சீனாவில் வானத்தில் தோன்றிய பறக்கும் தட்டு போன்ற ஒரு உருவம் பலரையும் பீதி கொள்ள வைத்ததுடன், உலகம் அழியப் போகிறது என்ற வதந்தியையும் பரப்பி கதிகலங்க வைத்துவிட்டது.

சீனாவின் ஜிலின் மாகாணத்திலேயே இந்த பறக்கும் தட்டு உருவம் வானில் தெரிந்தது. அதையடுத்து, வேறு கிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு வானில் நிற்கின்றது என்ற பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டது. உலகை அழிப்பதற்காகவே பறக்கும் தட்டு வந்து சரியான நேரத்துக்காக காத்திருக்கின்றது என்ற வதந்தியும் பரவவே, திகில் பரவியது.

நீல வானத்தில், இந்த உருவம் மிக தெளிவாகவே தெரிந்தது. ஆரம்பத்தில் ஜிலின் மாகாணத்தில் மட்டுமே பீதி ஏற்பட்டிருந்த நிலையில், இந்த உருவம் சீன டி.வி. சேனல்களில் காட்டப்பட, மற்றைய மாகாணங்களிலும் பதட்டம் தொற்றிக்கொண்டது. மக்களின் பீதியை போக்குவதற்கு சீன அரசு படாதபாடு பட வேண்டியதாகி விட்டது.

யாரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பிம்பம்தான் என்று சீன அரசுக்கு சொந்தமான டி.வி. சேனலில் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அது தொடர்பான விஞ்ஞானிகளின் விளக்கமும் தொடர்ந்து ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. சுமார் இரண்டு மணி நேரத்தின்பின் வானில் இருந்த உருவம் சிறிது சிறிதாக மறையத் துவங்கி, முற்றாகவே இல்லாது போனது.

இது ஒருவகை மேகக் கூட்டம்தான். இப்படியான மேகக் கூட்டங்களை lenticular clouds என்று சொல்வார்கள். இவற்றின் நீள்வட்ட வடிவம், பறக்கும் தட்டை ஞாபகமூட்டக் கூடியது. இவ்வகை மேகக் கூட்டங்கள் பொதுவாக மலைகளுக்கு மேலேதான் தோன்றும். ஆனால் அரிதாக மலைகளுக்கு வெளியே காற்று மண்டலத்திலும் தோன்றுவதுண்டு.

எப்போதும் மழை ட்ரிசில் பண்ணும் பகுதிகளில் இவை தோன்றும். கடந்த காலங்களில், பிரிட்டனுக்கு மேலே இதே டைப் மேகக் கூட்டங்கள் தென்பட்டுள்ளன.

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் எடுக்கப்பட்ட கீழேயுள்ள போட்டோவை பாருங்கள். பீதியடைய காரணம் உள்ளதா என்பது புரியும்!
 
Top