0

கூகுள் நிறுவனம், சென்ற வாரம் YouTue Kids என்ற செயலியை, இந்தியாவிற்கு வழங்கியது. இது ஓராண்டுக்கு முன்பாக, மற்ற நாடுகளில் அறிமுகமானது. இது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமைகளில் இயங்கும் வகையில் செயல்படுகிறது. அத்துடன், ஆப்பிள் டி.வி. மற்றும் ஸ்மார்ட் டி.வி.க்களிலும் இயங்கும்.இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது குழந்தைகளுக்கானது. தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்தும், கல்வி சார்ந்தும் காணொளிப் படங்களை இதன் வழி பெற முடியும்.

சிறுவர்களுக்கேற்ற வகையில், பெரிய அளவிலான ஐகான்களும், படங்களும் இதன் பயனர் இடைமுகத்தில் காட்டப்படுகின்றன. குரல்வழி தேடல் வசதி இதில் இணைந்தே கிடைக்கிறது.

சிறுவர்கள் தாங்கள் விரும்புவதைத் தங்கள் பேச்சு வழக்கிலேயே பெறும் வகையில் இது செயல்படுகிறது. இந்தியாவில் இந்த செயலி, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் சிறுவர்களுக்கென தயாரிக்கப்பட்ட விடியோ பைல்களைக் கொண்டுள்ளன. அத்துடன், தேடல் மூலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான விடியோக்களைப் பெறலாம். யு ட்யூப் தளத்திற்கெனப் படங்கள் தயாரிக்கும் பல நிறுவனங்களுடன் கூகுள் தொடர்பு கொண்டு, சிறுவர்களுக்கான யு ட்யூப் படங்களைத் தயாரித்து வழங்கக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செயலியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன பார்க்கலாம், எவற்றைப் பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டினைக் கொள்ள முடியும். இதன் மூலம் தங்கள் குழந்தைகள் இணையத்தில் எவற்றைப் பார்க்கிறார்கள் என்று கண்காணிக்க முடியும். இருப்பினும், இந்த வசதி அவ்வளவு முழுமையானதாகச் செயல்படவில்லை என்றும், விடியோக்களைக் காண்பவர்கள், தங்கள் குழந்தைகள் காணக் கூடாத விடியோக்களைக் கண்டால், அது குறித்து உடனே தகவல் தரும்படி, கூகுள் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தங்கள் குழந்தைகள், தேடல் வழிகள் மூலம், விடியோக்கள் பெறுவதையும் மொத்தமாகத் தடுக்கும் வழியும் தரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரம் மற்றும் கால அவகாசத்தில் மட்டுமே பார்க்கும்படி, சிறுவர்களைக் கட்டுப்படுத்தவும் வழிகள் தரப்பட்டுள்ளன. இந்த செயலிக்கான, செட்டிங்ஸ் அமைப்பிற்கெனத் தனியே பாஸ்வேர்ட் கொடுத்து, அவற்றை சிறுவர்கள் மாற்றி அமைக்க இயலாமல் செய்திட முடியும் வசதியும் தரப்பட்டுள்ளது. ஐபோன்களுக்கான இந்த செயலியை itunes.apple.com என்ற இணைய தள முகவரியிலும், ஆண்ட்ராய்ட் இயக்க முறைமைக்கான செயலியை Play.Google.com என்ற முகவரியிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top