0
Related image
என் 90களில் இருந்த நினைவுகளை நினைக்கும் பொழுது மாறும் மனநிலை. பசுமையான கிராமம், பம்புசெட் குளியல், தென்னை மரம் ஏறுவது, கொய்யா மரத்தில் விளையாடியது, நொங்கு வண்டி ஓட்டியது, சாமிக்கு பூஜை செய்வது, அதுவும் விடுமுறை என்றால் இந்த கொண்டாட்டங்கள் இரட்டிப்பாகும். விடுமுறைக்கு எங்க அப்புச்சி வீட்டிற்கு போவேன். வீடு பழைய வீடா இருந்தாலும் அந்த சுண்ணாம்பு சுவர் கண்ணாடிபோல பிரதிபலிக்கும் சுவரில் அழுக்கே பாக்க முடியாது. பிள்ளை இல்லா வீடு அப்படித்தான் இருக்கும் போல. 

வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு பெரிய ஆசாரம் ஒரு மூலையில் சாவிகொடுக்கும் கடிகாரம் பக்கத்தில் சிங்கம் போல பிரம்மான்டமாக இருக்கும் வால்வு ரேடியோ. வீட்டுக்கு மேல் அந்த நீல ஆசாரம் அளவிற்கு ஒரு ஒயர் இருக்கும் அதுதான் இந்த வால்வு ரேடியோவிற்கு சுவாசம் தரும் ஏண்டனா. சுச்சை போட்டதும் முப்பது வினாடிகளும் அனைத்து வளவுகளும் செய்யல்பட தொடங்கும் இறுதியில் ஒரு பச்சை வால்வு ஒளிரும் பின் மெல்ல மெல்ல ஒலிப்பெருக்கி சத்தம் அதிகரிக்கும்.     

"ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி" இதைப் படிக்கும் போது மனம் காலை ஏழே கால் மணி பரபரப்பை உணர்ந்தது.

அந்த நேர ஸ்கூல் செல்லும் பரபரப்பு, அடுக்களையிலிருந்து மிதந்து வரும் சாம்பார் கொதிக்கும் மணம் எல்லாமே நினைவுக்கு வந்தன.

வானொலி என்ற பத்திரிகையும் அங்குதான் நான் பாத்திருக்கேன். சென்னை வானொலியில் வரும் நிகழ்ச்சியை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனக்காக சினிமா பாட்டும் அவருக்கு மனசிருந்தா போடுவார். சுவரில் கடிகாரம் காட்டும் நேரமும் ,அவர் கையில் உள்ள கடிகாரம் காட்டும் நேரமும், ரேடியோ அறிவிக்கும் நேரமும் ஒன்று போல் இருக்கும்படி பாத்துக்கொள்வார்.

''ரேடியோ" பொழுது போக்கு அம்சத்தை நம் வீட்டு கூடத்திற்கு கொண்டு வந்தது.

கடிகாரம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாமல் காதால் நிகழ்ச்சியைக் கேட்டே நேரம் தவறாமல் காரியங்களை நடத்திக் கொண்டிருந்தோம்!

'ஆகாஷவாணி'..... 'ஆல் இன்டியா ரேடியோ' ஆனது.

நேயர் விருப்பம் இன்றும் எனக்கு விருப்பமே! என்னைப் போல் நிறைய பேர் உண்டென்றே நினைக்கிறேன்.

உழவர் உலகம், சினிமா ஒலிச் சித்திரம், வர்த்தக ஒலிபரப்பில்வரும் இரவு 9:00 மணி தொடர் நாடகம், அதன் இசை, அதைத்தொடர்ந்து வரும் சினிமா விளம்பரங்கள் மறக்க முடியாதவை!

ரேடியோ அண்ணா என்று அறியப்பட்ட திரு அய்யாசாமி அவர்கள், பாப்பா மலர் நிகழ்ச்சியை வெகு சுவாரஸ்யமாக நடத்துவார். 'பாப்பா மலர் மலரும் நேரம் பறந்து வருவோமே...' என்ற பாடல் மறக்க முடியாதது.

இலங்கை வானொலியில் இரவின் மடியில் - பழைய பாடல்கள் நிகழ்ச்சி, அதிகாலை 'புலரும் பொழுது - பக்திப் பாடல்கள்'.... பலரும் விரும்பிக் கேட்கும் ஒன்று ஆகும். மரணச் செய்திகள் கூட வாசிப்பார்கள்!

இலங்கை வானொலியின் பிறந்த நாள் வாழ்த்து... வாழ்த்துகிறவர்கள் அம்மம்மா, அப்பப்பா, மாமி, மாமா ....... " என்று நீண்டு கொண்டே போகும் லிஸ்ட்டையே ரசிப்பவர்கள் நிறைய பேர்!

விவித்பாரதி, நாம் வணிகமயமாகப் போவதை முன்கூட்டியே நம் வீட்டிற்குள் வந்து அறிவித்தது.

அதில் வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சிக்கு அப்போதெல்லாம் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு! சினிமாப் பாட்டுக்கு மட்டுமல்ல, அதில் வந்த விளம்பரங்களுக்கு கூடத்தான் ரசிகர்கள்.

சாரிடான், நரசுஸ் காபி விளம்பரம்.... இது போல் நிறைய!

சினிமா பாட்டு மட்டுமல்ல, கர்நாடக சங்கீதமும், இசைவிழா, நாடக விழா எல்லாமே காதிற்கு விருந்து தான்.

இது மட்டுமா? கும்பாபிஷேகங்கள், வானிலை அறிக்கை, பெரிய தலைவர்களின் மரணச்செய்தி... எல்லாமே சட்டென்று வீடு வந்து சேர்ந்து விடும்.

வானிலை அறிக்கை படி மழையெல்லாம் வருமா? உஷ்... அதெல்லாம் கேட்கக் கூடாது!

அதற்குப் பிறகு transistor வந்தது. பார்ப்பதற்கும் ரேடியோவின் சிஸ்டர் தான். டேப் ரெகார்டர் வந்தும் ரேடியோவின் மவுசு குறையத்தானில்லை!

தற்போது FMகளின் ஆட்சி... கைபேசியிலேயே கேட்டுவிடலாம். ஆகவே இப்பொழுது ரேடியோ அவசியமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

இப்போது மூடி வைத்த துணியை எடுக்கும்பொழுது அதே கம்பீரத்தோடு இருக்கும் வால்வு ரேடியோ என்னை கொண்டுசெல்லும் அந்த 90களின் நாட்களுக்கு......

கருத்துரையிடுக Disqus

 
Top