு என வரிசையாக தேர்வு செய்தபின் ஆங்கில அகர வரிசைப்படி இருக்கும் உங்கள் ஊரின் பெயரை தேர்வு செய்யவும்.நீங்கள் தேர்வு செய்த ஊரில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களின் பெயர்களை அது காண்பிக்கும்போது உங்களுக்குரியதை தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களால் அதன் உறுப்பினர்களை காண இயலும்! பின்ன என்ன உங்கள் நண்பர் அதில் இருந்தால் ஜஸ்ட் ஒரு ''பிரண்ட் ரெக்வெஸ்ட்'' கொடுத்து நட்பை கொண்டாடுங்கள்!

2. Batchmates.com
இந்தியாவை சேர்ந்த சர்வதேச இணையதளமான இது தினமும் 4500 நண்பர்களை இணைத்து வைப்பதாக கூறுகிறது. நீங்களும் உங்கள் நண்பரை தேடுவதற்கு, முதலில் ஒரு பயனர் கணக்கை இலவசமாக தொடங்கி கொள்ளலாம்.பிறகு உங்களை பற்றிய தேவையான தகவல்களை பதிவேற்றியபின் இணையதளத்தின் முகப்பில் உள்ள தேடுமிடத்தில் உங்கள் நண்பரின் பெயரையோ அல்லது பள்ளி, கல்லூரி அல்லது நிறுவனத்தின் பெயரையோ இடுவதன் மூலம் கண்டறியலாம். மேலும், இதில் ஏற்கனவே தொடர்பில் உள்ள நண்பர்களிடையே புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்பது தனிச்சிறப்பு.

3. Innfriend.com
ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த இணையதளத்தில் எளிமையாக கணக்கு துவங்கலாம். கணக்கொன்றை துவங்கியபின் தேவையான தகவல்களை நிரப்பி உங்கள் பக்கத்தை பக்காவாக வைத்திருப்பது நலம். மற்ற தளங்களை போன்று இதிலும் உங்களின் நண்பரை, கொடுக்கப்பட்டுள்ள சாதாரண தேடல் மற்றும் அட்வான்ஸ்ட் ஆப்ஷன்-ஐ பயன்படுத்தி கண்டறியலாம். உங்களின் நண்பர்கள் அவர்களின் முகவரியோ அல்லது ஏதாவது தொடர்பு தகவலை மாற்றினால் உங்களுக்கு தானாக ஒரு நோட்டிபிகேஷன் வந்துவிடும் என்பது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.

4. Facebook.com
நாம் பொதுவாக நினைப்பதைப்போன்று ஃபேஸ்புக் என்பது வெறும் போஸ்ட்கள் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை பதிவிடவும், பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாது நிகழ்ச்சிகளை உருவாக்கவும், விளம்பரப்படுத்தவும், கேம்ஸ் விளையாடவும் மற்றும் உங்கள் பழைய நண்பர்களை தேடும் சிறப்பானதொரு வசதி போன்ற பல்வேறு சேவைகளையும் அளிக்கிறது.நீங்களும் உங்கள் நண்பரும் படித்த பள்ளி, கல்லூரி, நிறுவனம் அல்லது உங்கள் மின்னஞ்சல் தொடர்புகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கின் 171 கோடி பயனர்களில் ஒருவராக உங்கள் நண்பர் இருந்தால் ஒரு சில வினாடிகளில் அவரை கண்டுபிடிக்கலாம். இதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுன்ட்டில் உள் நுழையவும். அந்த பக்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் "Find Requests" என்பதை தெரிவு செய்தவுடன் திறக்கும் விண்டோவில் இருக்கும் "Find Friends" என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக திறக்கும் விண்டோவில் வலதுபுறத்தில் இருக்கும் முதல் வாய்ப்பான "Add Personal Contacts" மூலம் உங்கள் மின்னஞ்சல் உரையாடல்களை பயன்படுத்தியும், இரண்டாம் வாய்ப்பாக அதற்கு கீழ் உள்ள "Search for Friends" என்பதை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் நண்பரின் பள்ளி, கல்லூரி, அலுவலகம் சார்ந்த தகவல் அல்லது கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு விருப்பத்தேர்வை பயன்படுத்துவதன் மூலம் கண்டறிவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்!

5. Almaconnect.com
புது தில்லியில் வெறும் பத்து இளைஞர்களால் நடத்தப்படும் இந்த தளம், 'இந்தியாவின் முதல் சர்வதேச சமூக வலைத்தளமாகும்'. இந்த தளத்தின் முக்கிய நோக்கமாக, இந்நாள் மாணவர்கள் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறுதல், வேலைக்கு பரிந்துரைத்தல், பல்வேறு காரணங்களுக்காக நிதி திரட்டுதல் மற்றும் கல்லூரி நிர்வாகம் அதன் முன்னாள் மாணவர்களோடு தொடர்பில் இருப்பதற்கு பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைவதற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.உதாரணமாக, உங்கள் கல்லூரியில் படித்த/படிக்கும் மாணவர்களை ஆண்டு, துறைவாரியாக மிக எளிதாக கண்டறிந்து அவர்களோடு உரையாட முடியும். மேலும், இத்தளத்திலுள்ள பதிவுகளை மற்ற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் லிங்கிடினில் பகிர்வதற்கான வசதியும் உள்ளது. அப்புறம் என்ன, ஸ்வீட் எடுங்க, நண்பர்களோடு கொண்டாடுங்க!

கருத்துரையிடுக Disqus

 
Top