0



வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை  வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது. 



சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், எல்லோராலும் அது முடிகிறதா? லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே  நன்றாகத் தெரிகிறது.

சிறு வயதில் வேலையின்றி அலைந்தபோது ‘‘மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா’’ என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது. ஆறு மாதம்தான் அது நிம்மதி. ‘‘மாதம் ஐம்பது ரூபாய்  கிடைக்காதா?’’ என்று மனம் ஏங்கிற்று. அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரிகையில். பிறகு மாதம் நூறு ரூபாயை மனம் அவாவிற்று. அதுவும் கிடைத்தது.  மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. 

ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும்  போலிருக்கிறது! எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை. ‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகிற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்? அதுதான் இறைவன் லீலை! ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.

குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய்விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே, தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத்  தூண்டிவிடுகிறான். ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம். மண்ணாசை! பொன்னாசை! பெண்ணாசை! மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது. பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது. பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது. இந்த மூன்றில் ஒரு  ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய்  சந்நியாசி ஆவதல்ல!

‘‘இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்’’ என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றவாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது. சிறைச்சாலைகளில் இருந்து கொண்டு, அவன் ‘‘முருகா, முருகா!’’ என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது. அதனால்தான் ‘‘பரம் பொருள் மீது பற்று வை; நிலையற்ற பொருட்களின் மீது ஆசை வராது’’ என்கிறது இந்துமதம்.

‘‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’’

- என்கிறது திருக்குறள். ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலை தண்ணீர் போல்’ என்று போதித்தது இந்து மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால், அதில் லாபமும் குறைவு, பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய்  கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப்  பணமாகத் தெரியாது. இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு  கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது. ‘‘எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்; வருவது மனதை நிறைய வைக்கிறது’’ என்பதே இந்துக்கள் தத்துவம். எவ்வளவு  அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்? லட்சக்கணக்கான ரூபாய் சொத்துகளைப் பெற்றவன் மேலும் ஓர்  ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால் ஓடுகிறானே, ஏன்?

அது ஆசை போட்ட சாலை. அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்; அப்போது அவனுக்குத் தெய்வ ஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே தெய்வத்தைக் கண்டுகொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மதத் தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது. இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.

அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம், இந்து மதம். உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூசச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்குமம்’ வைக்கச் சொல்கிறது.‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலை குனிந்து’ நடக்கச் சொல்கிறது. யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதைத் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மூடிக் கொள்கிறார்களே, ஏன்? ஏற்கெனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே. ஏன்?

எந்தவொரு ‘கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டி விடக்கூடாது என்பதால். ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது. கோயிலிலே தெய்வதரிசனம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீனனுக்கு, அவள் சிரித்து விட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. ‘‘பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு’’ என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்து மதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின. இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்;  ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப் போன பின்புதான், அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்துமதம் என்பது வெறும் ‘சாமியார் மடம்’ என்ற எண்ணம் விலகிவிடும். நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள, உன் தாய் வடிவில் துணை வருவது இந்து மதம். ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன  கூறுகிறார்? ‘‘ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்’’ என்கிறார். ‘‘அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி கொடிகளையும்  வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால், அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.’’ ‘‘அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.’’ ‘‘விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது’’ என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம். நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.

துன்பம்- ஒரு சோதனை

வெள்ளம் பெருகும் நதிகளும் ஒரு முறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அழிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

முதற்கட்டம் வரவு என்றால், அடுத்த கட்டம் செலவு.
முதற்கட்டம் வறுமை என்றால், அடுத்த கட்டம் செல்வம்.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்த கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம்.
இறைவனது தராசில் இரண்டு தட்டுகளும் ஏறி ஏறி இறங்குகின்றன.

‘‘இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்’’

- என்றான் வள்ளுவன். எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை. அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை. பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது. இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரரானார் ஒருவர். ஆன மறுநாளே, அவரை ‘அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்! சீனாவில் மாசே-துங் புரட்சி  நடந்தபோது பல ஆண்டுகள் காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக் கொண்டு அலையக்கூட வல்லமை பெற்றிருந்தார். புரட்சி முடிந்து, பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார். ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான். புரட்சி நடக்கும்வரை லெனின்  ஆரோக்கியமாகவே இருந்தார். பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.

எனது அரசியல் நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாகவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலைக்குப் போவார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது. அவர்கள் பதவிக்கு வந்து  நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டு விட்டது. எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார். முதற்படமே அபார வெற்றி. அளவு கடந்த லாபம். அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழ முடியவில்லை. 
இன்னொரு பட அதிபர்... ஊமைப்படக் காலத்திலிருந்து  தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பல படங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரமப்பட்டு சென்னைக்கு வந்து ஒரு படம் எடுத்தார். அவரது ‘வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அந்தப் படம் அமோகமாக ஓடியது.

ஒரு புது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்று. அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அது முதல் அவர் தொட்டதெல்லாம் வெற்றி. பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள். ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி! ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. 
இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை. நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப  வேண்டாம். எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள். எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.

‘‘ஒன்றை நினைக்கின் அது
ஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்
தும் - ஒன்றை
நினையாது முன்வந்து
நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்’’

-என்பது முன்னோர் பழமொழி.

‘‘கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக்
காஞ்சிரங்காய் ஈந்தேன்
முற்பருவத்தில் செய்தவினை’’

-இதுவும் அவர்கள் சொன்னதே. உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின்பக்கம் விழுந்தால் அவனது சோதனை. மேடும் பள்ளமுமாக வாழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை. ஒரேடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்து  பயங்கரமான சரிவு காத்திருக்கிறது. என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால், என் எழுத்து வண்டி இருபத்தைத்தாண்டு காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் ‘‘சகடயோகம்’’ என்பார்கள். வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே! ‘அடுத்த பாதை என்ன, பயணம் என்ன’ என்பது, உனக்குத் தெரியாது; ‘‘எல்லாம் தெய்வத்தின் செயல்’’ என்றார்கள் நம் முன்னோர்கள். ‘ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன்  சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன. தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!

அதனால் வந்த வினைதானே, சீதை சிறையெடுக்கப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்! சத்தியதெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவில்லையே! அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்! முக்காலமும் உணர்ந்த கௌதமனுக்கே, பொய்க் கோழி எது, உண்மைக் கோழி எது என்று தெரியவில்லையே! அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும். ஆம், இறைவனின் சோதனை எவனையும்  விடாது என்பதற்கு, இந்தக் கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள். துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைகள் என்றும், அவற்றுக்காகக் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே  அவர்கள் இதை எழுதி வைத்தார்கள். இந்தக் கதைகளை ‘‘முட்டாள்தனமானவை’’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.

ஆனால், முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள் அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதில்லை. நான் சொல்ல வருவது, ‘இந்து மதத்தின் சாரமே உனது லெளகிக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது’ என்பதையே. துன்பத்தை சோதனை என்று ஏற்றுக் கொண்டுவிட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது? அந்த சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும்படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும். தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்களல்ல. கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய். தெய்வநம்பிக்கை உன்னைக் கைவிடாது.

கருத்துரையிடுக Disqus

 
Top