Latest News

 

வழமையாக அவுட்டேர் ஷூட்டிங்குக்காக லண்டனில் சுற்றிக்கொண்டிருக்கும் நம்ம தமிழ் சினிமா டைரக்டர்கள் யாராவது லண்டனுக்கு வந்திருந்தால், அற்புதமான காட்சி ஒன்றை செலவில்லாமல் படம்பிடித்திருக்கலாம். பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் பக்கிங்ஹாம் அரண்மனை பற்றி எரியும் காட்சிதான் அது.


எரிக்கப்பட்டது நிஜ பக்கிங்ஹாம் அரண்மனை அல்ல. ஆனால், அச்சு அசலான அதன் நகல்.

எட்வர்ட் ஹெராத் என்பவரால் 5 மாத முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்ட நகல் பக்கிங்ஹாம் அரண்மனையை அவர் எரித்ததை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். கீழேயுள்ள போட்டோவில் அரண்மனை எரிவதை பார்த்துவிட்டு, அடுத்த போட்டோவுக்கு வாருங்கள், பின்னணி என்ன என்று பார்க்கலாம்.



63 வயதான எட்வர்ட் ஹெராத் இந்த நகல் அரண்மனையை உருவாக்கியதே எரிப்பதற்காகதான். 1000 மரப்பலகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட செட் இது. நிஜ அரண்மனையின் வெளிப்புறத்தில் என்னவெல்லாம் உள்ளனவோ, மிக நுணுக்கமாக அனைத்தும் இந்த அரண்மனை செட்டிலும் அமைக்கப்பட்டிருந்தன.



அரண்மனை செட்டில், பக்கிங்ஹாம் அரண்மனையின் மிக பிரபலமான முன் கேட்டுகள், யூனியன் ஜாக் கொடி, ஆகியவை அப்படியே அமைக்கப்பட்டிருந்தன.  பக்கிங்ஹாம் அரண்மனையின் மிக பிரபலமான முன் கேட்டுகளின் முன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளாத டூரிஸ்டுகள் குறைவு!





அத்துடன், அரண்மனையின் பால்கனியின் அச்சு அசலான பால்கனியையும் கொண்டிருந்தது இந்த செட். இந்த பால்கனியில்தான் இளவரசர் வில்லியமும் கேத்தியும் திருமணமானபின், முதல் தடவையாக முத்தமிட்டுக் கொண்டார்கள். பிரிட்டிஷ் அரச குடும்ப நிகழ்வுகளில், அவர்கள் மக்கள்முன் தோன்றும் இடம், இந்த பால்கனிதான்!




எட்வர்ட் ஹெராத் இதற்குமுன், பிரிட்டனின் வெம்ப்ளி ஸ்டேடியம், அமெரிக்க வெள்ளை மாளிகை ஆகியவற்றின் நகல்களையும் உருவாக்கி எரித்த அனுபவம் உடையவர். இந்த எரிப்புகளை அவர் செய்வது, நல்ல காரியங்களுக்காக நிதி திரட்டுவதற்காக! பக்கிங்ஹாம் அரண்மனையை நகலாக உருவாக்கி எரிக்கப் போகும் தகவலை ஒரு கடிதத்தில் பிரிட்டிஷ் அரசிக்கு எழுதி, அனுப்பி அனுமதி கோரியிருந்தார் அவர்.




 தாம் எழுதிய கடிதத்துக்கு பிரிட்டிஷ் அரசியிடம் இருந்து பதில் வந்தபோது, திகைத்துப் போனார், எட்வர்ட் ஹெராத். நல்ல நோக்கத்துக்காக செய்யப்படும் காரியம் என்ற முறையில், பிரிட்டிஷ் அரசியின் அனுமதி அவருக்கு கிடைத்திருந்தது.  பக்கிங்ஹாம் அரண்மனையின் செயலாலரே பதில் அனுப்பியிருந்தார். நல்ல காரியங்களை செய்ய நிதி திரட்ட இப்படியான காரியங்களை செய்வது குறித்து அரசி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

 

அரண்மனை செட் முழுமையானபின் அதை எரிப்பதற்கான தேதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என குறிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் லோக்கல் மீடியாக்களில் வெளியாகி இருந்ததால், அரண்மனை செட் எரிக்கப்படுவதை காண ஆயிரக்கணக்கானோர் ஆர்வமாக இருந்தனர். இந்த செட் போடப்பட்ட இடத்தருகே இருந்த பார் ஒன்றின் கார் பார்க்கில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.


இருள் சூழ்ந்தபின், தேசியக் கொடிக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் அகற்றப்பட்ட பின், அரண்மனை செட்டுக்கு தீ வைக்கப்பட்டது. தீ பரவி, முற்று முழுதாக அரண்மனையெங்கும் பற்றிக்கொள்ள சுமார் 1 மணி நேரம் எடுத்தது. காற்றும் வீசிக்கொண்டு இருந்ததால், ஒன்றரை மணி நேரத்தில் அரண்மனை
 எரிந்து முடிந்தது.

 

தமது 5 மாத உழைப்பில் உருவாக்கப்பட்ட அரண்மனை செட், ஒன்றரை மணி நேரத்தில் முற்றிலும் எரிந்து போனதை பார்த்துக் கொண்டிருந்தார் எட்வர்ட் ஹெராத். அரண்மனை எரிந்து முடிந்த பின்னரும், அவன் வெளி கேட்டுகள் எரிந்து முடிய மேலும் ஒரு மணி நேரம் எடுத்தது.



டிக்சி : நாம் ஏற்கனவே கூறியதுபோல, நம்ம சினிமாக்காரர்கள் யாருக்காவது விஷயம் முன்கூட்டியே தெரிந்திருந்தால், தூள் கிளப்பியிருக்கலாம் அல்லவா?

யோசித்துப் பாருங்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிரிட்டனுக்கு வந்து, பக்கிங்ஹாம் அரண்மனையை எரிக்கிறார்கள். பிரிட்டிஷ் போலீஸ், ராணுவம் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்தபடி நிற்கிறது. அந்த நேரத்தில் வந்து இறங்குகிறார் கேப்டன் விஜயகாந்த். தீவிரவாதிகளை புரட்டியெடுத்துவிட்டு, அரச குடும்பத்தை காப்பாற்றுகிறார். கையெடுத்து வணங்கும் அரச குடும்பத்தினரை நோக்கி நம்ம கேப்டன் ஆறு பக்க டயலாக் பேசினால், எப்படி சார் இருக்கும்? சே.. வடை போச்சே!


 
 
Top