0
நீங்கள் பஸ்ஸிலோ/காரிலோ போய்க் கொண்டிருக்கிறீர்கள். வெளியே ஒரு போஸ்டரில் இருக்கும் ஒரு விஷயம் உங்களை கவருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள். பஸ்/காரிலிருந்து இறங்கி போய் பார்ப்பீர்களா? அந்த போஸ்டரை மனப்பாடம் செய்வீர்களா? போஸ்டரில் இருக்கும் தகவல் ஏரியாக்களை மட்டும் (போன், இணைய முகவரி) நினைவில் வைத்துக் கொள்வீர்களா? யோசியுங்கள்.

QR code என்பதன் விளக்கம் Quick Responce Code. இது ஜப்பானியர்கள் கண்டுபிடித்ததாகும். இதனை ஸ்கேன் செய்வதால் அந்த நிறுவனம் அல்லது அந்த பொருளின் முழு விபரங்களும் தெரிந்து கொள்ளலாம். இதில் சாதாரன பார் கோடு ஸ்கேனில் கிடைக்கும் தகவல்களை விட அதிகமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.  நிறுவனங்கள் அந்த நிறுவனத்தில் இணைய தள முகவரி மற்றும் பல தகவல்களை இந்த கோடில் இணைக்கலாம்.

மொபைல் மூலம் ஸ்கேன் செய்யலாம். இதனை ஸ்கேன் செய்ய பல அப்ளிகேசன்கள் உள்ளன. அதில் ஒன்று QR Droid (or) Neo Reader. இதன் மூலம் QR Code-ஐ படம் பிடித்தால், அதில் உள்ள இணையதள முகவரிக்கு செல்லும்.

இந்தியாவில் கேமரா செல்பேசிகள், இருக்கும் செல்பேசிகளில் கிட்டத்திட்ட 70% அதில் இன்னமும் நாம் அனுஷ்கா படத்தைப் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதியதாய் கேமரா செல்பேசி வாங்கியிருந்தால், அந்த கேமராவில் காக்கா, குருவி, சூர்யோதயம், அஸ்தமனம் என சகட்டுமேனிக்கு பி.சி.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு பீலாகி படங்கள் இருக்கும். கேமராவை வைத்துக் கொண்டு உருப்படியான விஷயங்கள் செய்வது சிலரே. பலருக்கும் கேமராவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாது என்பது தான் நிதர்சனம். இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம், இணையம் நம்மிடையே நீக்கமற நிறைந்திருக்கிறது. பிற தொடர்பு சாதனங்களுக்கு இல்லாத இணையத்திற்கு மட்டுமே பிரத்யேகமான ஒரு விஷயம் ஹைபர்லிங்க். ஒரு சுட்டியினைத் தட்டினால், அது அந்த சுட்டிக் காட்டும் இன்னொரு பக்கத்திற்கோ, தளத்திற்கோ, ஆடியோ/வீடியோ சமாச்சாரத்திற்கோ நம்மை கொண்டு செல்லும். இணையத்தின் மிகமுக்கியமான அடிப்படையிது. இது வேறெந்த கம்யுனிகேஷன் தொடர்புகளில் இல்லை. ஆனால், இந்த ஹைபர்லிங்கிற்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. அந்த சுட்டியானது, இணையத்தில் இருக்கும் இன்னொரு பக்கத்திற்கு மட்டுமே கொண்டு செல்லும். டிஜிட்டலைத் தாண்டி வராது. இது இன்னொரு பக்கம்.

நீல்கிரிஸில் பொருள் வாங்கினால், ஒவ்வொரு பொருளுக்கு பின்னும் கருப்பு வெள்ளையில் சின்னதாய் செங்குத்தாய், நீளநீளமாய் கோடுகள் இருக்கும். அது பார் கோட். பில்கவுண்டரில் இருக்கும் பெண், ஒரு சின்ன பார் கோட் ரீடரை வைத்து, அந்த கறுப்பு வெள்ளைக் கோடுகளை ஸ்கேன் செய்தால், அந்தப் பொருளுக்கான விலை நேரடியாய் கணினியில் வந்துவிடும். இந்தியாவில், பார் கோட் அறிமுகம் என்பது 10-12 வருடங்களுக்கு முன்புதான். இது சில்லறை வர்த்தகம், சேவைகள், லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் அபாரமாக பயன்படுகிறது. பெங்களூரில் மின்கட்டண பில், பார்கோடோடு வருகிறது. ஆங்காங்கே இருக்கும் கியாஸ்குகளில், இந்த பார்கோடினை ரீடரின் கீழ் வைத்தால் போதும், அதுவே பில் தொகையை திரையில் காட்டுகிறது. நோடெடுத்து நொட்டவேண்டியதுதான் வேலை. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை.

பார்கோட் என்பது ஒற்றை பரிமாண விஷயம். பாரக்ஸ் சாப்பிடும் குழந்தையளவு தகவல்களை மட்டுமே அதில் நிரப்ப முடியும். பார் கோடில் மொத்தமே 12 பட்டைகள். அதிலும் முதலிரண்டு/மூன்று இலக்கங்கள் நாட்டை குறிக்கும். அடுத்த 4 இலக்கங்கள் அதன் உற்பத்தி சார்ந்த விவரங்களைத் தரும். நாட்டின் இலக்கங்கள் மூன்றானால், இந்த விவரம் நான்கிலிருந்து, மூன்றாய் குறையும். பார்கோட் என்பது இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், எம்.கே.டி – பி.யு. சின்னப்பா காலத்து சமாச்சாரம்.


இந்த நேரத்தில் தான் QR அறிமுகமானது. 1994-ல் டொயோட்டாவின் துணை நிறுவனமான டென்சோ-வேவ் (Denso-Wave), QRரை அறிமுகப்படுத்தியது. QR Code = Quick Response Code. மொபைல் பாஷையில் `மொபைல் டேகிங்` (Mobile Tagging). ஒரு வெள்ளை சதுரம், அதன் மேல் கறுப்பு சதுரங்கள். இது தான் அடிப்படை. செங்குத்தாகவும், தட்டையாகவும், இரட்டை பரிமாணத்தில் இதை ஸ்கேன் செய்யமுடியும். பார் கோடின் சேமிப்பு எல்லைகளை விட பன்மடங்கு பெரியது. பார்ப்பதற்கு கரப்பான்பூச்சி காலில் பெயிண்ட் அடித்து, பேப்பரில் ஒடவிட்டது மாதிரி தெரிந்தாலும், இந்த மாடர்ன் ஆர்ட் சதுரங்களில் தான் பிரபஞ்சத்தின் பல பொருட்களின் ஜாதகம் அடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் ஜப்பானில், QR வாகன உற்பத்தியின்போது உதிரிப்பாகங்களின் நடமாட்டங்களை கண்டறியதான் பயன்பட்டது. ஆனால், எப்போது செல்பேசியில் கேமராக்கள் சல்லிசாக மாற ஆரம்பித்ததோ, அங்கே ஆரம்பித்தது யுகப்புரட்சி :) QR கோடில் எல்லா மாதிரியான தகவல்களையும் தெரிய வைக்கலாம். உங்கள் விசிடிங் கார்டில் ஆரம்பித்து, ஆபர்கள், குறுஞ்செய்திகள், இணையத்தள உரல்கள், மடல் முகவரிகள், குட்டியாய் கதை கூட சொல்லலாம். இப்போது நாம் கட்டுரையில் முன் பார்த்த போஸ்டர் இடத்திற்கு மீண்டும் போவோம்.

அந்த போஸ்டரில் ஒரு ஒரத்தில் QR கோடு இருந்தால் போதும். கேமரா செல்பேசி வழியாக பார்த்தால், விவரங்கள் தெரியும். ஒரு கிளிக்கில், விவரங்கள் உள்ளே. ஜப்பானில் QR கிறுக்கு தலைக்கு ஏறி உணவுவிடுதிகளில், மெனுக்களில் கூட QR கோட்கள் பார்க்கலாம். பில்போர்ட்கள், பஸ்களின் பின்புறம், நாளிதழ்கள், ஐடி கார்டுகள், ஸ்டிக்கர்கள் என சகல இடங்களிலும் க/வெ சதுரங்கள் கண்சிமிட்டுகின்றன. இன்றைக்கு கிடைக்கும் பெரும்பாலான கேமரா செல்பேசிகள், QR ரீடர்களுடன் வருகின்றன. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இது உள்ளேயே இருக்கிறது. ஐபோனில் நேரடியாக இல்லையென்றாலும், பல இலவச மென்பொருட்கள் கிடைக்கின்றன. நோக்கியா, ப்ளாக்பெர்ரி இயங்குதளங்களிலும் இது இலவசமாக உள்ளிருக்கிறது.

சந்தை பொருளாதாரத்தில், QR கோட்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கும். அடுத்த முறை ஏதாவது ஒரு மால் போனீர்களேயானால், அங்கே தொங்கும் படுதாக்களில், போஸ்டர்களில், ப்ளையர்களில் இதைப் பார்க்கலாம். இந்தியாவில் இன்னும் இது வெகுஜன ரீதியில் பரவலாகவில்லை. ஆனால் வந்து விடும். எல்லாம் சரி, இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
இணையத்தின் சிறப்பு எது? ஹைப்பர் லிங்க். நிகழ் உலகின் பொருட்களின் மீதான ஹைப்பர்லிங்க் தான் QR கோட். எந்தப் பொருளையும், விஷயத்தையும், சுருக்கமாய் ஒரு கறுப்பு வெள்ளை சதுரத்தில் அடக்கிவிடலாம். அவ்வளவு ஏன், உங்கள் பெயர், முகவரி, அடிப்பட்டால் யாரை அழைக்கவேண்டும் என்கிற வரைக்குமான விவரங்களை ஒரு க/வெ சதுரத்தில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.

பார் கோடிற்கும், QR கோடிற்குமான வித்தியாசம் என்பது பாரக்ஸிற்கும், ரெட் புல்லிற்குமான வித்தியாசம். QR கோடில் இவ்வளவு தகவல்களை சேமிக்கலாம்
  • எண்கள் மட்டும் – அதிகப்பட்சமாய் 7,089 எழுத்துகள்
  • எண்கள்+சொற்கள் – அதிகப்பட்சமாய் 4,296 எழுத்துகள்
  • பைனரி டேட்டா (8 பிட்கள்) – அதிகப்பட்சமாய் 2,953 பைட்டுகள்
இந்த QR கோடிற்கும் ஒரு ஜுனியர் இருக்கிறார். அது மைக்ரோ QR. அதில் அதிகப்பட்சமாய 30 எண்களாலான எழுத்துக்களை சேமிக்கமுடியும். எந்தளவிற்கு தவறுதல்கள் நிகழாமல் இருக்கும், எந்தமாதிரியான லைட்டிங்கில் எடுத்தால் இது விளங்கும்/விளங்காது, ரீட் – சாலமன் எரர் கரெக்‌ஷன் (Reed -Solomon Error Correction) மாதிரியான டெக்னிகல் சமாச்சாரங்களை கூகிளிட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

4,296 எழுத்துகள் என்பது 30 ட்வீட்களுக்கு சமம். சகலமும் செய்ய முடியும். 30 ட்வீட்களில், தமிழில் ஒரு சண்டையே போட்டு முடிவுக்கு வரமுடியும். பயன்பாடு என்றுப் பார்த்தால், பல விஷயங்களை பரவலாக்க முடியும். QR Code என்பது இலவசமே. இது ISO தர நிர்ணயத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால், பிற்காலத்தில் வரும் சாதனங்களை இதை தன்னகத்தே கொண்டு வரும். தொழில் முனைவோர்கள், இதை சரியாக புரிந்து, பயன்படுத்திக் கொண்டால், வீச்சும் சேல்ஸும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இணைய முகவரிக் கொடுத்து வாடிக்கையாளன் அந்த சிரமத்தையும் மேற்கொண்டு செய்திகளைத் தெரிந்துக் கொள்வதற்குப் பதில், QR கோட் இண்ஸ்ட்ண்ட் சட்னி, ஊறுகாய், தொக்கு மாதிரி. உடனடியாக விவரங்கள் தெரிந்து விடும். மாறி வரக்கூடிய தகவல்சார் உலகில், வாடிக்கையாளனை எவ்வளவு மினிமம் தொந்தரவில் வாங்க வைக்க முடியுமோ, அது மட்டுமே வெல்லக்கூடியதாக அமையும். அந்த வெற்றிக்கு, QR கோடும் துணைபுரியும்.

இந்தியாவில் ஏற்கனவே இதற்கான ஆரம்பங்கள் ஜோராக இருக்கின்றன. லக்‌ஷுரி ரீடெயிலில் QR ஏற்கனவே வந்து விட்டது. ப்ளாக்பெர்ரியின் விளம்பரங்களில் QR tag கள் இருக்கின்றன. நம் ரூபாய் நோட்டில் இருக்கும் 13 மொழிகளிலும் ஒரு செய்தியை சொல்ல வேண்டுமெனில், ஒரு படிவத்தில் எப்படி சொல்லமுடியும்? QR கோட் வைத்து, 13 மொழிக்கும், மொழிக்கொன்றாக ஒரு சதுரம் போட்டால் போதும். செல்பேசி சொல்லிவிடும். நீங்கள் ஐநாக்ஸில் டிக்கெட் வாங்க வேண்டும். ஆன்லைனில் பதிந்து விட்டால், QR கோட் ஒரு எம்.எம்.எஸ்ஸா வந்து விழும். கவுண்டரில் சதுரம் காட்டி, செவ்வகத் திரை நோக்கி நகரலாம். கொஞ்சம் யோசித்தால், அரசுக்கான பல செய்திகள், தகவல்கள், கையேடுகளை பல்வேறு மொழிகளுக்கான சதுரத்தோடு இணைத்தாலே, சாரே ஜஹான் சே அச்சா பாடலாம். இன்னும் ஒரு படி விரிவாய் சிந்தித்தால், இந்தியில் இருக்கும் ஒரு சதுரத்தை எடுத்து, அதை ஒரு செர்வர் வழியாக அனுப்பி, கேமரா சொந்தகாரரின் மொழிக்கு அதை மொழிப் பெயர்த்து அனுப்பலாம். பொருட்களின் மீதான QR கோட்களில் அதன் சாதக பாதகங்கள், பயன்பாடுகளைப் பொதித்து வைக்கலாம். விசிடி/டிவிடி அட்டை சதுரத்திலிருந்து படத்தின் கருவை தெரிந்துக் கொண்டு இது திராபையா, இல்லை பார்க்கலாமா என்று முடிவெடுத்து விட்டு டொரண்டலாம். சாத்தியங்கள் ஏராளம். இந்திய மொழிகளில் QR கோட் பயன்படுத்துதல் பற்றி தெரிந்துக் கொள்ள, மைமொபைல்போனுக்கு போங்கள்.

இந்தியா மாதிரியான நாட்டில், செல்பேசி வழியாக கொடுக்கப்படும் சேவைகள் மட்டுமே, வெகுஜனச் சந்தையினை சென்றடையும் என்பது தெளிவு.QR கோட், ஜிபிஎஸ், மெய்நீட்சி (Augmented Reality), RFID மாதிரியான நுட்பங்களை யார் ஒருசேர இணைத்து, செல்பேசி வழியாகவே எல்லாவிதமான தகவல்களைப் பரிமாறும் கட்டமைப்பை உருவாக்குகிறார்களோ, அந்த நிறுவனம் தான் அடுத்த ஐபிஎம், மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகிள் என்று சூடமேற்றி அணைத்து சத்தியம் செய்யலாம். நுட்பரீதியான தெரிதல்/தெளிதல் இருந்தால் இதை சீரியஸாக சிந்தியுங்கள்.


பின்குறிப்பு:
QR காமிக் என்கிற வெப் காமிக்ஸின் முதல் போணி, ஐசக் அஸிமோவின் சிறுகதை The Last Question 28 QR சதுரங்களாக இணையத்தில் கிடைக்கிறது. இதைப் பார்த்த பேயோன், தன் அடுத்த புத்தகத்தை முழுமையாக QRல் தான் வெளியிடப் போகிறாராம்.

கருத்துரையிடுக Disqus

 
Top