- போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் டென்ஷன்.
- காலையில் விழித்ததும் வீட்டு வேலைக்கு வேலைக்காரி வரவில்லையானால் டென்ஷன்.
- சீரியல் பார்க்கும் நேரம் மின்சாரம் தடைபட்டால் டென்ஷன்.
- தனக்கு பின்னால் வந்தவனுக்கு பதவி உயர்வு கிடைத்துவிட்டால் டென்ஷன்.
- ஏன் கூப்பிட்ட குரலுக்கு நாய்க்குட்டி வரவில்லையானால் கூட டென்ஷன்.
எங்கும், எப்போதும், எதற்கும் பதற்றம் என்பதால் இப்போது சிறுவர்- சிறுமியர்கள்கூட டென்ஷன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
வீடு, அலுவலகம், வீதி, பஸ், ஆட்டோ என்று எல்லா இடங்களிலும் பதற்றம், மனிதனை துரத்துகிறது. இதிலிருந்து விடுபட வழியே இல்லையா?
- இருக்கிறது. ஆனால் சிந்தித்து பார்க்க நேரம் இருந்தால்தானே இந்த டென்ஷன் எப்படியெல்லாம் நம் மனதையும், உடலையும் பாதிக்கிறது என்பதை தெரிந்து, அதிலிருந்து விடுபட முடியும்.
எந்த ஒரு வேலையையும் அவசர அவசரமாக செய்தால்தான் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் பலருக்கும் வந்துவிட்டது. அதனால் வேகப்பட்டு, பதற்றம் அடைகிறார்கள், அதன் விளைவுதான் டென்ஷன்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்கூட சிறு வயது முதலே எல்லாவற்றையும் அவசரமாக செய்ய பழகிக்கொள்கின்றன. அதனால் பயணம், படிப்பு, விளையாட்டு, சாப்பாடு எல்லாவற்றிலும் சிறுவர், சிறுமியர்களையும் டென்ஷன் சூழ்ந்துகொள்கிறது. அதே டென்ஷனுடன் அவர்கள் வளரும்போது, அவர்களோடு சேர்ந்து டென்ஷனும் வளர்கிறது. அது அவர்களது மனதையும், உடலையும் பாதிக்கிறது.
சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடத்தக்கது அமைதி, சாந்தம், சவுந்தர்யம் என்பார்கள். ஆனால் இன்றைய பெண்களிடம் அந்த லட்சணம் இருக்கிறதா என்று தேடித்தான் பார்க்கவேண்டும். அமைதியான மனநிலை இருந்தால்தான் ஆன்மா மகிழ்ச்சி அடையும். தன்னைத்தானே உணரும் ஆற்றல் ஒருவருக்கு உருவாகவேண்டும் என்றால் அவர் முதலில் அமைதியாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும். மூளை அமைதியான நேரத்தில் ஆக்கபூர்வமாக செயல்படுகிறது. நம் வாழ்க்கையை வடிவமைக்கவும், நல்ல செயல்களை செய்யவும், சிந்திக்கவும் நமக்கு அறிவின் உதவி தேவை. அமைதியான சூழலில்தான் அறிவு செயல்படுகிறது.
அமைதியின் எதிரியான டென்ஷன் நமக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் ஏற்படுத்துகிறது தெரியுமா?
தலைவலி, ரத்த அழுத்தம், அஜீரணம் மற்றும் இதர வயிற்று பிரச்சினைகள், மனக்குழப்பம் போன்றவை தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும்.
டென்ஷனும், கோபமும் உடன்பிறவா சகோதரர்கள். எப்போதும் சேர்ந்தே வருவார்கள். இருவரும் சேர்ந்து வந்து விட்டால் நம் வாழ்க்கையை சின்னாபின்னமாகி குழப்பத்தின் எல்லைக்கே நம்மை கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். பிறகு ஏது நிம்மதி?
டென்ஷன் இல்லாமல் வாழ்வது சிரமம் என்று நினைப்பவர்கள்கூட எளிதாக அதனை கட்டுப்படுத்தலாம். எப்படி?
வீடு, அலுவலகம் எங்கே என்றாலும் வேலைகளை திட்டமிட்டு செயல்படுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்யுங்கள்.
காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்பு நின்று கொண்டு `இன்று முழுவதும் நான் அமைதியாக செயல்படுவேன்’ என்று திரும்பத் திரும்ப கூறி, அதை உங்கள் ஆழ்மனதில் பதிவு செய்யுங்கள்.
எங்கே, என்ன பிரச்சினை என்றாலும் அங்கே போய் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். மற்றவர்களை குறை சொல்வதையும் தவிர்த்திடுங்கள். மற்றவர்களை நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டாலே, உங்கள் டென்ஷனில் பாதி குறைந்துவிடும்.
டென்ஷன், பிரச்சினைகளை அதிகமாக்குமே தவிர அதை குறைக்க உதவி செய்யாது.
டென்ஷன் தேவையற்ற வார்த்தைகளை பேச வைத்து உங்கள் எதிரில் உள்ளவர்களை உங்களுக்கு பகைவர்கள் ஆக்கி விடும். உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, மூளை நரம்புகளை பாதித்து உங்கள் இயக்கத்திற்கே தடை போட்டுவிடும். நாளடைவில் இது பக்கவாதமாக மாறும்தன்மை கொண்டது.
டென்ஷன் ஏற்படும்போது கண்களை மூடி மூச்சை இழுத்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து சில முறை செய்தால் டென்ஷன் குறையும். இதன் மூலம் நீங்கள் இயல்பு நிலைக்கு வரலாம்.
“ஓம்” என்ற சொல் உங்கள் டென்ஷனை குறைக்க உதவும். இந்த உலகமும், நம் உடலில் உள்ள உயிர் அணுக்களும் ஓம் என்ற ஒலியின் மைய நாதத்தில்தான் இயங்குகிறது என்பது மக்களின் அனுபவபூர்வ நம்பிக்கை. நமக்கு டென்ஷன் ஏற்படும்போது அந்த இயக்கம் எதிர்மறையாகிறது. அதனை சீர் செய்ய சில நிமிடங்கள் கண்களை மூடி, புருவ மையத்தில் கவனத்தை செலுத்தி ஓம், ஓம் என்று திரும்ப, திரும்ப சொல்லவேண்டும். அப்போது நம் உடல் இயக்க அணுக்கள் இயல்பான இயக்கத்திற்கு திரும்பும். முயற்சித்து பாருங்கள். இதற்கும், மதரீதியான ஆன்மிகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கருத்துரையிடுக Facebook Disqus