வளசரவாக்கம் காவல் நிலையத்தில், அப்பாவி போல் உட்கார்ந்து இருந்தவரிடம் உரையாடிய போது, புழல் சிறையில் இருக்கும் செடிகள் எல்லாம் தன்னை பார்க்காமல் எப்படி இருக்கிறதோ என, கவலைப்பட்டார்.
அவருடன் பேசியதிலிருந்து...
எதற்காக காவல் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?
திருட்டு பயல போலீசு புடுச்சா, காவல் நிலையம் தான் கதி.
உங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லையே...
உங்க வீட்டில் சைக்கிள் இருக்கா, அது காணாமல் போனா நான் யாருன்னு உங்களுக்கு தெரிந்துவிடும்.
சைக்கிள் மட்டும் தான் திருடுவீர்களா?
மத்த பயலுக மாதிரி, பெரிய, பெரிய சமாச்சாரமெல்லாம் நமக்குத் தெரியாது; அது தேவையும் இல்லை. வீட்டுக்கு முன்னாடி பித்தளை பாத்திரம், இரும்புச் சட்டி, சைக்கிள திருடி விற்கிறதுக்குள்ள நான் படுறபாடு உங்களுக்குத் தெரியாது.
திருடுவது தவறு என்று தெரியவில்லையா?
சின்ன வயதில் இருந்து திருடுவதால் தவறு என்று தோணவில்லை. ஆரம்பத்துல பயமாத்தான் இருந்தது. இப்ப பழகிப்போச்சு...
எத்தனை வயதில் இருந்து...
விருகம்பாக்கம் ஏரி கரைதான் நான் பிறந்து வளர்ந்தது. படிப்பு ஏறல. பத்து வயசுல திருட ஆரம்பிச்சேன். இப்ப நாற்பது ஆகுது. திருடிக்கொண்டே இருக்கிறேன்.
வேலைக்கு போகக்கூடாதா?
நல்லா இருக்கே உங்க கேள்வி. என்ன பற்றி கேள்விபட்ட யாராவது வேலை கொடுப்பாங்களா? தினமும் குடிக்க வேண்டும். அதற்காக திருடுகிறேன்.
குடிப்பழக்கம் திருடனாக்கி விட்டது என்கிறீர்களா?
என் வாழ்வில் பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். உங்க காலில் விழுந்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். யாரும் குடிக்காதீங்க. சின்ன வயசுல நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்தேன். அதன் பின் 24 மணி நேரமும் போதையில்தான் இருப்பேன். யாருகிட்டேயும் சண்டைக்கு போகமாட்டேன். வாயில் இருந்து வரும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. குடிக்கு அடிமையானதால், மனைவி பிரிந்து விட்டாள். அந்த சோகமும் வாட்டி வதைக்க, மேலும் குடிக்க ஆரம்பித்தேன். வயிறு பட்டினி கிடந்தாலும், மண்டைக்குள்ள போதை இருக்கணும். குடிக்க கையில் காசு இருக்காது. ஆனால், குடிக்க வேண்டும்; என்ன செய்வது. அதனால், திருட ஆரம்பிதேன்.
முதல் திருட்டு அனுபவத்தை சொல்லுங்கள்...
விருகம்பாக்கத்தில், சைக்கிளில் ஒருவர் வேலைக்கு சென்று வருவார். அவர் எங்கெல்லாம் போகிறார். சைக்கிளை எந்த இடத்தில் நிறுத்துகிறார் என்பதை தொடர்ந்து நோட்டமிட்டேன். அவர் கண்ணயர்ந்த சமயம் பார்த்து திருடி விட்டேன். குடிகாரனாக இருந்தவன் திருடனாகி விட்டேனே என, நினைத்து அன்று இரவு தூக்கமே வரவில்லை. சைக்கிள் விற்ற காசு தீர்ந்து போனதும், மீண்டும், மீண்டும் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தேன். ஒரு நாள் போலீசில் மாட்டிக் கொண்டேன்.
சிறைக்கு சென்ற அனுபவம்?
சிறைக்கு போவதும், வருவதுமே வாழ்க்கையாகிப் போனது. மத்திய சிறையில் காலடி எடுத்து வைத்தபோது, அடிப்பார்களோ என, பயமாகத்தான் இருந்தது. பெரிய, பெரிய ரவுடிகள் இருப்பார்கள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு உதைபடப் போகிறோம் என்று தான் நினைத்தேன். மத்திய சிறை கொடுமையானது தான், சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல்சொர்க்கம். மணியடிச்சா சாப்பாடு, வாரத்தில் ஒரு நாள் கோழிக்கறி, உள்ளேயே கால்பந்து விளையாட்டு என, பொழுது போகும். சிறை அதிகாரிகள் அன்பானவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாகி விட்டவர்களை திருத்தும் மிக அற்புதமான இடம் அது.சிறை ரவுடிகள் பற்றி சொல்லுங்கள்பன்னீர்செல்வம் ரொம்ப "ஜாலி'யான ஆளு. அதனால ஆடச்சொல்லி, பாடச்சொல்லி கேட்பாங்க. சிறைக்குள் தனிமையில் அழுகிற ரவுடிகளை பார்த்து இருக்கிறேன். அவுங்களுக்கு பயம் அதிகம். அதனால் தான் கத்தியை மூன்றாவது கைபோல் பாவித்து வரு கிறார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவுன்னு அவுங்களுக்கும் தெரிகிறது.
அங்கு என்னவெல்லாம் கிடைக்கிறது?
பெண்ணைத் தவிர எல்லாம் கிடைக்கும். கட்டு கட்டா துட்டு செலவு செய்தால், சகலவிதமான வசதிகளுடன் இருக்கலாம்.
இரண்டு பீடி கட்டுகள் தானே சிறைக்குள் அனுமதி?
மனுவுல வருபவர்கள் இரண்டு பீடி கட்டு தான் கொண்டு வர வேண்டும். என்னைப் போன்று இருப்பவர்களுக்கு துண்டு பீடி கூட கிடைக்காது. அதற்காக, பீடி உள்ளவர்களை சுற்றி பெரும் கூட்டம் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அவுங்க சொல்கிற வேலையெல்லாம் கேட்கணும். துணி துவைத்து தந்தால், ஒரு பீடி கொடுப்பாங்க. அந்த பீடியில், ஸ்டிக்கர் வரை குடித்தால் அரை நாள் தாங்கும். விரல் பிடிக்கும் பகுதி வரை குடித்தால் ஒரு நாள் ஓடிப்போகும். அடுத்த பீடி கிடைக்கும் வரை, துண்டு பீடியை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
கஞ்சா எப்படி வருகிறது?
அலைபேசி வழியில் வியாபாரம் முடிந்து விடுவதால், சிறைக்கு பின்புறத்தில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருப்பவர்கள், ரப்பர் பந்தை சிறைக்குள் வீசுவார்கள். அதில் இருக்கும் கஞ்சா பொட்டலத்தில், இது இன்னாருக்கு என்பதற்கான அடையாளம் இருக்கும். அதை வேறு யாரும் எடுக்க மாட்டார்கள். சிறை கண்காணிப்பாளரிடம் மாட்டிக்கொண்டால், தனிமை சிறையில், போட்டு விடுவார்கள். சாப்பிடுவது, மலம் கழிப்பது எல்லாமே அங்கே தான். அந்த சிறைக்கு மட்டும் போகவே கூடாது.
"சிம்' கார்டெல்லாம் வைத்திருப்பார்களா?
கழிப்பறை பீங்கானை அடியில் அறுத்து, அதில் சிம்கார்டு பதுக்கி வைத்திருப்பார்கள், அலைபேசி இருக்கும் இடம் யாருக்குமே தெரியாது. சிறை வாசிகள் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள். தலையில் கை வைத்தால், வீட்டுக்கு பேச வேண்டும் என, அர்த்தம். அதன்படி அலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடுகள் நடக்கும்.
சிறையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது சொர்க்கம். மணியடிச்சா சோறு, வாரம் தோறும் சிக்கன். உடல் நிலை சரியில்லை என்றால், பேருந்து பிடித்து மருத்துவரைத் தேடி அலைய வேண்டியதுஇல்லை. அங்கேயே மருத்துவ மனை இருக்கிறது. மனமும், உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
வெளியில் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
வெளியில் இருப்பது பிடிக்கவே இல்லை. எந்த சைக்கிளை பார்த்தாலும், திருடலாமா என்று தான் நினைக்க தோன்றுகிறது. அழுக்குபடிந்த ஆடையுடன் அலைய வேண்டியுள்ளது. சிறையில் அப்படி அல்ல. தும்பை பூ போல் தூசி படியாமல் இருக்கலாம். திருந்துவதற்கு சிறை மிகவும் அற்புதமான இடம்.
திருந்த மனம் இல்லையா?
போலீசு மனது வைத்தால், சிறைக்குள் போய் விடுவேன். நான் வளர்த்த செடிகள் எல்லாம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.