0
பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்க பெரும் அளவில் மின்சக்தி தேவையில்லை. ஆனால், நடைமுறையில் நாம் மிக அதிகமாகவே, தேவைக்கு அதிகமாகவே, மின்சக்தியைப் பயன்படுத்துகிறோம். பொதுவாக, கேம்ஸ் விளையாட்டிற்கான கிராபிக்ஸ் கார்ட் கொண்ட கம்ப்யூட்டர்கள் அதிகமாக மின் சக்தியைப்பயன்படுத்தும். தற்போது இதனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படும் கம்ப்யூட்டர்களில் இந்த அம்சத்தைக் காணலாம்.


பழைய பெர்சனல் கம்ப்யூட்டர்கள், தற்போதைய கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் குறைவாகவே மின் சக்தியைப் பயன்படுத்தி வந்ததை, பல ஆண்டுகளாக, இரண்டிலும் பழக்கப்பட்டவர்கள் அறிவார்கள். புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கும் போது, குறைவான மின்சக்தி பயன்படுத்தும் ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர்களைத் தேர்ந்தெடுத்தால், இந்த சிக்கலிலிருந்து தப்பிக்கலாம். மேலும் சில அமைப்புகளை நிலை நிறுத்துவதன் மூலம், மின் சக்தியை நாம் குறைவாகப் பயன்படுத்தலாம். அவற்றை இங்கு பார்க்கலாம். 




ஸ்கிரீன் சேவர்கள் வேண்டாமே:

 தற்போதைய கம்ப்யூட்டர்களில் ஸ்கிரீன் சேவர்கள் என்னும் அமைப்பு தேவையே இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த கம்ப்யூட்டர்களில் இவை தேவையாய் இருந்தான. ஆனால், இப்போது நாம் விரும்பும் படங்கள், அனிமேஷன் கிராபிக்ஸ் படங்கள் கொண்ட ஸ்கிரீன் சேவர்களை நாம் அமைக்கிறோம். ஸ்கிரீன் சேவர்களின் பயன்பாடு  என்னவென்று தெரியாமலேயே இந்தப் பழக்கம் நம்மிடையே தொடர்கிறது. ஸ்கிரீன் சேவர் என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் செயல்படாமல் இருக்கும்போது, இது ஸ்கிரீனை காலியாகக் காட்டும் அல்லது நகரும் படங்களைக் காட்டும். 


முன்பு கதோட் ரே ட்யூப் (CRT) கொண்ட மானிட்டர்களைப் பயன்படுத்தி வந்தோம். அதில் காட்டப்படும் இமேஜ், மானிட்டர் திரையின் மீதான பாஸ்பர் என்னும் வேதியல் பொருளை எரித்துவிடாமல் இருக்க இது பயன்பட்டது. ஒரே இமேஜ் மீண்டும் மீண்டும் ஸ்கேன் செய்யப்படுவதனைத் தடுக்க இந்த ஸ்கிரீன் சேவர் இமேஜ் பைல்கள் இயக்கப்பட்டன. அதன் பின் வந்த கதோட் ட்ரே ட்யூப் மானிட்டர்களில், இந்த தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு, அதற்கான தேவை இல்லாமல் இருந்தது. இருப்பினும், காலப் போக்கில் பொழுது போக்கிற்காக இந்த ஸ்கிரீன் சேவர் காட்சிகள், நகரும் படங்கள் அமைப்பது வழக்கமாகிவிட்டது. கம்ப்யூட்டரில் வேலை இல்லாமல் இருக்கும்போது, திரையில், நமக்குப் பிடித்த படங்கள், அல்லது நகரும் மீன்கள், ஓடும் சிறிய ஓடைகள் எனப் பலவகையான ஸ்கிரீன் சேவர்கள், ஆயிரக் கணக்கில், இணையத்தில் இன்று தரப்படுகின்றன. நாமும் பயன்படுத்தி வருகிறோம். இதனால், மின்சக்தி தேவையின்றி பயன்படுத்தப்படுகிறது. 


தற்போதைய மானிட்டர்களில் இதற்கான தேவையே இல்லை. எனவே, ஸ்கிரீன் சேவர்களைப் பயன்படுத்துவதை நாம் தவிர்த்தால், மின்சக்தி பயன்படுத்துவது குறையும். இப்போது மவுஸை அல்லது ஏதேனும் ஒரு கீயைத் தொட்டால் போதும்; முன்பிருந்த ஸ்கிரீன் காட்சி நமக்குக் காட்டப்படுகிறது. இதில் கூடுதலாக மின்சக்தி செலவாவதில்லை. விண்டோஸ் இயக்கத்தில், டிஸ்பிளேயை, அது எந்த அசைவும் இல்லாமல் இருக்கையில், இயக்காமல் வைத்திட வழிகள் தரப்பட்டுள்ளன. எத்தனை நிமிடம் அசைவற்று இருந்தால், அவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை நாம் செட் அப் செய்து வைத்துக் கொள்ளலாம்.



ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்: 


கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அதை அப்படியே விட்டுவிட்டு, வெகு நேரம் தள்ளி இருப்பது சரியல்ல. அதற்காக, அதனை ஒவ்வொரு முறையும் ஷட் டவுண் செய்திட வேண்டும் என்பதும் தேவையில்லை. இது தேவையற்ற இயக்க நேரம் மற்றும் நாம் பயன்படுத்திய செயலிகள் மற்றும் கோப்புகளைத் திறப்பதில் சிரமத்தைத் தரும். 
இதற்குப் பதிலாக, நம் கம்ப்யூட்டரைத் தூங்க (sleep) வைக்கலாம்; அல்லது அசைவற்ற நிலையில் வைத்தல் (hibernate) போன்ற நிலைகளுக்குக் கொண்டு செல்லலாம். ஸ்டார்ட் மெனு சென்று, ஷட் டவுண் செய்வதற்குப் பதிலாக இந்த நிலைகளில், கம்ப்யூட்டரை ஓய்வெடுக்கச் செய்திடலாம். 



ஷட் டவுணுக்கான பட்டன் தரும் பட்டியலில், மேலே சொன்ன தூங்க மற்றும் அசைவற்ற நிலையில் வைத்திடுவதற்கான ஆப்ஷன்களும் தரப்பட்டிருக்கும். தூங்க வைக்கும் நிலையில், உங்கள் கம்ப்யூட்டர் கிட்டத்தட்ட எந்த மின்சக்தியையும் பயன்படுத்தாது. மீண்டும் இயக்குகையில், நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைத்து புரோகிராம்கள் மற்றும் டெஸ்க்டாப் காட்சிகளுடன் ஓரிரு விநாடியில் மீண்டும் வந்துவிடும். அசையாத நிலையில் (hibernation mode) சிறிது கூட மின்சக்தி பயன்படுத்தப்படுவதில்லை. தூங்கும் நிலையில் கம்ப்யூட்டர் மீண்டும் பெறும் நேரத்தைக் காட்டிலும், சற்று சில நொடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்டு, இந்த நிலையிலிருந்து கம்ப்யூட்டர் உயிர்த்தெழும். 


நீங்கள் வெகுநேரம் மேற்கொள்ளக் கூடிய சில பணிகளை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, பெரிய அளவிலான பைல்களைத் தரவிறக்கம் செய்திடலாம். இது போன்ற பணிகளை மேற்கொள்கையில், குறைவான மின் சக்தியைப் பயன்படுத்தவென, இணைய தளங்கள் பல வழிகளைத் தருகின்றன. எடுத்துக் காட்டாக BitTorrent செயலி இது போன்ற வழிகளை நமக்கு அறிவுறுத்தும். அதனை மேற்கொள்ளலாம். தரவிறக்கம் செய்து முடித்தவுடன், தானாகவே, கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்து கொள்ளும் வகையில் செட் அப் அமைக்கலாம்.



எஸ்.எஸ்.டி. ட்ரைவிற்கு மாறிக் கொள்க: 


உங்களுடைய கம்ப்யூட்டர் இன்னும் பழைய மெக்கானிகல் ட்ரைவினைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதனை மிக வேகமாக நிலைத்து இயங்கும் சாலிட் ஸ்டேட் ட்ரைவாக மாற்றிக் கொள்ளலாம். இது பழைய  மெக்கானிகல் ட்ரைவினைக் காட்டிலும், தான் இயங்கக் குறைவான மின் சக்தியினையே பயன்படுத்தும். 



வழக்கமான நடைமுறைகள்: 

லேப்டாப் கம்ப்யூட்டரில், அதன் பேட்டரி வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என்பதற்காக, நாம் பல வழிகளைக் கையாள்கிறோம். அவை அனைத்தையும் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரிலும் மேற்கொள்ளலாம்.



விண்டோஸ் இயக்க வழிகள்: 


விண்டோஸ் இயக்கமே, தானாகவே, மின்சக்தி மிச்சப்படுத்தும் பல வழிகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் வேலை எதுவும் இல்லாத நிலையில், அதன் சி.பி.யு.வினை, மிகக் குறைவான வேகத்தில் செயல்படச் செய்கிறது. அதே நேரத்தில், மற்ற மின்சக்தி சேமிக்கும் வழிகளையும் மேற்கொள்கிறது. ஹார்ட் ட்ரைவினைக் கூடத் தூங்கச் செய்திடும் வழிகளைக் கையாளும். நாமும், மின்சக்தி மிச்சப்படுத்தும் திட்டங்களை (power-saving settings) கண்ட்ரோல் பேனலில் உள்ள Power Options என்ற பிரிவில் அமைக்கலாம். 



துணை சாதனங்கள் நீக்கம்


நாம் கம்ப்யூட்டருடன் பல துணை சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். இவை பயன்படுத்தப் படவில்லை என்றால், இவற்றை மின்சக்தி இணைப்பிலிருந்து நீக்கலாம். எடுத்துக் காட்டாக, நாம் பிரிண்டரை எப்போதும் பயன்படுத்துவது இல்லை. எனவே, அச்செடுக்கும் நிலை ஏற்பட்டால் ஒழிய, மற்ற நேரங்களில், மின்சக்தியை மிச்சப்படுத்தும் வகையில், அதன் இணைப்பியைக் கழட்டி வைத்திருப்பது நல்லது.



குறைந்த சக்தியைப் பயன்படுத்தும் ஹார்ட்வேர்: 


நம் கம்ப்யூட்டரில் குறைந்த சக்தியைப் பயன்படுத்தும் ஹார்ட்வேர் எனத் தனியே எதுவுமில்லை. ஆனால், நாம் கம்ப்யூட்டர் நமக்கென வாங்குகையில், நம் தேவைகளுக்கேற்ற ஹார்ட்வேர் உள்ள கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. கிராபிக்ஸ் பணிகள் எதுவும் மேற்கொள்ளாத நிலையில், அதிக சக்தி உள்ள கிராபிக்ஸ் கார்ட் உள்ள கம்ப்யூட்டர் தேவை இல்லை. NVIDIA அல்லது AMD போன்ற நிறுவனங்கள் வழங்கும், அதி வேக கிராபிக்ஸ் கார்ட்கள் அனைவருக்கும் தேவை இல்லை. நமக்கு வழங்கப்படும் கம்ப்யூட்டரின் மதர் போர்டிலேயே, கிராபிக்ஸ் பணிகளுக்கான கார்ட்கள் இணைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலானவர்களுக்கு அதுவே போதுமானது. சில கம்ப்யூட்டர்கள் “low-wattage” மற்றும் “low-power” என்றே குறிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கும். இவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்குவதும் நல்லது.



மின்சக்தி அளக்க புரோகிராம்கள்:

நம் கம்ப்யூட்டர் எவ்வளவுதான் மின்சக்தியைப் பயன்படுத்துகிறது என்று அறிந்து கொள்ள நீங்கள் ஆவலாக உள்ளீர்களா? இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். அல்லது Kill-a-Watt போன்ற சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top