Latest News

”அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றாதே!” என்ற போராட்டக் குரல்கள் பூமியில் இருந்து விண்ணைத் துளைக்க, எட்டிப் பார்த்தார் கடவுள். குவார்ட்டர் விலை ஏறியதற்கு எதிராகத்தான் இந்த உரிமைக் குரல்கள். ‘அப்படி என்னதான் இருக்கு?’ என்று யோசித்த கடவுளுக்குத் திடீர் என்று சரக்கு அடிக்கலாமே என்று ஆசை வந்தது.


மனித உருவத்தில் பூமியை நெருங்கியவரின் கண்களுக்குப் பச்சைப் பசேல் என்று தமிழகம் தென்பட்டது. சத்தியமா வயல்வெளி இல்லைங்க, நம்ம டாஸ்மாக் கடை பச்சை போர்டுதான் அது.

ஒரு டாஸ்மாக்கில் லேண்ட் ஆகி, அருகே சரக்கு அடித்துக்கொண்டு இருந்தவரை உற்றுப் பார்த்தவர், ”நீங்க ஓல்டு மாங்க் ஒலகநாதனா?” என்று கேட்டார். பத்து நிமிஷம் விடாமல் அழுதார் எதிரில் இருந்தவர். பிறகு, ”ஒலகநாதன் தண்ணி அடிச்சு, தண்ணி அடிச்சு ஒலகத்தை விட்டே போயிட்டான் சார். நான் மேன்சன் ஹவுஸ் மாணிக்கம்” என்றான் மே.ஹ.மா.
ஒரு குவார்ட்டரை மூணாகப் பிரிப்பதற்குள் மூன்று ஃபுல்லை ராவாகச் சாத்தினார் கடவுள். அதைப் பார்த்த மாணிக்கம் பயந்துபோய் ஒரு அடி தள்ளி அமர்ந்தான். மெள்ளக் கடவுளிடம், ”சார் யாரு சார் நீங்க?” எனத் தயங்கிய குரலில் கேட்க, அவர் ”ஊஹாஹாஹேஹே” எனக் கொடூரமாய்ச் சிரித்துவிட்டு அடுத்த இரண்டு ஃபுல்களை மடக் மடக் எனக் குடித்தார். நம்ம மேன்சன் ஹவுஸ் மாணிக்கம் அதிர்ச்சியில் உறைந்தான்.

இரண்டு அவுன்ஸ் குடித்துப் பின் பயந்துபோய் மீண்டும் கேட்டான், ”உங்களுக்குப் போதையே ஏறலியா?”. மீண்டும் கடவுளின் கொடூரச் சிரிப்பு. ‘ஆத்தாடி’ எனப் பயந்தவனுக்குப் போதையே இறங்கிவிட்டது. இருப்பினும் கையிருப்பில் இருந்த கடைசி இரண்டு அவுன்ஸைக் குடித்துவிட்டுத் தைரியம் வரவழைத்துக்கொண்டு கடவுள் அருகில் மெள்ள நகர்ந்து ”ஏன் சார் இவ்ளோ குடிச்சும் போதை ஏறலைனா, தயவு செஞ்சு நீங்க யாருனு சொல்லுங்க சார்” என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

”நான்தான்டா கடவுள்!” என்றார் கடவுள்.

”ஏய்ய்ய், இப்பத்தான்யா உனக்குப் போதை ஏறியிருக்கு. குடிய்யா குடி! அண்ணே இன்னொரு மேன்சன் ஹவுஸ் குடுண்ணே!” என்றான் மாணிக்கம்.
இப்போது கடவுளுக்குப் போதை இறங்கிவிட்டது. நம்மாளு சிரிச்சான் அதே கொடூரச் சிரிப்பை!
 
Top