மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர், இக்பால் மன்சூரி, 25. சென்னைக்கு, கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வந்த இவருக்கு, கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. 2002ல், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மதனகோபால் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தற்போது, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம்:
கடந்த, 2007ல், பரோலில் திருச்சிக்கு சென்ற இக்பால், அங்கு, தென்னூரைச் சேர்ந்த, பானு, 21, என்ற பெண்ணுடன், காதல் வயப்பட்டார். இருவரும், தங்கள் மொபைல் எண்ணை பரிமாறிக் கொண்டனர். இக்பால் பரோலில் இருந்தவரையில், போனிலும், நேரில் சந்தித்தும், தங்கள் காதலை பரிமாறிக் கொண்டனர். பெற்றோர் இல்லாத பானு, தன் உறவினர் பராமரிப்பில் இருக்கிறார். கொலை வழக்கு கைதி எனத் தெரிந்தும், இக்பாலை காதலிக்கும் பானு, இக்பாலின் தண்டனைக் காலம் முடிந்ததும், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தண்டனை காலம் முடிய, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இவர்கள் இருவரின் காதல் விவகாரம், பானுவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த பானுவை, வேலைக்கு செல்ல விடாமல், வீட்டில் தனி அறையில் அடைத்து, சித்ரவதை படுத்தியுள்ளனர்.
போலீசில் புகார்:
நண்பர் மூலமாக, இந்த விஷயத்தை அறிந்த இக்பால், சென்னையைச் சேர்ந்த
வழக்கறிஞர் நிர்மல்குமார் உதவியை நாடினார். இதையடுத்து, 28ம் தேதி,
திருச்சி, தில்லை நகர் போலீசாருக்கு, தொலைபேசி மூலம், வழக்கறிஞர் புகார்
அளித்துள்ளார். இதற்கிடையே, தென்னூரில், உறவினர் வீட்டில்
அடைக்கப்பட்டிருந்த பானுவுக்கு, உணவில் விஷம் கலந்து கொடுத்ததாகவும்;
புத்தூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,
வழக்கறிஞர் நிர்மல்குமார் மூலம் தெரிய வந்துள்ளது. சிறையில் இருக்கும்
இக்பால், "காதலியின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்' என,
வழக்கறிஞரிடம் கதறி வருகிறார்.