0
Image result for புத்தாண்டு

புதிது என்றாலே உற்சாகம்தான், புது உடை, புது உறவுகள், என புதிது கிடைத்தாலே உற்சாகம் அடைகிறது மனம். அதுபோலத்தான் 12 மாதங்கள் முடிந்து புதிதாய் ஒரு ஆண்டு பிறக்க தொடங்கினாலே அனைவருமே அதை கொண்டாட தொடங்கிவிடுகின்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் ஜனவரி 1ம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களுக்காவது உறவினர்கள், நண்பர்களிடையே புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் வரலாறு புத்தாண்டு கொண்டாடும் பழக்கம் எப்படி வந்தது என்பதை சற்றே பின்னோக்கினால் மெசபடோமியாவில் தான், முதன் முதலில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிறது. பாபிலோனில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

கிமு 46, ஜனவரி 1 – ஜுலியன் காலண்டர் நடைமுறைக்கு வந்த தினம் அன்று நியூ இயர் என்று கொண்டாடி வருகிறோம்.  உலகிலேயே முதன்முறையாக கிரேக்கர்கள்தான் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில் இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன.

கி.மு.700ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் இந்த காலண்டர் முறையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக (11,12வது மாதங்கள்) இருந்தன.

கி.மு.46ல் ரோமானிய பேரரசர் ஜுலியஸ் சீசர் இந்த காலண்டர் முறையில் மேலும் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்களாக ஆக்கினார். இது ஜுலியன் காலண்டர் என்றழைக்கப்பட்டது.  இதில்தான் சாதா ஆண்டு மற்றும் லீப் ஆண்டு என்ற முறைகளை கொண்டு வந்தார்கள்.

ஜனவரி 1ஆம் நாள் கிரிகோரியன் (Gregorian) நாட்காட்டியின் முதல்நாள். கிரிகோரியன் நாட்காட்டியானது உலகளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஜனவரி 1 ஐ ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டம் முதன்முதலாக மெசபடோமியா (ஈராக்) நாட்டில் கி.மு. 2000 இல் தோன்றியது.

ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர். உலக முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம். நாட்டிற்கிடையே எந்த போரும், பொறாமையும் இன்றி வாழ வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 1 ஆம் தேதியை உலக நாடுகள் புத்தாண்டாக கொண்டாடுகின்றன. ஆனால் இந்த தேதி தவிர்த்தும் பல தேதிகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஜனவரி 1 – க்ரிகரியன் காலண்டர்படி ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 14 – ஜுலியன் காலண்டர்படி புத்தாண்டு. இந்த காலண்டர் ஜார்ஜியா, ரஷ்யா, மாசிடோனியா, செர்பியா மற்றும் உக்ரைனில் உள்ள சர்ச்சுகள் பின்பற்றுகின்றன.

சீன புத்தாண்டு – வசந்த காலம் பிறக்க 4 முதல் 8 வாரம் இருக்கையில் சீன புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் ஒரு மிருகத்தின் பெயரை வைத்து அழைப்பார்கள். சீனர்களுக்கு இது தான் முக்கிய கொண்டாட்டம். இந்த புத்தாண்டு பெரும்பாலும் க்ரிகரியன் காலண்டர்படி ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 21ம் தேதிக்குள் பிறக்கும்.

வியட்நாமியர்கள் புத்தாண்டு – அவர்களின் புத்தாண்டு பெரும்பாலும் சீனப் புத்தாண்டு தினத்தன்று தான் கொண்டாடப்படுகிறது.

திபெத்திய புத்தாண்டு- லோசர் என்று அழைக்கப்படும் திபெத்திய புத்தாண்டு ஜனவரியில் இருந்து மார்ச் மாதத்திற்குள் கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14ம் தேதி அதாவது தமிழ் மாதமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

மார்ச் 14ம் தேதி – சீக்கிய புத்தாண்டு

ஈரானியப் புத்தாண்டு- நவ்ரஸ் என்று அழைக்கப்படும் ஈரானியப் புத்தாண்டு மார்ச் மாதம் 20 அல்லது 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.

உகாதி – உகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு புத்தாண்டு சித்திரை மாதத்தில் அதாவது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆந்திர மக்களுக்கு இது முக்கிய கொண்டாட்டமாகும்.

குடி பட்வா- மகாராஷ்டிர மாநிலத்தவர்கள் மார்ச் 23ம் தேதி அன்று குடி பட்வா என்று அழைக்கப்படும் மராத்திய புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

உகாதி – கன்னட வருடப்பிறப்பு. இந்து காலண்டர்படி சித்திர மாதத்தின் முதல் நாள் கர்நாடகத்தில் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

நேப்பாளத்தில் புத்தாண்டு- ஏப்ரல் மாதம் 12 முதல் 15ம் தேதிக்குள் நோபாலிப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. பைசக் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

அஸ்ஸாமி புத்தாண்டு – ஏப்ரல் 14-15 தேதியில் கொண்டாடப்படுகிறது.

வங்காள புத்தாண்டு- பொய்சக்கின் முதல் நாள் அதாவது ஏப்ரல் 14-15 தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் வங்காள புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஒரியா புத்தாண்டு – ஒரிசா மாநில மக்கள் ஏப்ரல் 14ம் தேதி அன்று விஷுவ சங்கராந்தி என்று அழைக்கப்படும் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

விஷு- கேரள மாநில மக்கள் ஏப்ரல் 14ம் தேதி அன்று விஷு அதாவது புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

மார்வாரி புத்தாண்டு- தீபாவளி பண்டிகையன்று மார்வாரி புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

குஜராத்தி புத்தாண்டு- தீபாவளி பண்டிக்கைக்கு அடுத்த நாளன்று குஜராத்தி புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

முஹர்ரம்- இஸ்லாமியக் காலண்டர்படி முஹர்ரம் மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

கருத்துரையிடுக Disqus

 
Top