நீலகிரி மாவட்டத்தில் நடந்த கோடை விழாவில், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு கோப்பைகளில், தமிழக அரசு முத்திரை பதித்த, "ஸ்டிக்கரில்' தேசிய கொடி தலைகீழாக அச்சிடப்பட்டு இருந்தது.நீலகிரி மாவட்டத்தில், கோடை விழா நடந்து வருகிறது. சிறந்த மலர், பழத்தோட்டம், காய்கறி, பழங்கள் சேகரிப்பு என, கோடை விழா அரங்கில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டன.சிறந்த காட்சி அரங்கு அமைத்திருந்தவர்கள் உட்பட, தனியார் பள்ளி, கல்லூரி, வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிறந்த மலர், பழத் தோட்டங்களுக்கும், கோடை விழா நிகழ்ச்சிகளில், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசு கோப்பைகளை பெற்றனர்.

பரிசு கோப்பையின் முகப்பில், "தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும்' என்ற வாசகம் அடங்கிய, மாநில அரசின் முத்திரை சின்னம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த தேசிய கொடியின் படம், தலைகீழாக இருந்தது. இது, கோப்பைகளை வாங்கியோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.போட்டியாளர்கள் சிலர் கூறுகையில், "காலம் முழுக்க, பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டிய இக்கோப்பைகளில், இத்தவறு நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என்றனர்.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம், கோப்பைகளை தயாரிக்கும், "கான்ட்ராக்ட்' வழங்கப்பட்டது; இந்த தவறுக்கு அவர்களே பொறுப்பு' என்றனர்.
 
Top