சின்ன வயதில் உங்கள் அப்பாவிடம் வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறீர்களா? நான் சிறுவனாய் இருந்த போது எதையாவது செய்ய ஆசைப்பட்டு என் அப்பாவிடம் கேட்டு அவர் மாட்டேன் என்றால் ‘சுரேஷ் அதை செய்கிறான், ரமேஷ் இதை பண்றான், நான் பண்ணா என்ன’ என்று கேட்பேன். ‘அவன் செய்யறான்னு நீயும் செய்யணுமா? அவன் குளத்தில குதிக்கிறான், நீயும் குதிப்பியா’ என்று என் அப்பா கேட்பார்.
மற்ற மார்கெட்டர்கள் ஒன்றை செய்கிறார்கள் என்று அதை அப்படியே செய்ய முயலும் மார்க்கெட்டர்கள் இருக்கும் காலம் இது. நீங்களும் அந்த வர்க்கத்தை சேர்ந்தவர் எனில் உங்களையும் அதே கேள்வி கேட்கிறேன். ‘மற்றவர்கள் குளத்தில் குதிக்கிறார்கள் என்று நீங்களும் ஏன் அதே குளத்தில் குதிக்கிறீர்கள்’?
பிறர் செய்தால், அதுவும் பலர் செய்தால் அது சரியாக இருக்கும் என்கிற எண்ணம் பொதுவாகவே அனைவருக்கும் உண்டு. பலர் ஒரு படத்தை பார்க்கிறார்கள் என்றால் அது நல்ல படம், நாமும் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு புத்தகம் பத்தாயிரம் பிரதிகள் விற்றது என்றால் அது நல்ல புத்தகம், நாமும் வாங்குவோம் என்று ஆசைப்படுகிறோம். ஒன்றும் வேண்டாம், இரண்டு ஹோட்டல்கள் இருந்து ஒன்றில் கூட்டம் இருந்து மற்றொன்று காலியாக இருந்தால் எந்த ஹோட்டலில் போய் சாப்பிடுவீர்கள்? கூட்டம் அதிகம் இருப்பதால் அங்கு தான் உணவு நன்றாக இருக்கும் என்று கூட்டத்தில் முயற்சி செய்து முண்டியடித்து முன்னேறி முடியாவிட்டால் முட்டி போட்டுக்கொண்டாவது சாப்பிடுகிறோம்!
வாழ்க்கையில் தான் இப்படி என்றால் வியாபாரத்திலும் இதே கதை தான். மற்ற மார்க்கெட்டர்கள் ஒன்றைச் செய்கிறார்கள் என்றால் அது சரியாய் இருக்கும் என்று பலர் அதை வேதவாக்காக எண்ணி பயபக்தியுடன் கன்னத்தில் போட்டு கையெடுத்து கும்பிட்டு கர்ம சிரத்தையாக அதை காப்பி அடிக்கிறார்கள். இந்த எண்ணம் பலருக்குள் காலுன்றி நின்று வேரூன்றி வளர்ந்துவிட்டது. இதனால் விலாவரியாய் வில்லங்கங்கள், விஸ்தாரமாய் விபரீதங்கள்.
நோ பார்க்கிங் போர்டுகள்
விஸ்வரூபமாய் வளர்ந்து வரும் இந்த வயித்தெறிச்சல் விளங்க நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம், உங்கள் வீட்டு வாசல் கேட்டை பாருங்கள். எந்த புண்ணியவானோ தன் பிராண்டை பிரபலப்படுத்த ‘நோ பார்க்கிங்’ என்று போர்டு எழுதி அதில் தன் பிராண்ட் பெயரோடு வாசல் கேட்டுகளில் கட்டினார். தெருவில் போகிறவர் பிராண்ட் பெயரைப் பார்ப்பார்கள். பிராண்டிற்கு விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக. எவனோ எதையோ எழுதிவிட்டு போகிறான் என்று வீட்டுக்காரர்களும் விட்டுவிட்டனர்.
இதைப் பார்த்த மற்ற மார்க்கெட்டர்கள் `ஆஹா அந்த பிராண்டிற்கு ஓசியில் விளம்பரம் கிடைக்கிறதே, நாமும் அதையே செய்வோம்’ என்று தங்கள் பங்கிற்கு ‘நோ பார்க்கிங்’ என்று போர்டுகளில் தங்கள் பிராண்ட் பெயரோடு எழுதி கேட்டுகளில் தொங்கவிடத் துவங்கினர். காலப்போக்கில் இந்த விளம்பர காய்ச்சல் வளர்ந்து வியாதியாகி தொங்க விட கேட்டுகள் தீர்ந்து போய் ஆபத்திற்கு பாவமில்லை என்று நோ பார்க்கிங் போர்டு தொங்கும் கேட்டிலேயே இன்னொரு போர்டை தொங்க விடும் அளவிற்கு முற்றிவிட்டது.
இன்று பாதி வீட்டு கேட்டுகள் கண்ணுக்கே தெரியவில்லை. கேட்டை மறைத்துக்கொண்டு நோ பார்க்கிங் போர்டுகள் தான். வீட்டுகாரர்களே தங்கள் வீடுகளில் வண்டியை நிறுத்த பயப்படுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
`இருந்துவிட்டு போகட்டுமே, பிராண்டிற்கு ஃப்ரீயாய் விளம்பரம் கிடைக்கிறதே’ என்று நீங்கள் நினைக்கலாம். ஓசிதான், ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லாத ஓசி. யோசித்துப் பாருங்கள். அனைவரும் இப்படி போர்டு மாட்டும்போது நீங்களும் உங்கள் பங்கிற்கு போர்டு மாட்டினால் யார் கண்ணிலாவது உங்கள் பிராண்ட் படுமா? படாதிருப்பதால் பயன் உண்டா? ஒன்றும் வேண்டாம். உங்கள் வீட்டு கேட்டில் ‘நோ பார்க்கிங்’ போர்டு தொங்குகிறதா? எந்த பிராண்ட் பெயர் எழுதப்பட்ட போர்டு என்று பார்க்காமல் சொல்ல முடியுமா? அனைவரும் குளத்தில் குதிக்கிறார்கள் என்று குதித்ததால் என்ன ஆகும் என்று பார்த்தீர்களா!
இதே கதை தான் தொழிலில் பல விஷயங்களில் நடக்கிறது. விற்பனை மேம்பாட்டிற்கு எத்தனை செலவழிக்கிறீர்கள் என்று நான் சிலரை கேட்கும் போது அவர்கள் ஒரு பெரும் தொகையை கூறுவார்கள். ஏன் இத்தனை செலவழிக்கிறீர்கள் என்று கேட்டால் ஒரு போட்டியாளர் பெயர் சொல்லி ‘அந்த பாழாய் போறவன் அத்தனை செலவழிக்கிறான், நானும் செலவழித்து தொலைக்க வேண்டியிருக்கிறது’ என்பார்கள்.
நான் அவர் போட்டியாளரை சந்தித்து இதே கேள்வியை கேட்கும் போது அவர் இந்த தொழிலதிபர் பெயர் கூறி ‘என் உயிர எடுக்கரத்துக்கின்னே செலவழிக்கிறான், அவனோட மல்லுகட்ட நானும் செலவழிச்சு கொட்டறேன்’ என்று புலம்புவார்கள். இது போல் கோஷ்டியாய் குளத்திற்கு சென்று கோரசாய் குதிக்க ஒரு கூட்டமே காத்துக்கிடக்கிறது.
உங்கள் பிராண்டை பாதிக்கும் விஷயம் எது, அதை தீர்க்க என்ன செய்வது, அதற்கு எத்தனை செலவழிப்பது என்று இப்படியல்லவா சிந்திக்கவேண்டும்? அடுத்த புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் பூனையா நீங்கள்? அடுத்தவர் குதிக்கிறார் என்று ஏன் விளம்பர குளத்தில் குதிக்கிறீர்கள்? அது என்ன, புண்ணிய ஸ்தல புஷ்கரனியா, அனைவரும் குளிக்கிறார்கள் என்று குதிப்பதற்கு!
அடுத்தவர் செய்வதைப் பார்த்து தொழில் புரியாதீர்கள். அடுத்தவர் லோக்கல் கேபிள் சேனலில் விளம்பரம் செய்கிறார் என்று நீங்களும் அதில் விளம்பரம் செய்யாதீர்கள். `ஏதடா, சேடிலைட் சேனல்களே இத்தனை இருக்கும் போது லோக்கல் கேபிள் சேனலை யார் பார்க்கிறார்கள், அடுத்தவன் ஏதோ செய்துவிட்டு போகிறான், நாமும் அதையே செய்து பணத்தை இறைக்கவேண்டாம்’ என்று சிந்தியுங்கள். பக்தி கூட்டம் பரவசத்துடன் ஒரு பாதையில் போகிறதென்று நீங்களும் அதோடு சேர்ந்து கோவிந்தா போட்டுக்கொண்டு போகாதீர்கள்.
அடுத்த பிராண்ட் ’ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று கூறுகிறதா, அதையே நாமும் செய்வோம் என்று ஆரம்பிப்பது. அடுத்தவன் விலையை குறைக்கிறானா, நாமும் குறைப்போம் என்று முடிவெடுப்பது. போட்டி பிராண்ட் ஒரு நடிகையை கொண்டு விளம்பரம் செய்கிறதா, நாமும் ஒரு நடிகையை பிடிப்போம் என்று நினைப்பது தப்பாட்டம். ஆடாதீர்கள். மார்க்கெட்டிங் என்ன சனி பிணமா? தனியாய் போகாதா? கும்பலாய் போனால்தான் சாம்பலாய் போவேன் என்று பிணம் அடம் பிடிக்குமா?
மார்க்கெட்டிங் என்பது புதிய பாதையில் பயணிப்பது. புதிய சிந்தனைகளை பரவ விடுவது. அடுத்தவர் வாங்குகிறார் என்று வாங்க இது ஆதார் கார்டும் அல்ல. பலர் எடுக்கிறார்கள் என்று எடுக்க இது பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவும் அல்ல!
மார்க்கெட்டிங் என்பது பொருளை வித்தியாசப்படுத்தி காட்டுவது. மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுவது. பலர் கூட்டமாய் குதித்திருக்கிறார்கள் என்று நாமும் அதே குளத்தில் குதூகலத்துடன் குதித்து கும்மியடிப்பதல்ல. ரமேஷும் சுரேஷும் என்னவோ செய்து தொலையட்டும். நீங்களும் கண் மூடி அதையே செய்யாதீர்கள். தொழிலில் தெளிவு பெறுங்கள். தெளிவு பெற்றவுடன் சொல்லியனுப்புங்கள். அடுத்த கேள்வியோடு அடிக்க வருகிறேன்
கருத்துரையிடுக Facebook Disqus