தகவல் உரிமை என்பது அடிப்படையான மனித உரிமை என்று இந்திய அரசியல் சாசன சட்டத்தின் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை தெரிவிப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று அரசியல் சட்டத்தில் 19 வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதன் முன் நிறுத்தி தான் தகவல் உரிமை சட்டம் உருவாக்கப்பட்டது.

ஜனநாயக நாட்டில் மக்களுக்கு மக்களின் பிரதிநிதியாகச் செயல்படும் அரசின் நடவடிக்கைகளை அறிய உரிமை உண்டு என்ற நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனநாயகம் பலப்படுவதின் முக்கிய அம்சமாக அரசு நிர்வாகத்தின் எந்தவொரு துறையிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமை இப்போது சட்டமாகியுள்ளது.

பொது அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான செயல்பாட்டை உறுதி செய்தல், லஞ்சம் ஊழலை ஒழித்தல், அரசும் அதன் அங்கங்களும் மக்களிடம் பொறுப்புடன் நடக்கச் செய்தல் போன்றவை தகவல் உரிமைச்சட்டத்தின் நோக்கமாகும்.

உதாரணமாக உங்கள் பஞ்சாயத்தில் நடைபெறும் சமூகநலத்திட்டங்கள் சாலைப்பணிகள், பாலம் கட்டுதல், பொதுக்கட்டிடம் ஆகியவைகளில் ஊழல்கள் நடந்திருந்தால் இச்சட்டம் மூலம் அனைத்து தகவல்களையும் பெற்று ஊழல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்டலாம்.

தற்போது குமரி மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்தில் நடந்த சம்பவம் இது. குடியிருப்பு வீட்டுகளின் முன்பாக வடிகால் கட்டும் ஒரு பணி அப்பஞ்சாயத்தில் நடைபெற்று முடிந்தது. பொதுமக்கள் எல்லோருமே இப்பணி ரூ. 5 அல்லது 6 லட்சத்திற்குள் இருக்கலாம் என நினைத்திருந்தனர். இருப்பினும் அப்பகுதியிலுள்ள சமூக சேவகர் ஒருவர் அப்பஞ்சாயத்தில் செயல் அலுவலர் பெயருக்கு ரூ. 10/- க்கு செலான் கட்டி மேற்படி பணியின் மதிப்பீட்டை வாங்கி பார்த்ததில் அப்பணிக்கு ரூ. 10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இப்பணியில் ஈடுபட்ட பொறியாளர், ஒப்பந்தக்காரர், செயல் அலுவலர், பஞ்சாயத்துத் தலைவர், வார்டு உறுப்பினர் என அனைவரும் ரூ. 4 லட்சம் அளவுக்கு கொள்ளையடித்தது தெரியவந்தது.

இப்போது அப்பகுதி மக்கள் மேற்படியார்கள் அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு புகார் அளிப்பதற்கு தயார் ஆகி வருகின்றனர். இதைத் தெரிய வந்துள்ள மேற்படி நபர்கள் இப்போது துண்டை காணோம், துணியைக் காணோம் என்று பதறியடித்து இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இச்சட்டத்தை பயன்படுத்தி ஊழல் பேர்வழிகளை எளிதாக ஜெயிலில் அடைக்கலாம். இப்படி ஒரு சட்டம் இல்லையென்றால் மேலே குறிப்பிட்டுள்ள ஊழல்வாதிகள் அப்படியே தப்பித்துச் சென்றிருப்பர்.

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் கோருவதற்கான தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது. ஆங்கிலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தமது மாநில மொழியில் எழுத்துப் பூர்வமாக உரிய அலுவலகத்தில் பொதுத் தகவல் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம், தகவல் கேட்பதற்கான காரணத்தைக் கூற தேவையில்லை.

இதற்கு ஆகும் செலவு ரூ. 10/- மட்டுமே. விண்ணப்பத்துடன் இந்த தொகையை நேரில் பொது தகவல் அதிகாரியிடம் செலுத்தலாம். அல்லது வங்கியில் DD ஆகவோ, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அரசு கருவூலம் ஆகிய இடங்களில் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் கணக்கு தலைமையருக்கு செலுத்தலாம். வங்கியின் வரைவோலை எடுக்கும்போது துறை அலுவலகத்தின் பெயரிலும், அரசுக் கணக்கில் செலுத்தும்போது “007500 Miscellaneous General Service 800 other result receipts BK collection of fees under Tamilnadu Right to Information (fee) Commission Rule" என்றும் செலுத்த வேண்டும்.

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு. நாட்டின் பொருளாதாரம் மற்றும் அறிவியல் நலன்கள், வெளியுறவு தொடர்பான தகவல்கள், உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான தகவல்கள், நாடாளுமன்ற, சட்ட மன்றங்களின் உரிமை மீறல்களுக்கு காரணமாகும் தகவல்கள், நீதிமன்றங்களால் தடைசெய்யப்பட்ட தகவல்கள், அந்நிய அரசிடம் இருந்து பெறப்பட்ட ரகசியங்கள் இச்சட்டத்தின் கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டவை. இவை பற்றிய தகவல்கள் அளிக்கப்படமாட்டாது.

ஒவ்வொரு துறைக்கும் ஒரு பொது தகவல் அதிகாரி உண்டு. எந்த துறைக்கு விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்று தெரியாத பட்சத்தில் பொது தகவல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கோரி விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பிற்கு அனுப்பி நமக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தகவல் அதிகாரி பதிலளித்தாக வேண்டும் இல்லையேல் அவருக்கு ரூ. 250/- திலிருந்து ரூ. 25,000/- வரை தண்டம் விதிப்பதற்கும் இச்சட்டத்தின் சீழ் வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தகவல்பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் ஆட்சியை இந்நாட்டில் நிலைப்படுத்துங்கள்.
 
Top