Latest News

நீங்கள் ரே ஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது [கம்பியூட்டர் எல்லாம் பார்க்கிறீங்க, நீங்க எங்கே வாங்கியிருக்கப் போறீங்க..........!!] ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் கலனின் மேல் கடைக்காரர் ஒரு பெரிய புனலை வைப்பார், அதில் மண்ணெண்ணெயை ஊற்றுவார்.  அது வடியும்போது சுழன்று கொண்டே இறங்கும்!!  நீங்கள் இந்தியாவில் வசித்தால் அது வலஞ்சுழியாக [கடிகார முள் சுற்றும் திசை Clockwise] சுற்றிக் கொண்டே இறங்குவதைப் பார்க்கலாம்.  பாத்திரம் கழுவும் தொட்டிகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றிலும் அடியில் துளையிட்டு நீரை நிரப்பி நிதானமான பின்னர் திறந்துவிட்டால் கூட நீர் வலஞ்சுழியாகவே சுற்றுவதைப் பார்க்க முடியும்.  இது ஏதோ தண்ணீர் மூலக்கூறுகளுக்கிடையே ஆரம்பத்தில் உள்ள வேக வேறுபாட்டால் ஏற்படுகிறது என்று நினைத்து, நீரை நிரப்பி மூன்று நாட்கள் ஆடாமல் அசையாமல் வைத்து திறந்து பார்த்திருக்கிறார்கள், அப்பவும் அது வலஞ்சுழியாகவே சுற்றியது!!  காரணம் என்ன?
பூமியை இரண்டாகப் பிரிக்கும் பூமத்திய ரேகைக்கு வட திசையில் உள்ள எல்ல பகுதிகளிலும் மேற்சொன்ன சோதனையில்  வலஞ்சுழியாகவும், தெற்குப் பகுதியில் உள்ள பகுதிகளில் இடஞ்சுழியாகவும் மிகச் சரியாக பூமத்திய ரேகையில் எந்தப் பக்கமும் சுழலாமலும் நீர் கீழே இறங்கும்.  இந்த விளைவைக்காண பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்து சில அடி தூரம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சென்றாலே போதும். இதை பின்வரும் காணொளியில் காணலாம்.


இது எதனால் நிகழ்கிறது?  பூமி தனக்கென்று ஒரு அச்சில் தன்னைத் தானே சுழல்கிறதல்லவா?   அதற்க்கு 24 மணி நேரமும் ஆகிறது என நமக்குத் தெரியும்.  பூமத்திய ரேகையில் அதன் சுற்றளவு அதிகம், அப்படியே வடக்காகவோ தெற்காகவோகாகவோ துருவப் பகுதிகளை நோக்கி செல்லும்போது இந்தச் சுற்றளவு குறைந்து கொண்டே சென்று துருவத்தில் பூஜ்ஜியமாகிறது.  ஆனால் பூமியைப் பொறுத்தவரை ஒரு சுற்றை சுற்றி முடிக்க எல்லா வட்டத்துக்கும் அதே 24 மணி நேரம்தான் பிடிக்கும். 
பூமத்திய ரேகையிலிருந்து மேலேயோ [வட துருவம்], கீழேயோ [தென் துருவம்] 20,40,80 டிகிரி என செல்லச் செல்ல வட்டம் சிறிதாகிக் கொண்டே போகிறது.


ராட்டினங்கள் சுற்றும் போது வெளியே உள்ள பொம்மைகள் வேகமாகவும், உள்ளே செல்லச் செல்ல மெதுவாகவும் சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள்.  அதே மாதிரி அதிக சுற்றளவுள்ள பூமத்திய ரேகைப் பகுதியில் ஒரு பொருள் இருந்தால்  அதி வேகமாகவும், அதிலிருந்து  விலகிச் செல்ல செல்ல இடத்துக்கு தக்காவாறு குறைந்த வேகத்திலும் பயணிக்கும். துருவப் பகுதிக்குப் போய்விட்டால் ராட்டினத்தின் குடை மேல் வைக்கப் பட்ட பொம்மை மாதிரி தன்னைத் தானே சுற்ற வேண்டியதுதான்!!
துருவங்களை நோக்கி நகரும்போது வேகமான பயணிக்கும் இடத்தில் இருந்து குறைந்த வேகப் பகுதிக்கு செல்வதால் உங்கள் பாதை நேர்க்கோடாக இருக்காது. பூமத்திய ரேகையில் இருந்து வடபாதியில், எங்கிருந்து வேண்டுமானாலும் வட துருவத்தை நோக்கிச் சென்றால் வலப்புறமாகவும், தென் பாதியில் எங்கிருந்து தென் துருவத்தை நோக்கிச் சென்றாலும் இடப்புறமாகவும் உங்கள் பாதை வளையும் 

நீங்கள் பூமத்திய ரேகை பகுதியில் இருந்து வட பகுதியில் இருப்பதாகக் கொள்வோம். நீங்கள் பூமியின் சுழற்சி காரணமாக ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பீர்கள், அப்படியே காற்றில் எழும்பி மேலும் வடக்கு நோக்கிச் செல்வதாகக் கொள்வோம்.  வடக்கே செல்லச் செல்ல வேகம் குறைவு, வேகமான வண்டி மெதுவான வண்டியை முந்திச் செல்வது போல நீங்கள் பூமி சுற்றும் திசையில் சற்று முந்திச் செல்வீர்கள், எனவே நீங்கள் நேர்க்கோட்டில் பயணிக்க முயற்ச்சித்தாலும் வலதுபக்கம் நகர்ந்துவிடுவீர்கள்.  அதே போல அதே பகுதியில் எதிர் திசையில் வந்தால் இடது புறம் திருப்பப் படுவீர்கள்.  இதே விளைவுதான் நீங்கள் புனலில் ஊற்றப்படும் மண்ணெண்ணெயிலும் வலஞ்சுழியாக திரவம் சுற்றுவதாகப் பார்க்கிறீர்கள்.  மிதக்கும் நீர் மூலக்கூறுகள் புனலில் வடக்கு நோக்கி நகர்ந்தால் வலது புறமாகவும், வடக்கே இருந்து தெற்கு நோக்கி நகர்ந்தால் இடது புறமாகவும் திரும்பும், மொத்தத்தில் வலஞ்சுழியாக சுற்றிக் கொண்டே வடியும்.  நிலநடுக் கோட்டில் இருந்து தென்பகுதியில் இதே காரணத்தால் இடஞ்சுழியாகச் சுழன்ற வண்ணம் வடியும்.  நடுக்கோட்டி ப்ச்........ எந்தப் பக்கமும் சுழலாது!!
 
Top